“பிரிகேடியர்” பால்ராஜ் என்ற தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் பிரதி இராணுவத் தளபதி கந்தையா பாலசேகரன் அந்த இயக்கத்திடம் இருந்த மிகவும் சிறந்த இராணுவ தளபதியாக கருதப்பட்டவர். பால்ராஜ் போர்க்களத்தின முன்னரங்கத்தில் நின்று தலைமைதாங்குவதில் புகழ்பெற்ற, மிகவும் மெச்சப்பட்ட இராணுவ மதியூகி.

1965 ஆம் ஆண்டில் பிறந்த பால்ராஜ் 17 வருடங்களுக்கு 2008 மே 20 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார். அவரது 60 வது பிறந்ததினம் இவ்வருடம் நவம்பர் 20 ஆம் திகதி நினைவு கூரப்படும். இந்த கட்டுரை எனது முன்னைய எழுத்துக்களின் அடிப்படையாகக் கொண்டு பால்ராஜையும் அவரது போராட்ட வரலாற்றின் பக்கங்கள் மீதும் கவனம் செலுத்துகிறது.

இராணுவக் களத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அடுத்ததாக இரண்டாவது தளபதியாக விளங்கிய பால்ராஜ் வலிந்து தாக்கும் போர்முறையிலும் தற்காப்பு போர்முறையிலும் அபார திறமையை வெளிக்காட்டியவர்.

பால்ராஜின் இராணுவ ஆற்றலை இலங்கை ஆயுதப்படைகளில் உள்ள அவரது எதிராளிகள் கூட மெச்சினார்கள். ஆயுதப்படைகள் பால்ராஜை விடுதலை புலிகள் இயக்கத்தில் மிகவும் சிறந்த மதியூகிப் போராளியாக (தலைவர் பிரபாகரனுக்கு மேலாகக்கூட ) கருதியதாக கூறப்படுகிறது.

ஒரு சந்தர்ப்பத்தில், முன்னரங்க நிலையில் இருந்து தலைமையகத்துக்கு அனுப்பப்பட்ட ” பால்ராஜ் களத்தில் நிறக்கிறார்” என்ற இராணுவச் செய்தியை விடுதலை புலிகள் இடைமறித்துக் கேட்டனர்.

அதற்கு தலைமையகத்தில் இருந்து ” மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.பால்ராஜ் பிரபாகரனை விடவும் மிகவும் ஆபத்தானவர் ” என்றே பதில் அனுப்பப்பட்டது.

இடைமறித்துக் கேட்கப்பட்ட அந்த செய்தியை அறிந்தபோது பிரபாகரன் மகிழ்ச்சியடைந்தார். கூச்ச சுபாவமுடைய பால்ராஜிடம் பிறகு பிரபாகரன் ” இப்போது உன்னை முதல் எதிரியாக இராணுவம் கருதுகிறது. அதனால் எனக்கு ஆபத்தில்லை” என்று கூறிக் குறும்பு செய்தாராம்.

பால்ராஜ் தொடர்பில் பெரிதாக தெரிவராத இன்னொரு சம்பவம் 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நோர்வே அனுசரணையுடன் சமாதான முயற்சி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிந்த நாட்கள் அவை. இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்த பால்ராஜுக்கு சிங்கப்பூரில் அவசர சத்திரசிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

கட்டுநாயக்க

அப்போது ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஒஸ்லோ அனுசரணையுடனான போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்ததால், பால்ராஜ் சத்திரசிகிச்சைக்காக கட்டுநாயக்கா ஊடாக சிங்கப்பூருக்கு விமானத்தில் செல்வதற்கு கொழும்பு அரசாங்கம் அனுமதித்தது.

நோர்வே அதிகாரிகள் சகிதம் இரு மெய்க்காவலர்களுடன் சிங்கப்பூருக்கு பால்ராஜ் சென்றார். வெற்றிகரமான சத்திரசிகிச்சைக்கு பிறகு சில வாரங்கள் கழித்து சிங்கப்பூரில் இருந்து இலங்கைக்கு திரும்பி பயணம் செய்தார்.

நாடு திரும்பியதும் பால்ராஜ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காப்படன், மேஜர் மற்றும் லெப்ரினண்ட் கேணல் தரங்களைச் சேர்ந்த சுமார் 15 இராணுவ அதிகாரிகள் தன்னைச் ” சூழ்ந்துகொண்டதை ” கண்டார். பால்ராஜுடன் கூடவந்த நோர்வே அதிகாரிகளுக்கு பெரும் குழப்பம் . பால்ராஜுக்கு ஊறுவிழைவிக்கும் நோக்கத்தை இராணுவத்தினர் கொண்டிருக்கிறார்களோ என்று அந்த அதிகாரிகள் அஞ்சினார்கள். ஆனால், அவ்வாறு எதுவும் நேரவில்லை.

வடக்கில் போர்க்கள அனுபவத்தைக் கொண்ட அந்த இராணுவ அதிகாரிகள் பால்ராஜின் துணிச்சலையும் வீரச்செயல்களையும் அறிந்தவர்களாக இருந்தனர்.

