அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்கால வருகை உலக அரசியல், பொருளாதார, இராணுவ சமநிலையில் பாரிய குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆனால் அதற்குள் அமெரிக்காவில் நீண்டு நிலைத்திருக்கும் வல்லரசு ஆதிக்க கொள்கை ஒன்றுக்கான வெளியுறவு மற்றும் இராணுவ நகர்வுகளும் அவரது நடவடிக்கையால் மேல்நிலைப்படுத்தப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியின் மேற்காசிய நாடுகளுக்கான அண்மைய அரசமுறை விஜயம் பாரியளவிலான எதிர் நிலைகளை ஏற்படுத்தி உள்ளது. இப்பகுதியும் சமகாலத்தில் போருக்குள் சமாதானத்தை தேடும் டொனால்ட் ட்ரம்பின் உபாயங்களை தேடுவதாக உள்ளது.

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக் காலப்பகுதியில் ரஷ்யா– உக்ரைன் போர், இஸ்ரேல்- – ஹமாஸ் போர், இந்தியா – பாகிஸ்தான் போர் என மூன்று முக்கிய போர்களால் உலக அரசியலின் புதிய சூழலைத் தோற்றுவித்ததாக உள்ளது.

இதில் டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வருகை தர முன்பே சமாதானம் பற்றிய உரையாடலை வலியுறுத்தி இருந்தார்.

அனைத்து போர்களையும் முடிவுக்கு கொண்டு வரும் பிரசாரத்தோடு அவரது அரசியல் ஒத்திகை அமைந்திருந்தது. ஆனால் அதில் அவர் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தினாரா என்பது கேள்விக்குரியது. அதற்கான அடிப்படைகளையும் முக்கியத்துவத்தையும் விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது டொனால்ட் ட்ரம்ப்; ஆட்சிக்கு வருகை தந்த பிற்பாடு நிகழ்ந்த இந்தியா – பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்திருப்பது ட்ரம்ப்பை முன்னிலைப்படுத்த உதவியிருக்கின்றது.

அவ்வாறே அதனை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சீனாவுடனான வரிப் போரிலும் உலக நாடுகள் உடனான வரிக் கொள்கையாலும் அதிக பின் தள்ளப்பட்ட நிலையில் இருந்த டொனால்ட் ட்ரம்ப்; இந்தியா பாகிஸ்தானியப் போரை நிறுத்தியதன் மூலம் தன்னை உலகத்தின் முன் வலிமையான தலைவராக நிறுத்துவதில் வெற்றி கண்டுள்ளார்.

இதுவே அவரது மேற்காசிய விஜயத்துக்காக அடிப்படையாகவே தெரிகிறது. அவரது ஆட்சிக் காலத்தில் தனது முதல் அரச முறை பயணத்தை சவுதிஅரேபியா நோக்கி மேற்கொண்டு இருந்தார்.

அதன் அடிப்படையிலேயே அவரது சவுதிஅரேபியா பயணம் முக்கியத்துவம் பொருந்தியதாக அமைந்துள்ளது.

இந்திய-ா – பாகிஸ்தான் போரை நிறுத்திய தலைவர் என்ற அடிப்படையில் அவர் உலகளாவிய ரீதியில் சமாதானத்தை கட்டமைப்பதற்கு முயற்சிக்கிறார். இதன் மூலமே ஏனைய நாடுகளின் விஜயத்தின் போதும் சமாதானத்திற்கான வாய்ப்பு கொடுப்பதாக அவரது நகர்வுகள் அமைந்திருந்தது.

சவுதிஅரேபியாவோடு ஆயுத தளபாடங்கள் சார்ந்து 110 பில்லியன் அமெரிக்க டொலருக்கு உடன்பாடு செய்ததோடு பெரிய அளவிலான ஒத்துழைப்பையும் வர்த்தக உறவையும் கட்டி எழுப்பியிருந்தார்.

சவுதிஅரேபியா, ஜோர்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட டொனால்ட் ட்ரம்ப் மேற்காசிய நாடுகளுக்கு இடையிலான நெருக்கத்தையும் அதேநேரம் இஸ்ரேலுக்கான ஆதரவையும் கட்டமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மறுபக்கத்தில் ஈரானை தனிமைப்படுத்தவும் எச்சரிக்கை செய்யவும் அவரது மேற்காசிய விஜயம் உதவியுள்ளது.

இரண்டாவது உக்ரைன்- – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வரும் பேச்சுக்களுக்கு முன்னுரிமை கொடுத்த டொனால்ட் ட்ரம்பின் துருக்கிய தலைநகரான இஸ்தான்புல் பேச்சுவார்த்தையை அவர் மேற்காசியாவில் விஜயத்தை நிறைவு செய்கின்ற போது தொடங்குவதற்கான புறச் சூழலை ஏற்படுத்தியிருந்தார்.

தலைவர்கள் உடனான சந்திப்பை தவிர்த்தாலும் மூன்று வருடங்களுக்கு பின்னர் இருதரப்பும் போர் நிறுத்தம் தொடர்பில் ஓர் உரையாடலை தொடக்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் நிலைத்திருப்பு சாத்தியமாகிறதா? இல்லையா? என்பதற்கு அப்பால் சமாதான பேச்சுவார்த்தை ஏற்பாடுகளை ட்ரம்ப் தொடக்கியுள்ளார்; என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் உக்ரைன்- – ரஷ்யா போரை சுமூகமாக தீர்த்துக் கொள்ள முடியும் என்ற உபாயத்தை உலகத்துக்கு முன் நிறுத்தியுள்ளார்.

ஆனால் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உத்தியாக அது அமையுமா என்பது கேள்விக்குரியதேயாகும்.

