“கோவை வெள்ளலூரில் நடந்த கல்லூரி மாணவர் கொலையில் காதலியை தட்டி பறித்த ஆத்திரத்தில் போதை ஊசி செலுத்தி கொன்றதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளனர்.

முன்னதாக வெள்ளலூர் குப்பைக்கிடங்கு அருகே ஒருங்கிணைந்த பஸ் நிலையத்துக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் கடந்த 11-ந் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் பிணம் கிடந்தது.

அதை கைப்பற்றிய போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.அதில் உயிரிழந்தவர் மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த சூர்யா (வயது 21) என்பதும், கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது.

அவர் தனது நண்பர் கார்த்திக்கின் (21) காதலியுடன் பேசி, அவர்களது காதலை முறித்து உள்ளார். அத்துடன் அந்த பெண்ணும், சூர்யாவும் காதலித்து உள்ளனர்.

இதை அறிந்த கார்த்திக், தனது நண்பர்களான மாதேஷ் (21), முகமது ரபி (21), நரேன் கார்த்திக் (21) ஆகியோருடன் சேர்ந்து சூர்யாவை கொலை செய்து உடலை சம்பவ இடத்தில் வீசிச்சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த 4 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், “கொலை செய்யப்பட்ட சூர்யா, கார்த்திக் ஆகியோர் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள்.

அவர்கள் கோவையில் உள்ள கல்லூரியில் ஒன்றாக படித்தனர். பின்னர் சென்னையில் வேறு கல்லூரியில் படிக்க சூர்யா சென்றுவிட்டார்.

ஆனால் அவர் கார்த்திக் காதலித்து வந்த பெண்ணின் செல்போன் எண்ணை அறிந்து அவரிடம் நன்றாக பேசி, காதலை பிரித்துவிட்டார்.

பின்னர் சூர்யாவும் அந்த பெண்ணும் காதலித்து வந்தனர். இதை அறிந்த கார்த்திக் ஆத்திரம் அடைந்தார்.

எனவே அவரை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக கடந்த 8-ந் தேதி சூர்யாவை கோவைக்கு அழைத்தார்.

அதன்படி கோவை வந்த அவர் போத்தனூர் போஸ்டல் காலனியில் உள்ள கார்த்திக் வீட்டுக்கு சென்றார்.

அங்கு கார்த்திக்கின் நண்பர்களான மாதேஷ், முகமது ரபி, நரேன் கார்த்திக் ஆகியோர் இருந்தனர்.

பின்னர் 4 பேரும் சேர்ந்து சூர்யாவுக்கு அளவுக்கு அதிகமாக மதுவை குடிக்க கொடுத்தனர். அப்போது அவருக்கு போதை ஊசியையும் போட்டனர்.

அதில் மயங்கிய அவரை கை, கால்களை கட்டி தலையணையால் முகத்தை அமுக்கி கொலை செய்தனர்.

இதற்கிடையில் 4 பேரும் குடிபோதையில் இருந்ததால் சூர்யாவின் பிணத்தை எப்படி அகற்றுவது என்பது தெரியாமல் இருந்தனர்.

பின்னர் பிணத்துடன் அங்கேயே படுத்து உறங்கினர். அதிகாலையில் எழுந்ததும், ஒரு காரில் பிணத்தை ஏற்றி சம்பவ இடத்தில் வீசிவிட்டு தப்பி சென்றனர்\”என்று தெரிவித்தனர்.

கைதான 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.”,

Share.
Leave A Reply