போர்க்களத்தில் எதிரிகளாக இருந்தாலும், பால்ராஜை முதல்தரமான போராளியாக கருதிய அவர்கள் அவருக்கு ஒரு மதிப்புக் கொடுத்தனர்.

பால்ராஜ் சிங்கப்பூரில் இருந்து திரும்பி வருவதை அறிந்த அவர்கள் தங்களது எதிரியை நேரில் பார்ப்பதற்காக அங்கு கூடியிருந்தனர். சில அதிகாரிகள் அவரிடம் மகிழ்ச்சி தெரிவித்து கைகுலுக்கிக் கொண்டனர்.

சிலர் சந்தோசமாக அவருடன் பேசினர். அதற்கு பிறகு பால்ராஜ் ஹெலிகொப்டரில் பாதுகாப்பாக வன்னிக்கு திரும்பினார். கெடுதி எதுவும் நேரவில்லை என்று நோர்வே அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

கட்டுநாயக்காவில் இடம்பெற்ற அந்த குறுகிய நேரச் சம்பவம் சில இராணுவ அதிகாரிகள் பால்ராஜ் மீது கொண்டிருந்த மதிப்பை தெளிவாக வெளிக்காட்டியது. அதற்கு காரணம் பால்ராஜிடமிருந்த வியப்பைத்தரும் இராணுவத் திறமையேயாகும். மேற்படி சம்பவம் அன்று இராணுவத்தில் இருந்த சில அதிகாரிகள் பால்ராஜ் மீது வைத்திருந்த மதிப்பையும மரியாதையையும் வெளிக்காட்டியது.

கொக்குத்தொடுவாய்

பால்ராஜ் என்ற கந்தையா பாலசேகரன் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரப் பகுதியான கொக்குத்தொடுவாய் பகுதியில் 1965 நவம்பர் 27 ஆம் திகதி பிறந்தார்.நான்கு ஆண் பிளளைகளையும் ஒரு பெண் பிள்ளையையும் கொண்ட குடும்பத்தில் அவர் நான்காவது பிள்ளை.

அவர் தனது ஆரம்பக்கல்வியை கொக்குத் தொடுவாயிலும் இரண்டாம் நிலைக் கல்வியை திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையிலும் பெற்றார். பால்ராஜ் குடும்பத்தில் மிகவும் விவேகமானவராக இருந்ததால் தந்தையார் கந்தையாவும் தாயார் கண்ணகியும் பாலசேகரனை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தனர். க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையைில் சிறந்த பெறுபேறுகளுடன் அவர் சித்தியெய்தினார்.

பெற்றோரின் நோக்கம் அவ்வாறு இருந்தது. ஆனால் மகனின் தெரிவு அதுவாக இருக்கவில்லை. க.பொ.த. உயர்தர வகுப்பில் படிக்கும்போது அவர் தமிழ் ஆயுதப்போராட்ட இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

1984 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்தில் முறைப்படியாக இணைத்துக் கொள்ளப்பட்ட பாலசேகரனுக்கு இயக்கத்தின் ஒன்பதாவது அணியின் ஒரு உறுப்பினராக தமிழ்நாட்டில் இராணுவப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பால்ராஜ் என்று இயக்கப் பெயர் கொடுக்கப்பட்டது. தமிழ்நாட்டு பயிற்சிக்கு பிறகு அவர் இலங்கை திரும்பினார். அன்றைய வன்னி தளபதியான மாத்தையா என்ற கோபாலசுவாமி மகேந்திரராஜாவினால் இயக்கத்திற்குள் எடுக்கப்பட்ட பால்ராஜ் முதலில் அவரின் மெய்க்காவலர் பிரிவிற்குள் உள்வாங்கப்பட்டார். படிப்படியாக பால்ராஜ் கிரமமான சண்டைகளுக்கு பயன்படுத்தப்பட்டார்.

கிளிநொச்சி இராணுவ முகாமை சுற்றிவளைப்பதற்கு மாத்தையாவினால் மேற்கொள்ளப்பட்ட தோல்விகண்ட ஒரு முயற்சியின்போது கிளிநொச்சியில் கரடிப்போக்கு சந்தியைக் கைப்பற்றுவதில் வகித்த துடிப்பான பாத்திரத்தின் மூலமாக 1986 நடுப்பகுதியில் பால்ராஜ் முதன்முதலாக தனது திறமையை வெளிக்காட்டினார்.

1987 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளின் பிரதி தலைவராக்கப்பட்ட மாத்தையா யாழ்ப்பாணத்துக்கு நகர்ந்தார்.

