சட்டவிரோத குடியேற்றங்களை ஊக்குவிப்பதாகக் கூறி இந்திய பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் முகவர்கள் மீது அமெரிக்கா விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்க குடியேற்றச் சட்டங்கள் மற்றும் கொள்கைகளைச் செயல்படுத்தவும், சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், அமெரிக்கர்களைப் பாதுகாக்கவும் இது முக்கியமானது” என்று கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், விசா கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து அமெரிக்கா எந்த தகவலையும் வழங்கவில்லை. எந்த பயண முகவரின் பெயரோ அல்லது எந்த பயண நிறுவனத்தின் பெயரோ குறிப்பிடப்படவில்லை.
இந்த ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்கா சில இந்தியர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறி விமானம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பியது.
அமெரிக்காவின் இந்த முடிவுக்கு இந்தியா அதிகாரப்பூர்வமாக பதிலளிக்கவில்லை.
ஆனால் கேள்வி என்னவென்றால், இந்த முடிவு இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்ல விரும்புவோரிடம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான்.
இந்த ஆண்டு பிப்ரவரியில், அமெரிக்கா சில இந்தியர்களை ‘சட்டவிரோத குடியேறிகள்’ என்று கூறி விமானம் மூலமாக இந்தியாவிற்கு அனுப்பியது.
திங்களன்று, இந்திய பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் முகவர்களுக்கு விசா வழங்குவதற்கு தடை விதிப்பது குறித்த விவரங்களை வழங்கும் ஒரு செய்திக்குறிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டது .
“அமெரிக்காவிற்கு சட்டவிரோத குடியேற்றத்தை வேண்டுமென்றே ஊக்குவித்ததற்காக இந்தியாவில் உள்ள பயண நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்க வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சட்டவிரோத குடியேற்றம் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுவோரை முன்கூட்டியே அடையாளம் காணும் பணியில், மிஷன் இந்தியாவின் தூதரக விவகார பிரிவு மற்றும் ராஜீய பாதுகாப்பு சேவை, எங்களது தூதரகம் மற்றும் துணைத் தூதரகங்களில் ஒவ்வொரு நாளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது”என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பயண முகவர்கள் சட்டவிரோத குடியேற்றத்துக்கு எவ்வாறு உதவினார்கள் என்பதை அந்த செய்திக்குறிப்பு விளக்கவில்லை.
வெளிநாட்டு கடத்தல் வலையமைப்பை ஒழிக்க பயண நிறுவனங்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 212(a)(3)(C) இன் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“அமெரிக்காவிற்கு வருகை தரும் இந்திய குடிமக்கள் அந்த நாட்டில் அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகமாக தங்கியிருக்க வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
அவ்வாறு செய்தால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவதுடன், மீண்டும் நாட்டிற்குள் நுழைவதற்கு நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள்” என்று புது டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் பலமுறை கூறியுள்ளது .
அமெரிக்காவின் முடிவின் தாக்கம் என்னவாக இருக்கும்?
கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி, அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை ஏற்றி வந்த அமெரிக்க ராணுவ விமானம் அமிர்தசரஸ் வந்தடைந்தது.
இந்த ஆண்டு ஜனவரியில் அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், தேர்தல் பிரசாரத்தின் போது சட்டவிரோத குடியேறிகள் தொடர்பாக கடுமையான கொள்கையை கடைபிடிக்க உறுதியளித்திருந்தார்.
ஆட்சிக்கு வந்தவுடன், டிரம்ப் இந்த வாக்குறுதியை செயல்படுத்துவதைக் காண முடிகிறது.
பல நாடுகளின் குடிமக்களை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி அவர்களின் நாடுகளுக்கு டிரம்ப் திருப்பி அனுப்பினார்.
தற்போது டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவு அமெரிக்காவின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கை சார்ந்தது.
இந்திய பயண முகவர்கள் சங்கம் (TAAI) என்பது இந்தியாவில் பயண முகவர்கள் மற்றும் சுற்றுலா வணிகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தொழில்முறை அமைப்பு.
பராஸ் லக்கியா என்பவர் இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் (TAAI) பொருளாளராக உள்ளார்.
பிபிசியிடம் பேசிய பராஸ் லக்கியா, டொனால்ட் டிரம்பின் முடிவு குறித்து கவலை தெரிவித்தார்.
“இந்த முடிவு நிச்சயமற்ற தன்மையால் நிறைந்துள்ளது. பெரும்பாலான இந்தியர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அமெரிக்காவில் வசிக்கின்றனர். எனவே இந்தியாவிலிருந்து பயணிப்பவர்களுக்கு அமெரிக்கா முக்கிய நாடுகளில் ஒன்றாக உள்ளது. தெளிவாக வரையறுக்கப்படாத கட்டுப்பாடுகள், தெளிவின்மையை உருவாக்கி பயணிகளைப் பாதிக்கும்” என்று பராஸ் லக்கியா கூறுகிறார்.
