உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் தேசிய அரசியலில் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆளும் கட்சியின் அதிகார பிம்பம் குறுகிய காலத்திற்குள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதற்கான பிரதிபலிப்புகள் வெளிப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மை மக்களின் ஆதரவையும் கடந்த தேர்தலில் கணிசமான அளவு அநுர அரசாங்கம் இழந்துள்ளது.
இதன் தாக்கம் அடுத்து வரக்கூடிய மாகாண சபை தேர்தலில் எதிரொலிக்கும். எனவே தற்போதைய அரசாங்கம் தனது பிம்பத்தை மீண்டும் தூக்கி நிறுத்த முக்கிய சில அரசியல் தீர்மானங்களை எடுக்க முற்பட்டாலும், பொருளாதார சவால்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தும்.
இவ்வாறானதொரு நிலையில், அரசாங்கம் பின்னடைவுகளை சந்தித்த உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் செயல்பட ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி ஆகிய இரு பிரதான தேர்தல்களை கடந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுடன் எதிரணிகள் ஒன்றிணைய தீர்மானித்துள்ளன.
மஹிந்த யாபா பொறுப்பில் எதிரணி
ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை கிடைக்கப்பெறாத உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கலந்துரையாடினர். இந்த கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
அதிகாரத்தை கைப்பற்ற கூடிய அனைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கான எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பெயர்களை பட்டியலிடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க கட்சிகளின் செயலாளர்கள் இணக்கப்பாட்டை தெரிவித்துள்ளதுடன், இந்த வாரம் இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சிகளை ஓரணியில் அணிவகுக்கும் பணியை முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்து பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் நிமல் சிறிபால டி சில்வா, துமிந்த திசாநாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணி சார்பில் அநுர பிரியதர்ஷன யாப்பா, தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் அதன் தலைவர் பழனி திகாம்பரம், ஜனநாயக மக்கள் முன்னணி மனோ கணேசன், பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமான் உட்பட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.
இந்த அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைப்பது, எதிர்க்கட்சிகள் வெற்றிப்பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் என அனைத்து வகையான செயல்பாடுகளையும் கண்காணிக்கும் பொறுப்பினை பணியை முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அங்கிகாரத்தை கலந்துரையாடலில் பங்கேற்ற ஏனைய கட்சிகள் வழங்கியுள்ளதுடன், உள்ளூராட்சி சபைகளில் கூட்டாட்சியை நடத்தவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
ரணிலின் தந்திரம்
உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் முடிவுகளின் பின்னர் அரசியல் ரீதியில் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஐக்கிய தேசிய கட்சி உட்பட ஏனைய எதிர்க்கட்சிகள் முன்வைத்திருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க அமைதியானதொரு நிலைப்பாட்டிலேயே இருந்தார்.
தேர்தல் முடிவடைந்த உடன் இந்தியாவுக்கு விஜயம் செய்தார். பெரும்பாலான உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகளுக்கு ஆட்சி அமைக்க கூடிய வாய்ப்புகள் இருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்க அது குறித்து எவ்விதமான கருத்தையும் கூறவில்லை.
எனவே ரணில் விக்கிரமசிங்கவின் இந்த மௌனம் அவருடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறானதொரு நிலையில், உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரடியாகவே வினாவியிருந்தார். இதன் போதும் கூட ‘ பொறுங்கள் பார்ப்போம்’ என கூறிவிட்டு இந்திய விஜயத்திற்கு தயாரானார்.
ஆனால் இந்திய விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய உடனேயே, அரசாங்கம் தோல்வி அடைந்த அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் அதிகாரத்தை கைப்பற்றும் வியூகத்தை முன்னெடுத்தார்.
இதன் பின்னரே கொழும்பு – 7 இல் அமைந்துள்ள அரசியல் அலுவலகத்திற்கு அனைத்து கட்சிகளையும் அழைக்கும் பொறுப்பு முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பாவிடம் கையளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இரு விடயங்களை ரணில் வெளிப்படையகவே கூறினார்.
அதாவது, ‘ கண்ட கண்ட இடங்களில் சந்திக்க வேண்டாம், பிளவுப்பட்டு பேசவும் வேண்டாம். இந்த இரண்டிலும் எவ்விதமான பலனும் ஏற்படப் போவதில்லை. எனவே எதுவாக இருந்தாலும் ஒரு இடத்தில் கூடி பேசி தீர்மானியுங்கள். அந்த தீர்மானம் எதுவாக இருந்தாலும் வெற்றிக்கொள்ள முடியும்’ என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மஹிந்த – ரணில் சந்திப்பு
எதிர்க்கட்சி பிரதிநிதிகளை புதன்கிழமை அன்று சந்திப்பதற்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று விஜேராம இல்லத்தில் நடைபெற்றது.
இதன் போது நாமல் ராஜபக்ஷவும் இருந்துள்ளார். சமகால அரசியல் விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது. குறிப்பாக வலுவானதொரு எதிர்க்கட்சியை உருவாக்குவது குறித்து பேசப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் மாத்திரமன்றி மக்கள் மத்தியிலும் நம்பிக்கையை வெல்லக் கூடிய வகையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் தேவை நாட்டில் உள்ளது என ரணில் விக்கிரமசிங்க கூற, இதற்கு பதிலளித்த மஹிந்த ராஜபக்ஷ, பிரிந்து சென்று கூச்சலிடுவதால் பலனில்லை என கூறியுள்ளார். இந்த செய்தியினையே எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ரணில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்து ரணில் விக்கிரமசிங்க அவதானம் செலுத்தி இருந்தார். சுமார் 4 ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவம் செய்து வெற்றிப்பெற்றுள்ளனர்.