ஆனால், அவரே வன்னியில் இயக்கத்தின் முழுமையான பொறுப்பில் அவரே தொடர்ந்தும் இருந்தார் ஜெயம், சுசீலன் மற்றும் பசீலன் ஆகியோர் முறையே வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பொறுப்பான இராணுவத் தளபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

பசீலனின் பிரதி தளபதியாக வந்த பால்ராஜ் முல்லைத்தீவு மாவட்டத்தில் இயங்கினார். முந்திரிக்கைக்குளத்தில் பசீலன், பால்ராஜ் தலைமையில் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு கெரில்லா தாக்குதலில் விடுதலை புலிகள் 14 படையினரைக் கொன்றனர். நிலப்பகுதியை நன்கு தெரிந்தவர் என்பதால் மணலாறு — வெலிஓயா பிரதேசத்தில் பால்ராஜ் பணியில் அமர்த்தப்பட்டார்.

இந்திய இராணுவம்

1987 ஜூலையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய — இலங்கை சமாதான உடன்படிக்கை ஒரு தற்காலிக ஓய்வமைதியைக் கொண்டுவந்தது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதிகாக்கும் படை நிலைவைக்கப்பட்டது. அந்த சஞ்சலமான அமைதி இந்திய படையினருக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் சண்டை மூண்டபோது தகர்ந்து போனது.

யாழ்ப்பாணத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக இந்திய இராணுவம் ” ஒப்பரேசன் பவான்” என்ற நடவடிக்கையை தொடங்கியது. இந்திய படைகளுடன் சண்டையிடுவதற்காக பசீலனினதும் அவரது பிரதி தளபதியாக பால்ராஜினதும் தலைமையில் விடுதலை புலிகள் போராளிகள் அவசரமாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டனர். அப்போதுதான் பால்ராஜ் கோப்பாயில் முன்னேறிக் கொண்டிருந்த டாங்கிப் படையணியை ஆர்.பி.ஜி..லோஞ்ரை பயன்படுத்தி மிகுந்த துணிச்சலுடன் தாக்கி பெருமளவு சேதத்தை இந்தியப் படையினருக்கு ஏற்படுத்தினார்.

இந்திய இராணுவத்துடன் போர் தீவிரமடையவே விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், மாத்தையா மற்றும் சிரேஷ்ட தலைவர்கள் வன்னிக்கு சென்றனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் நித்திக்காய்க்குள காடுகளுக்கும் பிரபாகரன் முகாமிடத் தொடங்கினார். லெப்டினண்ட கேணல் நவம் பொதுவில் முல்லைத்தீவின் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் குறிப்பாக பிரபாகரனின் பாதுகாப்புக்கும் முழுமையாக பொறுப்பாக இருந்தார். நவத்தின் பிரதி தளபதியாக பால்ராஜ் இயங்கினார்.

அந்த வேளையில்தான் பால்ராஜ் தனது தலைவர் பிரபாகரனுடன் நெருக்கமாக பழகத் தொடங்கினார். பால்ராஜின் தன்னடக்கமான எளிமையும் செயற்திறமையும் பிரபாகரனை பெரிதும் கவர்ந்தன.

பிரபாகரனைப் பிடிப்பதற்கு இந்தியப் படையினர் 1988 ஆம் ஆண்டில் ” ஒப்பரேசன் செக்மேற்” நடவடிக்கையை ஆரம்பித்தபோது இந்திய துருப்புக்களுடன் நேருக்கு நேர் மோதி அவர்களின் முயற்சியை முறியடித்ததில் முறியடித்ததில் பால்ராஜ் முக்கிய பாத்திரத்தை வகித்தார். அந்த தாக்குதலில் பல கூர்க்கா படையினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.. இந்திய படையினருக்கு எதிரான சண்டைகளில் தனித்தனியான மூன்று சந்தர்ப்பங்களில் பால்ராஜ் காயமடைந்ததாக கூறப்பட்டது.

இலங்கையில் இருந்து இந்திய இராணுவம் வெளியேறிய பிறகு விடுதலை புலிகளின் தலைவர் தனது பரிவாரங்களுடன் மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு நகர்ந்தார். ஒருவகையான கொள்கை மாற்றமும் ஏற்பட்டது. அந்தந்த பகுதிகளில் இருக்கும் போராளிகளே தலைமைத்துவ பதவிகளை எடுப்பதை இயக்கம் ஊக்கப்படுத்தியது.

வன்னி இராணுவத் தளபதி

இந்த கொள்கையின் பிரகாரம் வன்னி மண்ணின் மைந்தனான பால்ராஜ் 1990 ஆம் ஆண்டில் வன்னிக்கு பொறுப்பான இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.தனது இராணுவ மதிக்கூர்மையையும் ஆற்றல்களையும் காட்டுவதற்கு இத்தகைய ஒரு சந்தர்ப்பத்துக்காக பால்ராஜ் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது யாழ்ப்பாணம் — கண்டி வீதி (ஏ 9) வவுனியாவில் இருந்து ஆனையிறவு வரை ” பெயரளவில் ” இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. கேந்திர நிலைகளில் இராணுவத்துக்கு முகாம்கள் இருந்தன. பால்ராஜ் தலைமையில் விடுதலை புலிகள் தொடுத்த இரு தாக்குதல்களில் கொக்காவில் மற்றும் மாங்குளம் பகுதிகளில் இருந்த இராணுவ முகாம்கள் முற்றாக நிர்மூலம் செய்யப்பட்டன. அடுத்து கிளிநொச்சி முகாமுக்கு எதிராக இன்னொரு தாக்குதல் தொடுக்கப்பட்டது. அதை முற்றுமுழுதாக நிர்மூலம் செய்யமுடியவில்லை என்ற போதிலும், அங்கிருந்து படையினர் அப்புறப்படுத்தப்பட்டு பரந்தன் முகாம் பலப்படுத்தப்பட்டது.

