இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டார்.
அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (12) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
தேசிய மக்கள் சக்தி பொய் மற்றும் வெறுப்பை மாத்திரம் முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தது. நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலில் தவறான அரசியல் தீர்மானம் எடுத்ததை மக்கள் தற்போது விளங்கிக்கொண்டுள்ளார்கள். அதனையே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பெரும்பான்மை பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது. 2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை பலம் இருந்ததையும், அந்த பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவுடன் அரசாங்கம் அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களின் விபரங்கள் இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை. இவ்விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவில்லை.
பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாயின் அதற்கு இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
கடந்த காலங்களில் இதனை காட்டிலும் இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பல ஒப்பந்தங்கள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார். அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கிடையாது.
சர்வதேச நாணய நிதியத்தின் விவகாரத்தில் அரசாங்கம் நாணய நிதியத்தின் சகல நிபந்தனைகளுக்கும் அடிபணிந்துள்ளது. மின் கட்டண அதிகரிப்பு ஊடாக இதனை எதிர்வரும் மாதமளவில் விளங்கிக்கொள்ள முடியும் என்றார்.