அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனை அமெரிக்க, இஸ்ரேலிய ஊடகங்கள் உட்பட பல சர்வதேச ஊடகங்கள் கடந்த இரண்டு வாரங்களாகக் கூறி வருகின்றன.
ஆனால் அமெரிக்க – இஸ்ரேல் உறவில் விரிசல் என்ற கதையை உலகில் பெரும்பாலான மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு நெருக்கமானதாகும்.
இருந்த போதிலும், கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளும் அமெரிக்க, இஸ்ரேலிய உயரதிகாரிகள் தெரிவிக்கும் கருத்துகளும் இரு தரப்புக்கும் இடையில் முறுகல் அல்லது விரிசல் ஏற்பட்டிருப்பதை வெளிப்படுத்துகின்றன.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவி ஏற்றதும், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிறுத்தி வைத்த 2000 இறாத்தல் நிறை கொண்ட குண்டுகளையும் ஏனைய ஆயுத தளவாடங்களையும் இஸ்ரேலுக்கு தாராளமாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்தார்.
ஈரான் அணுவாயுதத்தைப் பெறுவதை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரு போதும் அனுமதிக்கப் போதில்லையென ஜனாதிபதி ட்ரம்ப்பும் பிரதமர் நெதன்யாகும் பகிரங்கமாக அறிவித்தனர்.
‘அணுசக்தி தொடர்பில் தம்முடன் ஈரான் ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். இல்லாவிட்டால் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்படும்’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டார்.
ஈரானோ, “அழிவு தரும் அணுவாயுதங்களை நாம் தயாரிக்கவில்லை. அதனை வைத்திருக்கவோ பயன்படுத்தவோ தயாரிக்கவோ இஸ்லாத்தில் இடமில்லை” என்று மீண்டும் மீண்டும் கூறிவருகிறது.
“எம்மீது விதிக்கப்பட்டு முன்னெடுக்கப்படும் தடைகள், நெருக்குவாரங்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை சாத்தியமில்லை” என்றுள்ள ஈரான், தமது அணுசக்தி குறித்து அமெரிக்காவுடன் மறைமுகமாகப் பேச முடியும். அதற்கு ஒமானை மத்தியஸ்தராக அமர்த்திக் கொள்ளலாம் எனவும் கூறியது.
அமெரிக்கா நேரடிப் பேச்சை வலியுறுத்திய சூழலில், ஈரான் மறைமுகப் பேச்சுக்கு இணங்கியது. அதற்கேற்ப கடந்த ஏப்ரல் 12 ஆம் திகதி முதலாவது பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
அப்பேச்சுவார்த்தை சாதகமாகவும் முன்னேற்றகரமாகவும் அமைந்திருந்ததாக இருதரப்பினரும் குறிப்பிட்டதோடு, அடுத்த பேச்சுவார்த்தைக்கும் திகதியை நிர்ணயித்தனர்.
இதனை தமக்கு திருப்தி அளிக்கும் அறிவிப்பாகக் கருதாத இஸ்ரேல், ஈரானின் அணு உலைகள் மீது தனித்து நின்றாவது தாக்குதல் நடத்தும் நகர்வுகளை முன்னெடுத்தது.
அதற்கு அனுமதி வழங்காத அமெரிக்கா, அத்தகைய தாக்குதல் தமக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெறும் பேச்சைக் குழப்புவதற்கு வழிவகுக்கும் எனக் கருதியது. எனினும் வாரம் ஒரு தடவை என்றபடி அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் 4 தடவை பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று நிறைவடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹுதிக்களுடன் அமெரிக்க ஒப்பந்தம்:
மேலும் காசா யுத்தம் ஆரம்பமானது முதல் அப்போரை நிறுத்தக்கோரி இஸ்ரேல் மீது ஹுதிக்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர்.
யெமன், இஸ்ரேலில் இருந்து 2000 கிலோ மீற்றர் அப்பால் இருப்பதால் கடந்த 2024 ஜனவரி முதல் ஹுதிக்களின் தாக்குதலுக்கு அமெரிக்கா பதில் தாக்குதல் நடத்திவர,
இஸ்ரேல் காசாவின் ஹமாஸுக்கு மேலதிகமாக லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் சிரியா மீது தாக்குதல்களை முன்னெடுக்கிறது.
ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் Operation Rough Rider என்ற பெயரில் கடந்த மார்ச் 15 முதல் ஹுதிக்களுக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வான்தாக்குதல்களை அமெரிக்கா தொடராகவும் தீவிரமாகவும் முன்னெடுத்தது. இருந்தும் ஹுதிக்களின் தாக்குதல்கள் குறையவில்லை.
ஆனால் மார்ச் 15 முதல் மே முதல் வாரம் வரையும் அமெரிக்காவின் 30 மில்லியன் டொலர் பெறுமதியான 07 ரீப்பர் ட்ரோன்களை ஹுதிக்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
அத்தோடு ஹுதிக்கள் மீது வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்த விமானம் தாங்கிப் போர்க்கப்பலின் 60 மில்லியன் டொலர் பெறுமதியான 02 ஜெட் விமானங்களும் இழக்கப்பட்டுள்ளன.
இக்காலப்பகுதியில் ஹுதிக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு சுமார் ஒரு பில்லியன் டொலர் செலவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா ட்ரம்ப் நிர்வாகத்தினால் மதிப்பிடப்பட்டுள்ளது,
இவ்வாறான நிலையில் கடந்த 06 ஆம் திகதி முதல் ஹுதிக்களுடன் யுத்தநிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டது அமெரிக்கா.