இந்த வெற்றிகள் விடுதலை புலிகளின் மதிப்பை உயர்த்தின. தீவிரமான மோதல்களில் முன்னரங்கத்தில் நின்று துணிச்சலுடன் போராளிகளுக்கு தலைமைதாங்கி வழிநடத்துவதன் மூலமாக அவர்களை ஊக்கப்படுத்திய ஒரு இராணுவத் தளபதி என்று பால்ராஜ் பெயரெடுத்து பிரபல்யமானார்.

தரை – கடல் – ஆகாயம்

1991 ஆனையிறவு ஒப்பரேசன் பால்ராஜ் தனது இராணுவத் திறமையையும் துணிச்சலையும் நிரூபித்த இன்னொரு இராணுவ நடவடிக்கையாகும். ஆனையிறவு இராணுவத்தளத்தை முற்றுகையிட்டு நிர்மூலம் செய்வதற்காக மாத்தையா தலைமையில் மேற்கொள்ளப்பட்ட அந்த நடவடிக்கைக்கு ” தரை — கடல் — ஆகாயம் ” என்று பெயரிடப்பட்டது. குறிஞ்சாத்தீவு பகுதியில் இருந்து ஆனையிறவு இராணுவ தளத்திற்குள் ஊடுருவும் இலக்குடனான பணி பால்ராஜுக்கும் தீபன் உட்பட அவரது போராளிகளுக்கும் ஒப்படைக்கப்பட்டது.

பால்ராஜும் அவரது போராளிகளும் ஏரியின் ஊடாக ஊடுருவியதன் மூலமாக ( முன்னைய விருந்தினர் விடுதி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த ) இராணுவ நிலைகளை கைப்பற்றி அந்த நடவடிக்கை கைவிடப்படும் வரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வாபஸ் பெற்றுச் சென்றபோது அந்த இராணுவ நிலைகளை அவர்கள் நிர்மூலம் செய்தனர்.

விடுதலை புலிகள் இயக்கத்தின் மற்றைய போராளிகள் தங்களின் இலக்குகளைச் சாதிக்கத் தவறியதன் விளைவாக ஆனையிறவு இராணுவத் தளத்தை முற்றாக நிர்மூலம் செய்யும் நடவடிக்கை தோல்வியடைந்தது. அந்த சண்டகளில் 673 விடுதலை புலிகள் கொல்லப்பட்டனர். ஆனால், தனிப்பட்ட ரீதியில் பால்ராஜுக்கு அது வெற்றியாகும்.

முதலாவது காலாட்படை அணியின் தளபதி

விடுதலை புலிகள் 1991 ஆம் ஆண்டில் தங்களது முதலாவது காலாட்படை அணியை அமைத்தனர். அந்த படையணிக்கு 1983 ஜூலையில் மீசாலையில் இறந்த பிரபாகரனின் நெருங்கிய தோழனும் நம்பிக்கைக்குரிய சகாவுமான சார்ள்ஸ் அன்ரனியின் பெயர் சூட்டப்படடது. அந்த சார்ள்ஸ் அன்ரனி படையணியின் முதலாவது விசேட தளபதியாக பிரபாகரன் பால்ராஜையே தெரிவு செய்தார். அதன் தளபதியாக 1993 ஆம் ஆண்டு வரை பால்ராஜ் பணியாற்றினார்.

இராணுவத் தாக்குதல்களுக்கு தலைமை தாங்குவதற்கு புறம்பாக பால்ராஜ் கேந்திர பாதுகாப்பு(Strategic defense) நடவடிக்கைகளிலும் தனது திறமையை வெளிக்காட்டினார். இலங்கை ஆயுதப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களை தோற்கடிப்பதற்கு, தடுப்பதற்கு, கட்டுப்படுத்துவதற்கு அல்லது செயலிழக்கச் செய்வதற்கு பால்ராஜ் பிரதானமாக பொறுப்பாக இருந்தார்.

வவுனியாவில் ” ஒப்பரேசன் வன்னிவிக்கிரம ” , மணலாறு /வெலிஓயாவில் ” ஒப்பரேசன் லைற்னிங் “, யாழ்ப்பாணத்தில் ” ஒப்பரேசன் லீப் ஃபோர்வாட்”, கிளாலி / புலோப்பளையில் “ஒப்பரேசன் யாழ்தேவி” மற்றும் ஆனையிறவில் ” ஒப்பரேசன் அக்னி கீல ” ஆகியவை அத்தகைய இராணுவ நடவடிக்கைகளில் சிலவாகும்.

