ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் சிறந்த திறமையாளர்களை கௌரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. தமிழ் சினிமாவில், தங்கள் நடிப்பு திறமைக்காக பல நடிகர்கள் பத்ம பூஷண் விருதைப் பெற்றுள்ளனர். இந்த நட்சத்திரங்கள் தங்கள் நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். இந்த மதிப்புமிக்க பத்ம பூஷண் விருதைப் பெற்ற பெருமைக்குரிய தமிழ் நடிகர்கள் யார் யார் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..

சிவாஜி கணேசன் (1984)

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1984 ஆம் ஆண்டு இந்திய அரசிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றார். அன்றைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவிலும் ஒரு தவிர்க்கவே முடியாத ஆகச்சிறந்த நடிகராக அவர் இருந்தார். தனது 50 ஆண்டுகால திரை வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் ஹீரோவாகவே 250 படங்களில் நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன் தான். முன்னதாக, அவர் 1966 இல் பத்மஸ்ரீ விருதையும் பின்னர் 1997 இல் தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார்.

ரஜினிகாந்த் (2000)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 2000 ஆம் ஆண்டில் பத்ம பூஷண் விருது பெற்றார். ரஜினியின் தனித்துவமான நடிப்புத் திறமையையும் கலாச்சார நிலப்பரப்பில் அவர் கொண்டிருந்த செல்வாக்கையும் அங்கீகரித்தது. 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம விபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது. இந்திய சினிமாவுக்கு அவர் செய்த பங்களிப்புகளுக்காக, திரைப்படத் துறையில் மிக உயர்ந்த இந்திய விருதான தாதாசாகேப் பால்கே விருது 2019 இல் வழங்கப்பட்டது. இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக நடிகர் ரஜினிகாந்த் வலம் வருகிறார். தனது 72வது வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிசியான நடிகராக வலம் வருகிறார். அவர் தற்போது கூலி, ஜெயிலர் 2 படங்களில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் (2014)

உலக நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் கமல்ஹாசன் 2014 இல் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். இது இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகும். 1990 இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆகச்சிறந்த நடிகர் என்பதை தாண்டி, இயக்குனர், பாடகர், கவிஞர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக திறமைக் கொண்ட நடிகராக வலம் வரும் கமல்ஹாசன் இதுவரை 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது கமல் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

விஜயகாந்த் (2024)

தமிழ் சினிமாவில் சிறந்து விளங்கியதற்காக விஜயகாந்துக்கு 2024 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அவர் டிசம்பர் 28, 2023 அன்று காலமானார். அவரது மனைவி பிரேமலதா இந்த விருதைப் பெற்றார். தனது 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் விஜய்காந்த் 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அஜித் குமார் (2025)

ஏப்ரல் 28, 2025 அன்று அஜித் குமார் பத்ம பூஷண் விருதைப் பெற்றார். கலை மற்றும் திரைப்பட உலகிற்கு அவர் ஆற்றிய நீண்டகால பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த விருதை வழங்கினார். ஜனவரி 2025 இல் அஜித் விருது பெற்றவர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அஜித் சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார்.

ஷோபனா (2025)

திரைப்படங்கள் மற்றும் பரதநாட்டியத்தில் தனது பணிக்காக அறியப்பட்ட ஷோபனாவுக்கு ஜனவரி 2025 இல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. முன்னதாக 2006இல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஷோபனா 2 முறை தேசிய விருது வென்றவரும் ஆவார். நடிப்பைத் தவிர, சென்னையில் உள்ள கலார்பனா என்ற நடனப் பள்ளியை அவர் நடத்தி வருகிறார்..

தனது 40 ஆண்டுகால திரை வாழ்க்கையில் நடிகை ஷோபனா 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என பல மொழிகளில் அவர் நடித்துள்ளார். 80,90 களில் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வந்த ஷோபனா அன்றை காலக்கட்டத்தில் தென்னிந்திய சினிமாவின் ஆகச்சிறந்த நடிகைகளில் ஒருவராகவும் விளங்கினார்.

Share.
Leave A Reply