பிறந்த பெண் குழந்தையை புதைக்க முயற்சி.. கல்லூரி மாணவி, காதலனிடம் விசாரணை!
புதுக்கோட்டையில் பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை புதைக்க முயன்ற கல்லூரி மாணவியிடமிருந்து அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை புதைக்க முயன்ற போது, அழுகுரல் கேட்டதால் அருகில் இருந்தவர்கள் புதைக்கப்படவிருந்த சிசுவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்ன நடந்தது?
புதுக்கோட்டை மாவட்டம் உதயசூரியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோதா, இந்த பெண் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் சிலம்பரசன் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இந்த காதலில் அவர் கர்ப்பமாகி உள்ளார்.
இந்த சூழலில் இன்று வினோதாவுக்கு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. பிறந்த பெண் குழந்தையை தன் வீட்டின் முன்பாக புதைக்க முயன்றபோது குழந்தையின் அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து குழந்தையை மீட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பனையப்பட்டி காவல்துறையினர், மீட்கப்பட்ட பெண் சிசுவுக்கு பனையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.