யாழ்ப்பாண குடாநாட்டுக்கு தெற்கே 1993 ஆம் ஆண்டில் இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்ட ” ஒப்பரேசன் யாழ்தேவியை” பால்ராஜும் அவரது பிரதி தளபதி தீபனும் எதிர்த்துப் போரிட வேண்டியிருந்தது.

புலோப்பளையில் நடந்த சண்டையில் பால்ராஜ் கடுமையாகக் காயமடைந்தார்.ரி — 55 தாங்கி ஒன்றை நோக்கி ஆர்.பி.ஜி. லோஞ்சரை பயன்படுத்த தாக்குதல் தொடுத்த வேளை பால்ராஜுக்கு ஒரு காலில் காயமேற்பட்டது. அந்த காயம் காரணமாக அவர் சற்று நொண்டி நொண்டி நடக்க வேண்டியதாயிற்று. நீண்ட தூரம் நடக்கும்போது அவரது காலில் நோவு ஏற்படத் தொடங்கியது.

1994 ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக பதவியேற்றதை தொடர்ந்து போர்நிறுத்தம் செய்யப்பட்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளை தொடங்கின.

1995 ஏப்ரிலில் போர்நிறுத்தம் முறிவடைந்து மீண்டும் போர் மூண்டது. தொடக்கத்தில் குடாநாட்டில் ” லீப் ஃபோர்வாட் ” ஒப்பரேசனை முன்னெடுத்த இராணுவம் வலிகாமம் பிரதேசத்தில் முன்னேறியது.

அதை எதிர்த்து விடுதலை புலிகள் “ரைகர் லீப்” என்று பெயரிடப்பட்ட தாக்குதலை மேற்கொண்டனர். இராணவம் பின்வாங்கியது. இதில் பால்ராஜ் முக்கியமான ஒரு பாத்திரத்தை வகித்தார். ஆனால், இராணுவம் விரைவாகவே ” ஒப்பரேசன் றிவிரச ” என்ற நடவடிக்கையை முன்னெடுத்தது. அதன் விளைவாக பின்வாங்க நிர்ப்பந்திக்கப்பட்ட விடுதலை புலிகள் 1996 ஆம் ஆண்டில் வன்னிக்குள் சென்றனர்.

பிரதி இராணுவ தளபதி

1996 ஆம் ஆண்டில் தான் பிரபாகரன் பால்ராஜுக்கு தனது மிகப்பெரிய இராணுவ கௌரவத்தை வழங்கினார். அவர் பால்ராஜை பிரதி இராணுவ தளபதியாக நியமித்தார்.பிரபாகரன்தான் விடுதலை புலிகளின் இராணுவ தளபதி. விடுதலை புலிகளின் இராணுவ கடடமைப்பு படிநிலையில் இரண்டாவது ஆளாக பால்ராஜ் வந்தார். விடுதலை புலிகளின் இந்த பிரதி இராணுவ தளபதி சண்டைகளில் தனது கைவரிசையைக் காட்டத்தொடங்கினார்.

முல்லைத்தீவு இராணுவ முகாமை விடுதலை புலிகள் 1996 ஜூலை 18 ஆம் திகதி நிர்மூலம் செய்தனர். ஒரு ஆயிரம் படையினர் அதில் கொல்லப்பட்டனர்.” ஓயாத அலைகள் ” என்ற நடவடிக்கையை பால்ராஜ் ஒருங்கிணைத்து நடத்தினார்.

1997 ” ஒப்பரேசன் ஜெயசிக்குரு” இராணுவ நடவடிக்கையின் முதல் கட்டம் பால்ராஜினால் தடுக்க முடியாமல்போன ஒரு முக்கியமான இராணுவத் தாக்குதலாகும்.

அதில் ஆயுதப்படைகள் ஓமந்தையையும் நெடுங்கேணியையும் கைப்பற்றினர். புளியங்குளம் வீழ்ச்சி காணும் வரை ஜெயசிக்குருவின்போது விடுதலை புலிகளின் பாதுகாப்பு நிலைகளுக்கு பால்ராஜே முழுமையாக பொறுப்பாக இருந்தார். அதற்கு பிறகு தீபனுடன் சேர்ந்து பாதுகாப்பு நிலைகளின் ஏற்பாடுகளை விடுதலை புலிகளின் கிழக்கு பிராந்தியத்தின் முன்னாள் தளபதி ” கேணல் ” கருணா பொறுப்பேற்றார்.

1998 பெப்ரவரியில் ஓயாத அலைகள் — 2 நடவடிக்கையில் விடுதலை புலிகள் கிளிநொச்சியை தாக்கினார்கள். பெரும் இழப்புக்களைச் சந்தித்த பிறகு படையினர் வாபஸ் பெற்றனர்.