அதிபர் டிரம்ப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு, 104 ‘சட்டவிரோத இந்திய குடியேறிகளை’ ஏற்றி வந்த விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கியது .
இந்த விவகாரம் இந்திய அரசியலில் பேசுபொருளாக மாறியது. அந்தப் பயணத்தின் போது இந்தியர்கள் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
இந்திய அரசாங்க தரவுகளின்படி , பிப்ரவரியில் மூன்று ராணுவ விமானங்களில் 333 இந்திய குடிமக்கள் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் படி , 2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்கா சென்றுள்ளனர். இது 2023 உடன் ஒப்பிடும் போது 26 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இருப்பினும், இந்த மக்கள் சுற்றுலா, வணிகம் மற்றும் கல்வி போன்ற குடியேற்றம் அல்லாத விசாக்களில் தான் சென்றனர், நிரந்தரமாக அங்கே வசிப்பதற்காக அல்ல.
2024 ஆம் ஆண்டில், 3 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவிற்கு கல்வி கற்கச் சென்றார்கள். இது 2008-09 க்குப் பிறகு பதிவாகியுள்ள மிக அதிக எண்ணிக்கையாக உள்ளது.
அமெரிக்காவிற்குப் பயணம் செய்ய பயணிகளிடையே தற்போது தயக்கம் அதிகரித்து வருகிறதா? இதனைப் பயண முகவர்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு விளக்குகிறார்கள்? என்ற கேள்விக்கு பராஸ் பதில் அளித்தார்.
“தற்போது நிறைய தயக்கமும் குழப்பமும் உள்ளது. இதுபோன்ற மாற்றங்கள் ஏதேனும் இருந்தால், அமெரிக்க உள்ளூர் அலுவலகங்களால் தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.
பயண நிறுவனங்கள் அவற்றை நன்கு புரிந்துகொள்ளவும், பயணிகளுக்கு சரியான தகவல்களை வழங்கவும் அது உதவும்.
சட்டவிரோத குடியேறிகள், அதிக காலம் தங்குபவர்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் 30 நாட்களுக்கு மேல் தங்கியிருக்கும் அனைத்து அமெரிக்கர் அல்லாத குடிமக்களின் முழுமையான தரவுகளைப் பெறுவது இதன் அடிப்படை நோக்கம் என்று நான் நினைக்கிறேன்” என்கிறார் பராஸ் லக்கியா.
அமெரிக்காவில் எத்தனை சட்டவிரோத இந்தியர்கள் உள்ளனர்?
பியூ ஆராய்ச்சி மைய தகவலின்படி, 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்திய குடிமக்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர்.
மெக்சிகோ மற்றும் எல் சால்வடார் நாட்டினருக்குப் பிறகு, அமெரிக்காவில் அதிகமாக சட்டவிரோதமாக வாழும் மூன்றாவது பெரிய குடிமக்கள் குழுவாக இந்தியர்கள் உள்ளனர்.
அதேநேரத்தில், இடப்பெயர்வு கொள்கை நிறுவனம் ( MPI ) இந்த எண்ணிக்கை 3 லட்சத்து 75 ஆயிரம் என்று கூறியுள்ளது. அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த விவகாரத்தில் ஆசியாவிலேயே இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது.
மறுபுறம், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) அதிகாரப்பூர்வ அரசாங்கத் தரவு மற்றொரு எண்ணிக்கையை முன்வைக்கிறது.
அதில் 2022 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 20 ஆயிரம் சட்டவிரோத இந்தியர்கள் அங்கு வசிப்பதாக அந்த தரவு கூறுகிறது.
பயண முகமைகள் மூலம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து எத்தனை பேர் அமெரிக்காவிற்கு பயணம் செய்கிறார்கள்? எனும் கேள்விக்கு, பராஸ் லக்கியா பதில் அளிக்கையில், “பயண முகவர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே பயணம் பற்றிய தகவல்களை வழங்கும் குறிப்பிட்ட தரவு எதுவும் இல்லை. ஆனால் 2024 ஆம் ஆண்டில் 20 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்ததாக தரவு காட்டுகிறது” என்றார்.
அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி , 2023 ஆம் ஆண்டில் அமெரிக்க அதிகாரிகளால் பிடிபட்ட சட்டவிரோத இந்திய குடியேறிகளின் எண்ணிக்கை 96 ஆயிரத்து 917 ஆக உள்ளது.
2022 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 927 ஆகவும், 2021 ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 662 ஆகவும் இருந்தது.
– இது பிபிசி நியூஸ்