அது மட்டுமின்றி உக்ரைனுக்கு ஜெர்மனி உட்பட ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோ நாடுகள் பாரியளவு ஆயுதங்களை வழங்கப் போவதாகவும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்ய ஜனாதிபதி; உடன்பட தவறுகின்ற பட்சத்தில் போரை ஐரோப்பா நீடிக்குமென்றும் ரஷ்யா உடனான எரிவாயு மற்றும் எண்ணெய் இறக்குமதியை முற்றாக தடுக்க போவதாகவும் ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கை செய்துள்ளன.

மூன்றாவது இஸ்ரேல்- – ஹமாஸ் போரில் சமாதானத்துக்கான அதிக பக்கங்களை டொனால்ட் ட்ரம்பின்; மேற்காசிய விஜயம் வெளிப்படுத்தியிருந்தது. ஹமாஸ், இஸ்ரேலிய-, அமெரிக்க இராணுவ வீரர் ஒருவரை நீண்ட காலத்துக்குப் பின்னர் விடுவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அது மட்டுமல்லாது டோகாவில் இரு தரப்புக்குமான பேச்சுவார்த்தைக்கான நகர்வுகள் நிகழ்ந்து வருகின்றமை டொனால்ட் ட்ரம்ப் மேற்காசிய நாடுகளுக்கான பயணத்தின் போது நிகழ்ந்த இன்னொரு சமாதான முயற்சியாகும்.

அதிக சமாதான முயற்சிகள் இஸ்ரேல் ஹமாஸ் தரப்பை உரையாட முன்னிறுத்தி இருப்பது அவரது வெற்றியாக அமைந்தாலும் நடைமுறையில் அப்போர் முடிவுக்கு வருமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அது பெரும் அளவுக்கு போராக அளவீடு செய்வதை விட பலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் அழிப்பு என குறிப்பிடுவது பொருத்தமானது.

ஹமாஸ் தரப்பு பிடித்துச் சென்ற பணயக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதும் ஹமாஸை அழிப்பதும் போன்ற இலக்கோடு பல பாலஸ்தீனர்களை அழித்து வரும் இஸ்ரேல், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிகிறது.

அடிப்படையில் இப்போரின் வடிவங்கள் அனைத்தும் ஹமாஸை அல்லது காசாவில் இருந்து முற்றாகவே பாலஸ்தீனர்களை வெளியேற்றுவதையே நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது.

அதனை முன்மொழிந்த பிரதான தலைவராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பே காணப்படுகிறார் என்பது அவரது சமாதானத்தின் அர்த்தம் தெரிகிறது. காசா நிலப்பரப்பை இஸ்ரேலிய – அமெரிக்கா கூட்டின் கைகளுக்குள் கொண்டு வருவதே நோக்கமாக இருக்கின்றது.

பெருமளவுக்கு ஹமாஸ், இஸ்ரேல் பேச்சுவார்த்தை போரை முடிவுக்கு கொண்டு வர உதவுமா? என்பது கேள்விக்குரியது. அதற்கான அடிப்படைக் காரணம் இஸ்ரேலின் புவிசார் அரசியலில் இருக்கும் பாதுகாப்பு அரணாகும். குறிப்பாக காசாவை நோக்கிய பாதுகாப்பே இஸ்ரேலின் இருப்பாகும்.

எனவே பரஸ்பரம் இரு நாடுகளும் போரை முடிவுக்கு கொண்டு வருகின்ற சூழல் அரிதாகவே தென்படுகிறது. உலக சூழலில் இந்திய- பாகிஸ்தான் போன்று இலகுவாகவும் விரைவாகவும் ஒரு போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரையின் – ரஷ்யா இடையிலும் இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலும் முடியாது என்பது அதன் புவிசார் அரசியல் இருப்பில் தங்கியுள்ளது. அத்தகைய இருப்புக்கு முன் இப்போது சமாதானத்தை நகர்த்துவது கேள்விக்குரியதே.

அதனை கடந்து போரில் முனைப்பு செலுத்தும் அரசுகளின் விட்டுக் கொடுப்பும் அவற்றின் மீதான நெருக்கடியும் சாத்தியமாகும் பொழுதே அதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.

இஸ்ரேலின் வெற்றி என்பது அமெரிக்காவின் வெற்றியாகவே இஸ்ரேலினால் பார்க்கப்படும். அதேபோன்று உக்ரைனின் அமைதி என்பது அமெரிக்காவின் உக்ரைனிடமிருந்து பெறப்படுகின்ற வளங்களை பாதுகாப்பதற்கான அல்லது பேணுவதற்கான நகர்வாகவே அமைந்திருக்கின்றது.

இந்த அடிப்படையிலே இந்தியா – பாகிஸ்தான் போரின் சமாதான முயற்சி என்பது சீனாவின் இராணுவ பலத்தில் தங்கி இருந்ததென்று மதிப்பிடல் தவிர்க்க முடியாதது.

இந்திய-ா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தில் இந்தியா வெற்றி பெற்றது என்பதை விட அமெரிக்கா சீன தரப்புகளுக்கு இந்த போரில் அதிக இலாபங்களை அடைந்திருக்கின்றன.

அத்தகைய இலாபத்தின் நிமித்தமே இந்தியா – பாகிஸ்தானிய யுத்த நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. அதனை ஹமாஸ்- இஸ்ரேலிய போருடனும் உக்ரைன்- – ரஷ்யப் போருடனும் ஒப்பீடு செய்ய முடியாது.

இஸ்ரேலும் ரஷ்யாவும் பலமான சக்திகள் என்பதை நிராகரித்துவிட்டு எப்போதும் சமாதான முயற்சியை சாத்தியப்படுத்த முடியாது.

கே.ரீ. கணேசலிங்கம்-

Share.
Leave A Reply