கனடாவில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுத் தூபி இலங்கை அரசாங்கத்தை கடும் நெருக்கடிகளுக்குள் தள்ளியுள்ளது.
இலங்கைக்கான கனடா தூதுவரை நேரடியாக அழைத்து தமது அதிருப்தியை அநுர அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கனடாவின் பிம்டன் நகரில் கடந்த 10 ஆம் திகதி தமிழின அழிப்பு நினைவகமானது பிரம்டன் நகர மேயர் பற்றிக் பிரவுணால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதற்கு இலங்கையின் முன்னாள் ஆட்சியாளர்கள் உட்பட அநுரவின் அரசாங்கமும் தனது அதிருப்பதியை வெளியிட்டது.
மகிந்தவின் ஆட்சி காலத்தில் சிரேஷ்ட அமைச்சர்களாக இருந்தவர்களும் பேரினவாத சிந்தனை கொண்டவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தமை மாத்திரமின்றி ஜனாதிபதி அநுரகுமாரவும் இதை ஏற்றுக்கொள்கின்றாரா என ஊடகங்களில் கருத்துகளை முன் வைக்கத் தொடங்கினர்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்சவும் இந்த நினைவு தூபி அங்குரார்ப்பணத்துக்கு தனது கடுமையான எதிர்ப்பை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
இதையடுத்து உடனடியாக செயற்பட்ட அநுர அரசாங்கம் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரை அழைத்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி வெளிவிவகார அமைச்சுக்கு வரும்படி அவருக்கு அழைப்பு விடுத்த அரசாங்கம் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஊடாக தனது கண்டனத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தியது.
இதன் போது அவருடன் உரையாடிய அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதற்கான எந்த உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதாரங்களும் இல்லையென கூறியதோடு குறித்த நினைவுத் தூபியை அமைக்க கனடா அரசாங்கம் எவ்வாறு அனுமதி அளித்தது என்றும் வினவியிருந்தார்.
தற்போது அநுர அரசாங்கம் இவ்விடயத்தில் கடந்த ஆட்சியாளர்களின் கருத்துக்கு ஏற்ப நடக்கவேண்டிய நிர்பந்தம் உள்ளது.
அதற்கேற்றாற்போல் தேசிய மக்கள் சக்தி தன்னை மாற்றிக்கொண்டது என்று தான் கூற வேண்டியுள்ளது. ஏனெனில் அரகலய போராட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் இடம்பெற்ற போரில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் நிகழ்வுகள் மற்றும் மாவீரர் தின நிகழ்வுகளில் அநுர குமார திசாநாயக்க மெளனம் காத்தார். கட்சியும் அவ்வாறே.
ஆனால் இப்போது அனைத்தும் மாறி விட்டது. ஆட்சியிலிருக்கும் போது சிங்கள பெளத்தர்களுக்கும் மகாநாயக்க தேரர்களுக்கும் ஏற்ப நடக்காவிட்டால் இன்னுமொரு அரகலய தோற்றம் பெறும் அச்சம் அநுர அரசாங்கத்துக்கு உள்ளது. ஆகையால் அதற்கேற்றாற்போல தாளம் போடத் தொடங்கி விட்டனர் தேசிய மக்கள் சக்தியினர்.
முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் அதிருப்தியையும் ஆட்சேபனைகளையும் கனடா அரசு கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. தமது செயற்பாட்டை நியாயப்படுத்துவது போன்று கனடா பிரம்டன் நகர மேயர் பெற்றிக் பிரவுன் இலங்கை அரசாங்கத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
நாம் சரியான பாதையில் செல்வதை இந்த எதிர்ப்புகள் உணர்த்தி நிற்கின்றன. தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பை வெளிக்காட்டுவதானது எமக்கான அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
அவ்வாறானதொரு இனப்படுகொலை நிகழவில்லையென்றால் அவர்கள் நீதியை நிலைநாட்டுவதில் இடையூறுகளை ஏற்படுத்துவதை விடுத்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணைகளுக்கு தமது ஒத்துழைப்பை வழங்க முன் வர வேண்டும் என பிரவுண் கருத்து வெளியிட்டுள்ளார்.
