அரசாங்கத்திற்குள் கொள்கை ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் உள்வீட்டு கருத்து முரண்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி இந்த இரண்டுக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து ஆரம்பத்திலிருந்தே தகவல்கள் வெளியாகின. பிரதமர் மோடியின் விஜயத்தின் பின்னர் அரசாங்கத்திற்குள் இந்த கொள்கை ரீதியான மோதல்கள் சற்று தீவிரமடைந்து வருவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை சீனாவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் மனக்கசப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
ஒப்பந்த பணம் செலுத்தாமை, இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம் போன்ற விடயங்களை முன்னிலைப்படுத்தியே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து சீன தூதுவர் இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜே.வி.பி கொள்கை குழப்பம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது பரவலாக அனைத்து விடயங்களும் ஊடகங்ளுக்கு வழங்கப்பட்டிருந்தன.
ஆனால் பிரதமர் மோடியின் வருகையுடன் அரசாங்கத்திற்குள் சில மாற்றகள் ஏற்பட்டுள்ளதை உணர முடிகிறது. அதாவது அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளே இதற்கு பிரதான காரணமாக காணப்படுகின்றது. இதற்கு முன்னரும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தோம்.
தேசிய மக்கள் சக்தியாக கூட்டணியமைத்த பின்னர் இதுவரைக் காலமும் பாதுகாத்து வந்த இடதுசாரி கொள்கைகளில் இருந்து மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) மெதுவாக விலகியுள்ளமையை காண முடிகிறது.
இருப்பினும் ஜே.வி.பியின் அடுத்த தலைவராக எதிர்பார்க்கப்படுகின்ற அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஜே.வி.பி கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து செயல்பட்டு வருகின்றார்.
இதனடிப்படையில் இந்தியா குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் நிலைப்பாடு முந்தைய ஜே.வி.பியின் கொள்கையுடன் ஒத்திசைவாக இருப்பதை அண்மைய யா. விஜயத்தின் போது அவர் தெரிவித்த கருத்துக்களில் இருந்து வெளிப்படுகின்றது.
அதேபோன்று தான் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையில் இருந்த சந்தர்ப்பங்களில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட குறிப்பிட்ட சிலர் இந்திய தரப்புகளுடனான சந்திப்புகளில் பங்கேற்றிருக்க வில்லை.
சீன தூதுவர் – ஜனாதிபதி சந்திப்பு
இவ்வாறானதொரு நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்திற்கு முன்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் சீன தூதுவர் குய் ஷென்வொங் ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இருநாட்டு உறவுகள் மற்றும் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்த திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களினால் இலங்கையில் ஏற்கனவே முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கான ஒப்பந்த கொடுப்பனவுகள் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக வழங்கப்படாது இருந்துள்ளது.
கடந்த ஆட்சியின் போது குறிப்பிட்ட தொகை நிதி பகுயளவில் குறித்த சீன நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
இருப்பினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டங்களை முன்னெடுப்பதில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த விடயத்தை சுட்டிக்காட்டி கொடுப்பனவுகளை செலுத்துமாறு அரசாங்கத்திடம் சீன தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் குறித்த திட்டங்கள் ஊடாக உள்நாட்டில் சிலர் பெரும் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளனர். எனவே அது குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெறுகின்றமையினால் இந்த சந்தர்ப்பத்தில் நிதி வழங்குவது கடினம் என அரசாங்கம் சீன தரப்புக்கு பதிலளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இனை சற்று எதிர்பார்க்காத சீனா, நிதி வழங்கப்படா விடின், உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு திட்டங்களை முன்னெடுப்பதில் நெருக்கடியான நிலைமை ஏற்படலாம் என சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் கடும் அதிருப்தி
இவ்வாறு அரசாங்கத்தின் தீர்மானங்கள் குறித்து சீனா அதிருப்தியில் உள்ள நிலையில், இந்தியாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் ஆய்வுக்கப்பல்களின் வருகைக்கு பாதகமாக அமையுமா என்பது குறித்தும் சீனா அவதானம் செலுத்தியுள்ளது.
ஏனெனில் ரணில் விக்கிரமசிங்க விதித்திருந்த தடை காலாவதியாகியுள்ள நிலையில், ஆய்வுக்கப்பலுக்கான அனுமதி குறித்து இலங்கை எவ்விதமான தீர்மானத்தையும் அறிவிக்கவில்லை.
அதேபோன்று இந்தியா தனது தேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தொடர்ந்தும் சீன ஆய்வுக்கப்பல்களின் வருகையை எதிர்த்தால் தற்போதைய அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கும் என்ற அச்சங்கள் பெய்ஜிங்கிற்கு உள்ளது.
ஆரம்பத்திலிருந்து ஒரு நம்பகமான நிலைமை ஜனாதிபதி அநுரவின் அரசாங்கம் மீது இலங்கைக்கு உள்ளதா என்றால் அது சந்தேகம் தான். எனவே சீன ஆய்வுக்கப்பல் விவகாரம் அரசாங்கத்திற்கு தலையிடியாகவே இருக்கும்.
சஜித்துக்கு நன்றி கூறிய ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு இராப்போசன விருந்தினை வழங்கியிருந்தார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்த விருந்துபச்சார நிகழ்வில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பிரதமர் மோடிக்காக வழங்கப்பட்ட விருந்துபச்சாரத்தில் சஜித் பிரேமதாசவும் பங்கேற்றிருந்தார். ஆனால் சஜித் பிரேமதாசவின் புகைப்படங்கள் எதனையும் வெளியிடாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இருப்பினும் நிகழ்வின் இறுதி வரை ஜனாதிபதி மாளிகையில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இருந்துள்ளார். இறுதியில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் ஆகியோர் சஜித் பிரேமதாசவுடன் சம்பாஷணையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கும் மாறும், ஆடை தொழிற்துறையில் ஏற்பட கூடிய நெருக்கடிகளின் போது ஏற்றுமதி அளவை அதிகரித்து ஒத்துழைக்கும் மாறும் பிரதமர் மோடியிடம் தான் கேட்டுக்கொண்டதாக ஜனாதிபதியிடம் சஜித் இதன் போது குறிப்பிட்டார். இதற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்
நாளை திங்கட்கிழமை 21 ஆம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 6 ஆண்டுகள் ஆகின்றன. இதனை மையப்படுத்தி பேராயர் இல்லம் விசேட ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தை நோக்கி பாத யாத்திரை மற்றும் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.
கர்தினால் மெல்கம் ராஞ்சித் ஆண்டகையின் விசேட அறிவிப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. அதேபோன்று அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு முன்பதாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகளை அறிவிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தயாராகி வருவதாக அரசாங்க தகவல்கள் குறிப்பிடுகின்றன. ஏனெனில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சூத்திரதாரிகளை வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது.
ஆட்சி பீடம் ஏறி 6 மாதங்கள் கடந்தும் அரசாங்கத்தின் மௌனம் பேராயர் இல்லத்தின் விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது. அத்துடன் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசாங்கத்தின் வெளிப்படுத்தல் குறித்து அனைத்து தரப்புகளும் அவதானத்துடன் உள்ளனர்.
தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை கடிதம்
தேர்தல் சட்டங்களை மீறும் அரசியல் அறிக்கைகள் வெளியிடப்படுவதை தவிர்க்குமாறு, இலங்கை தேர்தல் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதிகாரம் இல்லாத உள்ளூராட்சி மன்றங்களுக்கு நிதி வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசியல் மேடைகளில் தெரிவித்திருப்பது, தேர்தல் சட்டங்களை திட்டவட்டமாக மீறுவதாகவே கண்காணிப்பு அமைப்புகள் குற்றஞ்சாட்டுகின்றன.
குறிப்பாக, உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தின் பிரிவு 82சீ (முறையற்ற செல்வாக்கு ஏற்படுத்துதல்) மற்றும் 82டீ (அதிகபட்ச நன்மை தரும் வாக்குறுதிகள் மற்றும் பரிசுகள்) ஆகியவை இதன்மூலம் தெளிவாக மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.
ஜனாதிபதி ஒரு சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் அல்ல என்றும், நிதி ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளில் அவருக்கே இறுதியான அதிகாரம் இருப்பதால், இத்தகைய அறிக்கைகள் தேர்தலின் நியாயத்தையும் நாட்டின் நலன்களையும் பாதிக்கக்கூடியவை என கண்காணிப்பு அமைப்புகள் எச்சரிக்கின்றன.
இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளதால், இலங்கை அரசியலமைப்பின் 35(1) பிரிவின் கீழ், ஜனாதிபதிக்கு எதிரான எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியாது. எனவே, தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லியோ நிரோஷ தர்ஷன்)