பாரசீக வளைகுடாவை, ‘அரேபிய வளைகுடா’ என ட்ரம்ப் பெயர் மாற்றம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

அதிரடி காட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், உள்நாடு தவிர்த்து உலக நாடுகளையும் நாள்தோறும் அச்சுறுத்தி வருகிறார்.

குடியேற்றக் கொள்கை, வரிவிதிப்பு, பாஸ்போர்ட் கெடுபிடி, நிதியுதவி நிறுத்தம், ஊழியர்கள் குறைப்பு, கனடா, கிரீன்லாந்து, காஸா உள்ளிட்ட நாடுகளை அமெரிக்காவுக்குள் கொண்டுவர திட்டம் எனப் பல அதிரடி நடவடிக்கைகள் அவற்றுள் அடக்கம். தவிர, மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா எனவும் மாற்றினார்.

இதுதவிர, வேறு புதிய அறிவிப்புகளையும் நடவடிக்கைகளையும் அமெரிக்காவில் அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

பாரசீக வளைகுடா’ பெயரை மாற்றும் ட்ரம்ப்

இந்த நிலையில், பாரசீக வளைகுடாவை, ‘அரேபிய வளைகுடா’ என ட்ரம்ப் பெயர் மாற்றம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்திய கிழக்கு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு, மே 13 முதல் 16 வரை அதிபர் ட்ரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

அப்போது இதுகுறித்த முடிவு எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, ​​”வளைகுடா விவாதம் குறித்து எனக்கு ஒரு விளக்கம் அளிக்கப்படும். அதன்பின்னரே நான் ஒரு முடிவை எடுப்பேன்.

இதில், யாருடைய உணர்வுகளையும் நான் புண்படுத்த விரும்பவில்லை. எனினும், அப்போதும் உணர்வுகள் புண்படுத்தப்படுமா என்று எனக்குத் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

பெயர் மாற்றத்தை எதிர்க்கும் ஈரான்

இந்தப் பதில் இணையத்தில் வைரலான நிலையில், அதற்கு ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது. ”அமெரிக்காவின் எந்தவொரு நடவடிக்கையும் ஈரான் மற்றும் அதன் மக்கள் மீதான விரோத நோக்கத்தைக் குறிக்கும்” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி எனத் தெரிவித்துள்ள அவர்,

“இந்தச் செயல், அனைத்து தரப்பு ஈரானியர்களின் கோபத்தையும் ஏற்படுத்தும்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், “பெர்சியான் வளைகுடா என்ற பெயர் பல நூற்றாண்டுகள் பழமையானது மற்றும் அனைத்து வரைபடவியலாளர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை @realdonaldtrump அறிந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

பெர்சியாவிலிருந்து உருவான பாரசீக வளைகுடா

ஈரான் இதற்குக் கோபப்படுவதற்கான காரணத்தையும் இங்கு அறிவோம். ஈரானின் முந்தைய பெயர், பெர்சியா என்பது ஆகும்.

அதனால் அந்தப் பெயரை ஈரான் விடத் தயாரில்லை. 1935ஆம் ஆண்டு, அப்போது ஈரானின் ஷாவாக இருந்த ரெசா ஷா பஹ்லவி, ‘பெர்சியா’ என்பது வெளியாட்களால் வழங்கப்பட்ட ஒரு புறப்பெயர் என்று கருதியதை அடுத்து, அதை மாற்றி ’ஈரான்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நாடு மட்டுமல்ல, பெர்சியாவில் வாழ்ந்த மக்களும்கூட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பார்சிகள் என்று அழைக்கப்பட்டனர்.

‘பார்ஸ்’ என்ற வார்த்தையிலிருந்து இந்தப் பெயர் உருவானது. இந்தப் பெயர் பல நூற்றாண்டுகளாக பதிவு செய்யப்பட்ட வரலாற்றின் ஒரு பகுதியாகும். அதன்படி, இந்த பெர்சியாவிலிருந்து உருவானதே, பாரசீக வளைகுடா ஆகும்.

அரபு நாடுகளின் அரேபிய வளைகுடா

எனினும், இந்தப் பெயருக்கு அப்போது முதலே சில அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அவைகள், அரேபியா என்று அழைக்கப்பட வேண்டும் என நீண்டநாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றன.

அதற்கான நீண்ட வரலாற்றையும் அந்நாடுகள் கொண்டுள்ளன. குறிப்பாக, பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய அனைத்து நாடுகளும் நீர்நிலையைக் கொண்டிருக்கின்றன. இதில் ஈரானைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ‘அரேபிய வளைகுடா’ அல்லது ‘வளைகுடா’ என்ற பெயர்களைப் பயன்படுத்துகின்றன.

மறுபுறம் பல தசாப்தங்களாக, தெஹ்ரான் கிட்டத்தட்ட அனைத்து அரபு நாடுகளுடனும் இந்தப் பெயருக்காகப் போட்டியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு, ஈராக் பிராந்தியத்தின் முதன்மை கால்பந்து போட்டியை ‘அரேபிய வளைகுடா கோப்பை’ என்று பெயரிட்டது.

இந்தச் செயல் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. தெஹ்ரான், ஈராக் தூதரை அழைத்து முறையான எதிர்ப்பை பதிவு செய்தது. அடுத்து, கூகுள் மேப்ஸ் மற்றும் கூகுள் எர்த் ஆகியவற்றில் நீர்நிலையைப் பெயரிடாமல் விட்டதற்காக ஈரான் 2012ஆம் ஆண்டு கூகுள் மீது வழக்குத் தொடர்ந்தது.

இன்றுவரை, கூகுள் அதை இரண்டு பெயர்களிலும் – ‘பாரசீக வளைகுடா (அரேபிய வளைகுடா)’ என்று பெயரிட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, அதன் பெயரை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஈரானுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் ட்ரம்ப், இதர அரபு நாடுகளுக்காக அந்தப் பெயரை மாற்றவும் வாய்ப்பிருக்கிறது வல்லுநர்கள் கருதுகின்றனர்.

 

Share.
Leave A Reply