மேலும் பிரம்டன் நகர மேயர் பிரவுண் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, பல்வேறு நாடுகளில் இனப்படுகொலைகளை மேற்கொண்ட சர்வாதிகாரிகளுடன் ஒப்பிட்டு கருத்து வெளியிட்டிருந்தார். இதில் அவர் கம்போடியாவின் சர்வாதிகாரி பொல் போட்டுடன் மகிந்தவை ஒப்பிட்டுள்ளமை முக்கிய விடயம்.
கம்போடிய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளராக விளங்கிய பொல் போட் மிகவும் கொடூரமான இனப்படுகொலைகளை நிகழ்த்திய ஒருவராக வரலாற்றில் பேசப்படும் ஒருவர்.
20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வெறுப்புக்குள்ளான கொடுங்கோலர்களில் ஒருவரான போல் போட் (டோல் சவுட் என்றும் போல் போர்த் என்றும் அழைக்கப்பட்டவர்).
இவர் கம்போடியாவில் இருக்கும் க்மெர் ரூஜ் என்ற அரசியல் வன்முறைக் கட்சியின் தலைவர். இவர் கம்போடியாவில் ஆட்சி செய்த 1975இலிருந்து 1979வரைக்குள் சுமார் 20 இலட்சம் மக்கள் இறப்புக்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1975இலிருந்து 1979வரை க்மெர் ரூஜ் கட்சி, கம்போடியத் தேசத்தை இரக்கமின்றி ஆண்டது. விவசாய கம்யுனிஸத்தை பரிசோதனை செய்து பார்க்கிறேன் என்று சுமார் 20 லட்சம் கம்போடியர்கள் கொல்லப்பட்டார்கள்.
பலர் பசி பட்டினியாலும், வியாதிகளாலும் இறந்தார்கள். அரசாங்கம் விவசாயத்தை பொது கூட்டமைப்பு ஆக உருவாக்க முனைந்தது.
இதைவிடவும் நேரடியாகவே க்மெர் ரூஜ் கட்சிக்குள் எதிர்ப்பாளர்களை கொல்வதிலும் பலர் இறந்தார்கள். வர்க்க எதிரிகள் என அடையாளம் காணப்பட்ட, வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சிறுதொழில் செய்பவர்கள், கடைகள் வைத்திருந்தவர்கள், வியாபாரிகள் என்று விவசாயிகளைத் தவிர மற்ற அனைவரும் வர்க்க எதிரிகளாகப் பார்க்கப்பட்டார்கள்.
எனவே இவர்கள் கொல்லப்பட்டார்கள். விவசாயம் பொதுக் கூட்டு அமைப்புக்குள் வருவதை எதிர்த்த சிறு விவசாயிகளும் வர்க்க எதிரிகளாகப் பார்க்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். பொதுக்கூட்டமைப்புக்குள்ளும் கட்டாய வேலை வாங்கப்பட்டதால் உடல்நலம் குன்றியவர்கள் நாட்டுக்கு பாரம் என்று கொல்லப்பட்டார்கள்.
இவ்வாறான கொடுங்கோலனுடன் மகிந்தவை ஒப்பிட்டு கனடா பிரம்டன் நகர் மேயர் தனது எக்ஸ் வலை தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
இது இன்னும் மகிந்த விசுவாசிகளை சீற்றமடையச் செய்துள்ளது. அதே வேளை இலங்கையில் இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை இந்த சம்பவம் தூசு தட்டியுள்ளது.
இவ்விடயத்தில் அநுர அரசாங்கத்துக்கு உருவாகியுள்ள அழுத்தம் அதிகம். அவர் இலங்கை இராணுவத்தை மாத்திரமின்றி மகிந்தவையும் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இந்த விடயத்தில் அவர் மெளனம் சாதித்தால் இனப்படுகொலையொன்று நாட்டில் இடம்பெற்றுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டதாகி விடும்.
பெளத்த பீடங்கள், இராணுவத்தினரின் குடும்பங்கள், சிங்கள பேரினவாதிகள் என மூன்று தரப்பினரையும் சமாளிக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் அநுரகுமார திசாநாயக்க.
-சி.சி.என்-