பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 6 ஆண்டுகளுக்குப் பின், 9 குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்கி கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை பல தரப்பினரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
அனைத்திந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட சில பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீர்ப்பு வந்ததும் இனிப்புகளைப் பரிமாறி தங்கள் உணர்வை வெளிப்படுத்தினர்.
வழக்கு பதியப்பட்ட 2019 ஆம் ஆண்டில் இந்த குற்றவாளிகள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட்டபோது, ஏராளமான தகவல்கள் பகிரப்பட்டன. தண்டனை பெற்றுள்ள 9 குற்றவாளிகள் யார், இவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன? என்பது குறித்து காணலாம்.
முதல் குற்றவாளி
முதல் குற்றவாளியான சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த்
சபரி ராஜன் என்கிற ரிஸ்வந்த் (வயது 34). இவர் பொள்ளாச்சி ஜோதிநகர் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த நாகேஸ்வரன் என்பவரின் மகன். சிவில் இன்ஜினியர். பாதிக்கப்பட்ட பெண்களில் 4 பேர் தந்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் இவருக்கு ரூ.40 ஆயிரம் அபராதமும், 4 ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
விளம்பரம்
இரண்டாவது குற்றவாளி
இரண்டாவது குற்றவாளியான திருநாவுக்கரசு
திருநாவுக்கரசு (வயது 36). இவர் பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி காந்தி நகரைச் சேர்ந்த கனகராஜ் என்பவரின் மகன். இவர் பொள்ளாச்சி பகுதியில் பைனான்ஸ் கொடுத்து வந்துள்ளார். இவருடைய ஐஃபோனிலிருந்தே நுாற்றுக்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றினர். இவருக்கு ரூ.30,500 அபராதமும், 5 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது
மூன்றாவது குற்றவாளி
மூன்றாவது குற்றவாளியான சதீஷ்குமார்
மூன்றாவது குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர் சதீஷ் குமார் (வயது 35). இவர் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பூங்கா நகரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன். இமாம்கான் வீதியில் துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு ரூ.18,500 அபராதமும், 3 ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.
நான்காவது குற்றவாளி
நான்காவது குற்றவாளியான வசந்த்
வசந்த் (வயது 34). இவர் சூளேஸ்வரன்பட்டி பக்கோதிபாளையத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ரூ.13,500 அபராதமும், 2 ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்தாவது குற்றவாளி
ஐந்தாவது குற்றவாளியான மணி என்கிற மணிவண்ணன்
மணி என்கிற மணிவண்ணன் (வயது 34). இவர், ஆச்சிபட்டி பழனியப்பன் நகரைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரின் மகன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு ரூ.18 ஆயிரம் அபராதமும், 4 ஆயுள் தண்டனையும் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆறாவது குற்றவாளி
ஆறாவது குற்றவாளியான பாபு
பாபு (வயது 35). இவர் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் விகேவி லே அவுட்டைச் சேர்ந்த பழனிசாமி என்பவரின் மகன். இவருக்கு ரூ.10,500 அபராதமும், ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது குற்றவாளி
ஏழாவது குற்றவாளியான ஹேரோனிமோஸ் பால் என்கிற ஹேரோன் பால்
ஹேரோனிமோஸ் பால் என்கிற ஹேரோன் (வயது 34). இவர், பொள்ளாச்சி ஆச்சிபட்டி ஜீவா நகரைச் சேர்ந்த தம்புராஜா என்பவரின் மகன். இவர், அதிமுக சிறுபான்மையினர் அணியில் நிர்வாகியாக இருந்தார். வழக்குக்குப் பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ரூ.14 ஆயிரம் அபராதமும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
எட்டாவது குற்றவாளி
எட்டாவது குற்றவாளியான அருள் ஆனந்தம் என்கிற அருள்
அருள் ஆனந்தம் என்கிற அருள் (வயது 41). இவர் பொள்ளாச்சி வடுகபாளையம் பசும்பொன் நகரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரின் மகன். இவர், அதிமுக மாவட்ட மாணவரணி நிர்வாகியாக இருந்து வந்தார். வழக்கில் சேர்க்கப்பட்ட பின்பு, இவரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவருக்கு ரூ.5500 அபராதமும், ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
ஒன்பதாவது குற்றவாளி
ஒன்பதாவது குற்றவாளியான அருண்குமார்
அருண்குமார் (வயது 33). இவர் பொள்ளாச்சி அருகேயுள்ள பணிக்கம்பட்டி, கிட்டசூரம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன். இவர் சிபிஐ வழக்கை எடுத்து விசாரித்தபின் இறுதியாக கைது செய்யப்பட்டவர். இவருக்கு ரூ.5500 அபராதமும், ஒரு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.