இதன்படி, பிராந்தியத்தில் அமெரிக்க நலன்கள் மீது ஹுதிக்கள் தாக்குதல்களை நிறுத்துவதற்கு ஈடாக ஹுதிகளுக்கு எதிரான தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்தும். பிராந்தியத்தில் அமெரிக்க போர்க்கப்பல்கள் அல்லது வணிகக் கப்பல்களைத் தாக்காமல் இருப்பதற்கான அவர்களின் (ஹுதிக்களின்) உறுதிப்பாட்டை அமெரிக்கா மதிக்கும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தை விரும்பாத இஸ்ரேல், இது தொடர்பில் அமெரிக்காவை விமர்சித்துள்ளது.
அதனால் இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதுவர் மைக் ஹக்கபி, ‘ஹுதிக்களுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இஸ்ரேலின் ஒப்புதல் அமெரிக்காவுக்கு தேவையற்றது’ என்று இஸ்ரேலின் செனல் 12 இற்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
‘இந்த ஒப்பந்த அறிவிப்பு தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக இஸ்ரேலிய அதிகாரியொருவர் சி.என்.என் இடம் கூறியுள்ளார். இந்நிலையில் இஸ்ரேலிய பிரதமர், யெமனின் ஹுதிக்களுக்கு எதிராக தாம் தனியாக தம்மைத் தற்காத்துக் கொள்ளப் போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
அமெரிக்க ஏற்பாட்டில் காசாவில் மனிதாபிமான உதவிகள்:
மேலும் காசாவுக்கு கடந்த மார்ச் 2 ஆம் திகதி முதல் உணவு, குடிநீர், மருந்து உள்ளிட்ட எந்த மனிதாபிமான உதவியும் செல்ல இடமளிக்கப்படாதுள்ளது. அங்கு தீவிர உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மக்கள் பட்டினிச்சாவுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மனிதாபிமான உதவிகளை தமது படையினரைக் கொண்டு முன்னெடுக்கப் போவதாக இஸ்ரேல் குறிப்பிட்டது. இருந்தும் அதற்குரிய நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படவில்லை.
இது இவ்விதமிருக்க, ட்ரம்ப் மத்திய கிழக்கு நாடுகளான சவுதி, கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயத்தை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பித்தார்.
இவ்விஜயத்தின் நிகழ்ச்சி நிரலில் அவர் இஸ்ரேலுக்கு செல்லும் திட்டமில்லை. ஆனால் மத்திய கிழக்குக்கான பயணத்திற்கு முன்னர் காசாவில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கு கடும் அழுத்தங்களை இஸ்ரேல் மீது அமெரிக்கா பிரயோகித்ததாக இஸ்ரேலிய ஊடகமான கார்ட்ஸ் அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டிருந்தது.
ஜெரூஸலம் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியொன்றில், காசாவிலுள்ள பணயக் கைதிகளின் உறவினர்களை அண்மையில் சந்தித்த ட்ரம்ப், யுத்தநிறுத்தப் பேச்சுவார்த்தை இடைநிறுத்தப்பட்டமைக்கான இஸ்ரேலின் நிலைப்பாடு குறித்து கவலை தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் அமெரிக்காவின் மத்திய கிழக்குக்கான தூதுவர் ஸ்டெவ் விக்கொப், “நாம் காசாவிலுள்ள பணயக் கைதிகளை விடுவிக்க வேண்டும்.
ஆனால் யுத்தத்தை முடிக்க வேண்டிய எண்ணத்தில் இஸ்ரேல் இல்லை” என்றுள்ளார். இஸ்ரேலின் முன்னாள் படை வீரர்கள் சுமார் 550 பேர் கையெழுத்திட்டு காசாவிலுள்ள பணயக் கைதிகளை விடுவிக்கும் யுத்தநிறுத்தத்திற்கு செல்ல இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்பி இருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தச் சூழலில் ஹமாஸுடன் அமெரிக்கா நேரடியாக மேற்கொண்ட பேச்சுவார்த்தை மற்றும் ஜனாதிபதி ட்ரம்பின் மத்திய கிழக்குக்கான விஜயம் என்பவற்றை மதித்து அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள இஸ்ரேலிய வீரர் ஐடன் அலெக்சான்டரை எவ்வித நிபந்தனைகளும் இன்றி கடந்த திங்களன்று ஹமாஸ் விடுவித்தது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த நெதன்யாகு, “மற்றைய நாடுகள் இஸ்ரேலின் பின்னால் இருந்து ஹமாஸுடன் ஒப்பந்தங்களைச் செய்கின்றன.
எங்களுக்குத் தெரியாமல் ஒப்பந்தங்களைச் செய்வது இஸ்ரேலிய சமூகத்திற்கு ஒரு மோசமான செய்தியைக் கொண்டு செல்கிறது” என்றுள்ளார்.
இவ்வாறு அமெரிக்க – இஸ்ரேல் உறவில் கடந்த இரண்டொரு வாரங்களாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் இருதரப்பு உறவில் விரிசலை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஏனெனில் அமெரிக்காவின் மிக நெருங்கிய நட்புநாடு இஸ்ரேல். அதனை ஐ.நாவில் அங்கீகரித்த முதல் நாடாக விளங்கும் அமெரிக்கா அன்று தொடக்கம் இஸ்ரேல் பொருளாதாரத்திற்கு வருடா வருடம் 3.8 பில்லியன் டொலர்களை வழங்கி வருகிறது.
அதிலும் குறிப்பாக 2023 ஒக்டோபரில் காசா யுத்தம் ஆரம்பமான பின்னர் பைடன் பதவியில் இருக்கும் வரையும் இந்த 3.8 பில்லியன் டொலருக்கு மேலதிகமாக சுமார் 14 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளார். ஆயுத உதவிகள் தாராளமாக வழங்கப்படுகின்றன. அதனால் இஸ்ரேல் – அமெரிக்க உறவு எவ்வாறு அமையும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மர்லின் மரிக்கார்