இலங்கை அகதிக்கு இந்தியாவில் தஞ்சம் அளிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ள உச்ச நீதிமன்றம், 140 கோடி மக்கள்தொகையே அதிகம் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் 7 ஆண்டு சிறைத்தண்டனை முடித்த இலங்கைத் தமிழருக்கு இந்தியாவில் தஞ்சம் அளிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. மேலும், 140 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா போராடி வரும் நிலையில், இது ஒரு தர்மசத்திரம் அல்ல என்று நீதிபதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக (LTTE) போராடியதால் இலங்கையில் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், நாடு திரும்பினால் அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்படலாம் என்றும் வாதிட்டார். மேலும், மனுதாரரின் மனைவி மற்றும் குழந்தைகள் இந்தியாவில் வசித்து வருவதாகவும், அவர் ஒரு அகதி என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும், நீதிபதி தீபங்கர் தத்தா தலைமையிலான அமர்வு, மனுதாரருக்கு இந்தியாவில் தங்குவதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று கேள்வி எழுப்பியது. மேலும், “உலகம் முழுவதிலுமிருந்து வரும் அகதிகளை இந்தியா வரவேற்க வேண்டுமா? நாங்கள் 140 கோடி மக்கள்தொகையுடன் போராடிக் கொண்டிருக்கிறோம். இது உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டினரை உபசரிக்கும் தர்மசத்திரம் அல்ல,” என்று நீதிபதி திட்டவட்டமாக கூறினார்.

சுமார் 3 ஆண்டுகளாக மனுதாரர் எந்த நாடுகடத்தல் நடவடிக்கையும் இல்லாமல் காவலில் வைக்கப்பட்டிருப்பது குறித்து வழக்கறிஞர் சுட்டிக்காட்டியபோது, எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை என்றும், சட்டத்தின்படிதான் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றம் பதிலளித்தது.

மேலும், மனுதாரர் இலங்கைக்குத் திரும்ப முடியாத நிலையில், அவர் வேறு நாட்டிற்குச் செல்வதைக் கருத்தில் கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த அதிரடியான தீர்ப்பு, இந்தியாவில் தஞ்சமடைய விரும்பும் வெளிநாட்டினர் மத்தியில் ஒரு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply