பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் மொத்தம் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா மற்றும் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர்கள் மூலம் மலைப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LcT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இந்நிலையில் காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று பாகிஸ்தான் அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக பாகிஸ்தான் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், “பாகிஸ்தானுக்கு இந்த சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததில்லை, எனவே இதற்கு பாகிஸ்தானை குறை கூற வேண்டாம்.
இது அனைத்தும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இந்தியாவிற்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் என்று அழைக்கப்படுபவற்றில் புரட்சிகள் உள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல, டஜன் கணக்கானவை, நாகாலாந்து முதல் காஷ்மீர் வரை, தெற்கில், சத்தீஸ்கர், மணிப்பூரில் இந்த அணைத்து இடங்களிலும், இந்திய அரசாங்கத்திற்கு எதிரான புரட்சிகள் உள்ளன.
இந்துத்துவ சக்திகள் மக்களைச் சுரண்டுகின்றன, சிறுபான்மையினரை அடக்குகின்றன. அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இது அதற்கு எதிரான புரட்சி, இதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் அங்கு நடக்கின்றன” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்ட நிலையில், அதை பயங்கரவாதச் செயல் என்று விவரிக்கவோ, கண்டிக்கவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.