ரிதிமாலியத்த, இக்கிரிய, யல்வல பிரதேசத்தில் வீடொன்றினுள் புகுந்த நபர் ஒருவரை வீட்டு உரிமையாளர் உலக்கையால் தாக்கியுள்ளார். இதன்போது குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த நபர் 28 வயதுடைய பெதியாகொட, ரிதிமாலியத்த, மஹியங்கனை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
தாக்குதல் நடத்திய நபர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எனவும் குறித்த வீட்டில் அவரும் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட மனைவியும் வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை 12.10 மணியளவில் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த நபர் வீட்டிலிருந்த நபரை தாக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது, உலக்கையினால் வீட்டிலிருந்த நபர் குறித்த நபரை பதிலுக்கு தாக்கிதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
குறித்த நபரின் மகளுக்கும் மரணித்த நபருக்கும் இடையிலான காதல் தொடர்பே குறித்த நபர் வீட்டுக்குள் பிரவேசித்தமைக்கான காரணம் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.