அந்த நடவடிக்கைக்கு முழுமையாக பொறுப்பாக இருந்த பால்ராஜ் ஒரு இராணுவ தந்திரோபாயமாக உளவியல் போர்முறையை கடைப்பிடித்ததாக கூறப்பட்டது. அந்த நடவடிக்கை இலங்கையின் 50 வது சுதந்திர தினக் கொண்டாட்ட நேரத்தில் நடத்தப்பட்டது.

பிறகு 1999 நவம்பரில் ஓயாத அலைகள் — 3 நடவடிக்கையின்போது ஒருங்கிணைந்த தொடர்ச்சியான தாக்குதல்களில் விடுதலை புலிகள் ஒட்டிசுட்டான், கரிப்பட்டமுறிப்பு, மாங்குளம், கனகராயன்குளம், புளியங்குளம் மற்றும் பல இடங்களில் இருந்த இராணுவ முகாம்களை நிர்மூலம் செய்தனர்.

இலங்கை இராணுவத்தினர் 18 மாதகால கட்டத்தில் மொத்தமாகப் பெற்ற ஜெயசிக்குருவின் பயன்களை ஒன்பது நாட்களில் விடுதலை புலிகள் தலை கீழாக்கினார்கள்.

ஆனையிறவு தளம்

ஓயாத அலைகள் தொடர்ச்சியான ஒரு நடவடிக்கை. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் பல சண்டைகள் தொடர்ந்து மூண்டன. இவற்றில் மிகப்பெரியது. ஆனையிறவில் அமைந்திருந்த கேந்திர முக்கியத்துவமுடைய இராணுவ தளத்தை கைப்பற்றுவதற்கு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட நீண்ட நடவடிக்கைகளாகும்.

ஏ-9 நெடுஞ்சாலை ஓரமாக எழுதுமட்டுவாளுக்கும் இயக்கச்சி / ஆனையிறவுக்கும் இடையில் விநியோகங்களை துண்டிப்பதே ஆயுதப் படையினரைச் ” சுற்றிவளைத்து பலவீனப்படுத்துவதற்கு ” விடுதலை புலிகள் கடைப்பிடித்த முக்கிய தந்திரோபாயமாக அமைந்தது. துண்டிப்பின் மூலமாக ஆனையிறவு தளத்தை தனிமைப்படுத்த வேண்டியிருந்தது.

அவ்வாறு இடம்பெறுவதை தடுக்கும் ஒரு முயற்சியாக ஆயுதப்படைகள் குடாநாட்டில் வடமராட்சி கிழக்கு கரையோரமாக தாளையடி — மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாணம் — கண்டி வீதியில் புதுக்காட்டு சந்திவரை விரிவடையும் ஒரு நாற்கோணப் பகுதியை பலப்படுத்தின.

இந்த பகுதி வத்திராயன், புல்லாவெளி, சோரன்பற்று மற்றும் மாசார் உள்ளடங்கிய ” வத்திராயன் பெட்டி ” என்று அறியப்பட்டது. அதன் மூலமாக நாட்டுப் பகுதிக்குள் எழுதுமட்டுவாள் தொடங்கி கரையோரத்தில் தாளையடியில் இருந்து ஆனையிறவுக்கு தொடர்ச்சியான விநியோகங்கள் உறுதிப்படுத்தப்பட்டன.

பால்ராஜின் தலைசிறந்த சாதனை

ஊடுருவ முடியாத இந்த பாதுகாப்பு நிலைகளை விடுதலை புலிகள் உடைத்தெறிந்த விதம் ஒரு நவீன இராணுவ அதிசயமாகும்.

அது பால்ராஜின் தலைசிறந்த சாதனையாகும். 2000 மார்ச் 26 ஆம் திகதி கடலில் இருந்து தரைநோக்கி மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையில் ” கேணல் ” சூசை தலைமையிலான கடற்புலிகள் பிரதான நிலப்பகுதி கரையோரத்தில் இருந்து குடாநாட்டுக் கரையோரத்துக்கு 1200 போராளிகளை கொண்டுவந்து இறக்குவதில் வெற்றிகண்டனர்.

பால்ராஜ் தலைமையிலான இந்த போராளிகள் குடாரப்பு — மாமுனையில் தரையிறங்கி ” கண்டல் ” என்று கூறப்படும ஏரி மற்றும் சதுப்பு நிலப்பகுதிகள் ஊடாக நடந்து இரகசியமாக உட்பகுதிக்குள் நகர்ந்தனர்.

சோரன்பற்றிலும் மாசாரிலும் இருந்த இராணுவ நிலைகள் இராணுவ நிலைகள் நிர்மூலம் செய்யப்பட்டன.அடுத்து விடுதலை புலிகள் புதுக்காட்டு சந்திக்கு அண்மையாக ஏ — 9 வீதியை அடைந்தனர்.

அதையடுத்து பால்ராஜ் தலைமையிலான விடுதலை புலிகள் பளைக்கு அண்மையாக இத்தாவில் என்று அழைக்கப்படும் ஒரு இடத்தில் தங்களது நிலைகளை அமைத்து இயக்கச்சி / ஆனையிறவுக்கான இராணுவ விநியோகங்களை தடுத்தனர்.