அத்துடன் கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் கட்சிகள் பெற்ற வாக்கு வீதங்கள் குறித்தும் மதிப்பீடு செய்திருந்தார். இந்த தகவல்களுடனேயே மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரிதிநிதிகள் சந்திப்புகளில் ரணில் பங்கேற்றிருந்தார்.
மறுக்க முடியா நிலையில் சஜித்
எவ்வாறாயினும் உள்ளூராட்சி சபைகளில் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போது, அதனை தவிர்க்க முடியாத நிலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஏற்பட்டுள்ளது.
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கொண்ட வலுவானதொரு ஆளும் கட்சிக்கு எதிராக, அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்படும் முதலாவது விடயமாக குறிப்பிட்ட சில உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகளின் ஆட்சி நடைபெறவுள்ளமையினால் அதற்கு ஆதரவாக ரணிலின் அழைப்பை ஏற்று பெரும்பாலான கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளன.
அரசியல் ரீதியிலான இந்த அணுகலை பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டணியமைத்துள்ள கட்சிகளும் வரவேற்றுள்ளன. பழனி திகாம்பரம் மற்றும் மனோ கணேஷன் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சியின் பங்காளிகள் ரணிலின் அழைப்பை ஏற்று கலந்துரையாடலில் பங்கேற்றமையினால் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மறுத்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது.
அதே போன்று ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த தலைவர்கள் பலரும் ஒன்றிணைவுக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். எனவே ரணில் விக்கிரமசிங்க மீதுள்ள அரசியல் எதிர்ப்புகளை தாண்டி ஒருமித்த பயணத்திற்கு பச்சைக்கொடி காட்டும் நிலைப்பாட்டிற்கு சஜித் வந்துள்ளார்.
அநுரவின் எச்சரிக்கை
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) 60 ஆண்டு நிகழ்வில் அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரை குறித்து ஆளும் கட்சிக்குள்ளும் எதிர்க்கட்சிகள் மத்தியிலும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நிறைவேற்று அதிகாரமும், மூன்றில் இரண்டு பெறும்பான்மையும் இருப்பதால் புதிய சட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற எச்சரிப்பை எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்தார். அதிகாரத்தின் மீதான உச்சகட்ட மோகத்தினை அவர் வெளிப்படுத்தியுள்ளதாக கூறும் எதிர்க்கட்சி, அன்றும் இன்றும் காட்டிக்கொடுத்த துரோகிகள் இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்தமையை சுட்டிக்காட்டியது.
அவ்வாறாயின் இன்றுள்ள துரோகிகள் யாரென்பதை ஜனாதிபதி அநுர வெளிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள வலியுறுத்தியுள்ளார். எனவே ஜே.வி.பி சம்மேளனத்தில் ஜனாதிபதியின் உரை தேசிய அரசியலில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆளும் கட்சியின் குழப்பம்
மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) ஆளும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையிலான முரண்பாடுகள் குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது.
ஜே.வி.பி யின் 60 ஆவது சம்மேளனத்தில் அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய உரையில் இந்த முரண்பாடுகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தமையை உணர முடிகிறது. ஜே.வி.பி இருந்திருக்காவிடின், ஒரு சிலர் பதவிகளுக்கே வந்திருக்க முடியாது. எனவே அன்றும் இன்றுமான துரோகங்களை கடந்து செல்ல வேண்டியதுள்ளது என அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
பிரதமர் ஹரினி அமரசூரிய உட்பட தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்த முக்கியஸ்தர்கள் பலர் இந்த சந்தர்ப்பத்தில் பிரதான மேடையில் இருந்தனர்.
எம்மை ஜே.வி.பி உறுப்பினர் என அழைக்க வேண்டாம் என்று பிரதமர் ஹரிணி மற்றும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளிப்படையாகவே குறிப்பிட்டிருந்தனர்.
இதனை கண்டித்திருந்த ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களை ஜே.வி.பி தலைமையகத்திற்கு அழைத்து, ஜே.வி.பி உறுப்பினர்கள் என்று கூற விரும்பாவிடின், பாதிப்பு ஏற்படுத்தாதவாறு பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தது.
ஆனால் ஜே.வி. பியின் உத்தரவை எந்தளவு தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகங்கள் உள்ளன.
ஏனெனில் ஜே.வி.பி ஆட்சி அதிகாரத்தை அடைவதற்கான பிம்பத்தை தேசிய மக்கள் சக்தியே உருவாக்கியது என்றும். அரசாங்கத்தில் கூடுதலான அதிகாரம் தம்வசம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
அதாவது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 159 பேரில் ஜே.வி.பி உறுப்பினர்கள் 60 பேர் மாத்திரமே உள்ளனர். ஏனைய அனைத்து உறுப்பினர்களுமே தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். எனவே நாளுக்கு நாள் உள்வீட்டு மோதல்கள் வலுப்பெற்று வருகின்றன.