அடுத்த சில வாரங்கள் தீவிரமான மோதல்கள் இடம்பெற்றன. பால்ராஜும் அவரது துணிச்சல்மிக்க போராளிகள் அணியினரும் பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் இத்தாவிலை தங்களது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருந்தனர். பல நெளிவு சுழிவுகளுக்கு மத்தியில் பால்ராஜ் விட்டுக்கொடுக்காமல் போரிட்டு அவரைத் தோற்கடிப்பதற்கான தொடர்ச்சியான பல முயற்சிகளை முறியடித்தார்.

24 நாட்கள் தொடர்ச்சியான சண்டைகளுக்கு பிறகு இராணுவம் பின்வாங்கியது ஏப்ரில் 19 இராணுவம் ஆனையிறவைக் கைவிட்டது.

ஏப்ரில் 22 வைபவரீதியாக விடுதலை புலிகள் தங்களின் கொடியை ஆனையிறவில் பறக்கவிட்டனர்.

பால்ராஜின் நம்பமுடியாத சாதனை இராணுவ கையேடுகளில் நுணுகி ஆராயப்பட்டது. எதிரியின் பிராந்தியத்துக்குள் ஆழமாகச் சென்று வலிந்துதாக்கும் தாக்குதல்களையும் தற்காப்பு தாக்குதல்களையும் தங்களால் நடத்த முடியும் என்பதையும் மிகவும் பலம்பொருந்திய ஆயுதப்படைகளுக்கு எதிராக ஆகாயமார்க்க ஆதரவு இல்லாமல் சண்டையிட்டு தங்களால் வெற்றிபெற முடியும் என்பதையும் பால்ராஜின் தலைமையின் கீழ் விடுதலை புலிகள் நிரூபித்தனர். அது ” மட்டுப்படுத்தப்பட்ட போர்களை ” நடத்துவதில் ஒரு முன்னுதாரணமான மாற்றம் என்று பாராட்டப்பட்டது.

அது நடந்து 25 வருட இடைவெளிக்குப் பிறகு 2013 ஆம் ஆண்டில் எனது பிறந்த மண்ணுக்கு நான் சென்றபோது இத்தாவிலைப் பார்க்க வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருந்தேன். ஏ — 9 வீதியில் இத்தாவிலில் எமது வாகனத்தில் இருந்து இறங்கிய நாம் வீதியை விட்டிறக்கி உட்பகுதிக்கு செல்ல முடியவில்லை. சுற்றவர இருந்த பகுதிகளில் கண்ணி வெடிகள் இருந்ததே அதற்கு காரணமாகும். அப்போது அந்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தன.

” ஒப்பரேசன் அக்னிகீல “

ஆனையிறவு வீழ்ச்சிக்கு பிறகு ஒரு வருடம் கழித்து தற்காப்பு போர்முறையில் பால்ராஜின் உன்னதமான சாதனை நிகழ்ந்தது.2001 ஏப்ரில் 24 ஆம் திகதி இராணுவம் ” ஆரம்பித்த ஒப்பரேசன் அக்னிகீல ” நடவடிக்கையை விடுதலை புலிகள் எதிர்க்க வேண்டியிருந்தது.

ஆனையிறவை மீளக்கைப்பற்றும் ஒரு முயற்சியாக கிளாலி — எழுதுமட்டுவாள் — நாகர்கோவில் முன்னரங்கப் பாதுகாப்பு நிலைகளில் இருந்து ஆயுதப்படைகள் நகர்ந்தன.

இராணுவத்துக்கு கடுமையான இழப்புக்களை விடுதலை புலிகள் ஏற்படுத்தினர். ஆனையிறவு வெற்றியையும் ஆனையிறவை தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக ” ஒப்பரேசன் அக்னிகீலவை” எதிர்த்து நிற்பதில் காட்டிய மகத்தான சாதனையையும் அடுத்து விடுதலை புலிகளின் பிரதி இராணுவ தளபதியின புகழ் மேலோங்கியது. பால்ராஜ் ஒரு காவிய நாயகனானார்.

உடல்நிலை பாதிப்பு

ஆனால் , பால்ராஜின் உடல்நிலை குன்றத் தொடங்கியது. அவரது இருதயத்தின் ஆரோக்கியம் எப்போதுமே பாதிக்கப்பட்டிருந்தது.

அது மேலும் மோசமடையத் தொடங்கியது. அதற்கு மேலதிகமாக நீரிழிவுடன் சிறுநீரக சிக்கலும் இருந்தது. போர்நிறுத்தம் நடைமுறையில் இருந்தபோது நவீன மருத்துவ சிகிச்சைக்காக இரு மெய்க்காவலர்களுடன் பால்ராஜ் 2003 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் சென்றார்.

அங்கு அவருக்கு இருதய சத்திரசிகிச்சைக்கு உள்ளானார். நாடுதிரும்பி வரும் வேளையிலேயே சில இராணுவ அதிகாரிகள் அவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சந்தித்தனர். வழமைக்கு மாறான இந்த சந்திப்பு குறித்து இந்த கட்டுரையின் முற்பகுதியில் விபரிக்கப்பட்டிருக்கிறது.

உடல்நிலை மோசமடைந்ததன் விளைவாக பால்ராஜ் ஒப்பீட்டளவில் ஒரு எழுச்சியற்ற வாழ்க்கையை தொடர வேண்டியதாயின்று.

விடுதலை புலிகளின் இராணுவ அகாடமியில் அதிகாரிகளுக்கு விரிவுரையாளராகவும் பயிற்றுனராகவும் அவர் செயற்பட்டார்.

இராணுவ தந்திரோபாயம், திட்டமிடல் மற்றும் வியூகங்கள் குறித்து அவர் போதித்தார். விடுதலை புலிகளின் கமாண்டோக்களுக்கும் விசேட படைகளுக்கும் அவர் விசேட பயிற்சிகளையும் வழங்கினார்.

இதற்கு முன்னதாக பால்ராஜ் விடுதலை புலிகளின் பல்வேறு பயிற்சி முகாம்களில் வருகைதரு பயிற்றுநராகவும் பணியாற்றினார். இயக்கத்தில் சேர்க்கப்படுபவர்கள் பால்ராஜிடம் படிப்பதற்கும் பயிற்சி பெறுவதற்கும் விரும்பினார்கள்.

உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டுவந்த நிலையில், பால்ராஜ் படிப்படியாக தனது நேரத்தை புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்றிலேயே செலவிட்டார்.

ஆனால் , இராணுவ முனையில் அவரது சேவைகள் எந்த வகையிலும் முடிவுக்கு வர முடியவில்லை. 59 வது படையணியை திரட்டுவதும் அதை மணலாறு / வெலிஓயாவில் நிலைவைப்பதும் விடுதலை புலிகளுக்கு புதிய சிக்கல்களை தோற்றுவித்தன. இந்த கேந்திர முக்கியத்துவ நிலப்பரப்பில் இலங்கை ஆயுதப்படைகளை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

மீண்டும் ஒரு தடவை பிரபாகரன் பால்ராஜின் சேவையை நாடினார். தனது சுகவீனத்துக்கு மத்தியிலும் ஒரு நீண்டகாலத்துக்கு பால்ராஜ் முன்னரங்க நிலைகளில் தங்கியிருந்தார்.

அதனால் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இருந்தாலும், வைத்தியசாலையில் இருந்து வெளியேறி பாதுகாப்பு நிலைகளை மேற்பார்வை செய்வதற்கு முன்னரங்க நிலைகளுக்கு நீண்ட பயணங்களை அவர் மேற்கொண்டார். அதற்கு பிறகு விடுதலை புலிகளின் சிரேஷ்ட தளபதிகளான சொர்ணம், பானு ஆகியோர் பால்ராஜின் சுமையைக் குறைப்பதற்கு உதவ மணலாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இறுதிப்போரில் விடுதலை புலிகள் வெற்றியடைவர் என்று நம்பிக்கை தளராத பால்ராஜ் 2006 மே மாதத்தில் ஊடகங்களுக்கு பகிரங்கமாகக் கூறினார் .

” நான்காவது ஈழப்போரே இறுதிப் போராக இருக்கும். அது ஒரு பயங்கரமான போராகவும் இருக்கும். அது எமது மககளுக்கும் எமது தாயகத்துக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் விடுதலையைக் கொண்டுவரும். நாம் நிசசயமாக வெற்றியாளர்களாக விளங்குவோம். மக்கள் எங்களுடன் நிற்கிறார்கள்.எமது தலைவர் வெற்றிக்கு எம்மை வழிநடத்திச் செல்வார்” என்று பால்ராஜ் கூறினார்.

மாரடைப்பு

பால்ராஜ் எதிர்வு கூறியதைப் போன்று நிலைவரம் அமையவில்லை மூன்று வருடங்களுக்கு பிறகு 2009 மே மாதத்தில் விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டனர்.

முல்லைத்தீவில் பால்ராஜின் சொந்த மண்ணிலேயே இறுதிக்கட்டப் போர் நடந்தது. அப்போது அவர் உயிருடன் இருக்கவில்லை. ஒரு வருடம் முன்னதாக அவர் இறந்துவிட்டார். புதுக்குடியிருப்பில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும்போது 2008 மே 20 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் அவர் மாரடைப்பினால் மரணமடைந்தார்.

விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டதை காணும் அவமானம் பால்ராஜுக்கு ஏற்படவில்லை. இறந்த பிறகு அவரை பிரபாகரன் ” பிரிகேடியர் ” தரத்துக்கு பதவியுயர்த்திக் கௌரவித்தார்.

டி.பி.எஸ். ஜெயராஜ்

Share.
Leave A Reply