உலகில் உள்ள அனை­வரும் உயி­ருக்கு அடுத்­த­தாக மதிக்கும் விட­ய­மாக ‘காணி’ காணப்­ப­டு­கி­றது. ‘காணி’ என்­பது பெறு­மதி மிக்க சொத்­தாகும். அவ்­வாறே ‘காணி’ என்­பது நாளாந்தம் பெறு­மதி அதி­க­ரித்துச் செல்லும் சொத்­தாகும்.

அவ்­வா­றி­ருக்­கையில் வடக்கு, கிழக்கில் ‘காணி’ என்­பது இன­மொன்றின் இருப்பு சார்ந்த விட­ய­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக, தமிழ் மக்­க­ளுக்கு இனம்­சார்ந்த எதிர்­கால இருப்பை உறுதி செய்­வ­தற்­கான அடிப்­ப­டை­யாக காணப்­ப­டு­கி­றது.

ஏனென்றால், வடக்கு, கிழக்கில் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­களை அரச கட்­ட­மைப்­புக்­க­ளான படைகள், தொல்­பொ­ரு­ளியல் திணைக்­களம், வன ஜீவ­ரா­சிகள் திணைக்­களம், வன இலாகா, பௌத்த தரப்புகள், மகா­வலி அதி­கா­ர­சபை உள்­ளிட்­டவை ‘திட்­ட­மிட்டு’ ஆக்­கி­ர­மித்­துள்­ளன.

அடுத்­து­வரும் காலப்­ப­கு­தியில் ஆக்­கி­ர­மிப்­ப­தற்­கான காரண காரி­யங்­களும் கன­கச்­சி­த­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டும் வரு­கின்­றன. இந்த ஆக்­கி­ர­மிப்பின் அடிப்­படை, தமி­ழர்­களின் தாயக கோட்பாட்டை நீர்த்துப் போகச் செய்­வதும், குடிப்­ப­ரம்­பலை மாற்றி, ‘பூர்­வீக குடிகள்’ என்ற அடை­யா­ளத்­தையும் அங்­கீ­கா­ரத்­தினையும் இழக்­கச்­செய்­வ­து­மாகும்.

இதற்­கான ‘கட்­ட­மைக்­கப்­பட்ட நிகழ்ச்சி நிரல்’ 1949ஆம் ஆண்டு டி.எஸ்.சேன­நா­யக்க தலை­மையில் கிழக்கு மாகா­ணத்தில் விவ­சா­யி­களை குடி­யேற்­றுதல் என்ற பெயரால் முன்­னோடி செயற்­பா­டாக முன்­னெ­டுக்­கப்­பட்ட ‘கல்­லோயா’ திட்­டத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மா­கி­யது. தற்­போது வரையில் அது தொடர்­க­தை­யா­கவே உள்­ளது.

போர் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள கடந்த 16ஆண்­டு­களில் தமி­ழர்­களின் நில­மீட்­புக்­கான போராட்­டங்கள் முழு வீச்­சுடன் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. ஏனென்றால் ஆக்­கி­ர­மிப்­புக்­களும், திட்­ட­மிட்ட சுவீ­க­ரிப்­புக்­களும் நீடித்துக் கொண்­டி­ருக்­கின்­றன.

அவ்­வா­றான நிலையில், தான் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி தற்­போது ஆட்­சியில் அமர்ந்­தி­ருக்­கின்ற ஜனா­தி­பதி அநு­ர­கு­மார தலை­மை­யி­லான ‘தோழமை’ அர­சாங்கம் ‘காணிகள்’ என்ற தலைப்பில் வர்த்­த­மானி அறி­வித்­த­லொன்றைப் பிர­சு­ரித்­துள்­ளது.

அந்த அறி­வித்­தலில் ‘காணி நிர்­ணயக் கட்­டளைச் சட்­டத்தின் 4ஆம் பிரி­வுக்கு அமை­வாக மார்ச் 28ஆம் திக­தி­யி­லி­ருந்து மூன்று மாதங்­க­ளுக்குள் பட்­டி­ய­லி­டப்­பட்­டுள்ள காணிகள் குறித்த உரித்­துக்கள் உறுதி செய்­யப்­ப­டா­த­வி­டத்து கட்­ட­ளைச்­சட்­டத்தின் (5)1இற்கு அமை­வாக அரச காணி­க­ளாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு அவை­பற்றி நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்’ என்று குறித்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில், யாழ். மாவட்­டத்தில் 3,669 ஏக்கர் காணி­களும், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் 1,703 ஏக்கர் காணி­களும், கிளி­நொச்சி மாவட்­டத்தில் 515 ஏக்கர் காணி­களும் மற்றும் மன்னார் மாவட்­டத்தில் 54 ஏக்கர் காணி­க­ளு­மாக 5,941 ஏக்கர் தனியார் காணி­களை குறிப்­பிட்ட காலப்­ப­கு­தி­க­ளுக்குள் உறு­திப்­பத்­தி­ரத்­துடன் உறு­திப்­ப­டுத்­தா­விடின் அவை அர­சு­ட­மை­யாக்­கப்­படும் நெருக்­க­டி­யா­ன­தொரு சூழல் ஏற்­பட்­டுள்­ளது.

போரின் பின்­ன­ரான சூழலில் வடக்­கிலும், கிழக்­கிலும் காணி உரித்­துக்­களை உறுதி செய்தல், உரித்­து­டைய காணி­க­ளுக்கு உரிமை கோருதல், அழிந்து போன ஆவ­ணங்­களை மீளப்­பெறல், ஆக்­கி­ர­மிக்­கப்­பட்ட காணி­களை மீட்­டெ­டுத்தல், உட்­பட பல்­வேறு பிணக்­குகள் காணப்­ப­டு­கின்­றன.

அவை ­கு­றித்து அர­சாங்­கத்தால் எந்­த­வொரு கவ­னமும் செலுத்­தப்­ப­ட­வில்லை. காணிக்­கச்­சே­ரிகள் நடத்­தப்­ப­ட­வில்லை. மாறாக, திடீ­ரென்று வர்த்­த­மானி அறி­வித்­தலில் ‘அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட’ இடங்­களை மட்டும் மையப்­ப­டுத்தி காணி உரித்­துக்­களை உறுதி செய்­வ­தற்கு மூன்று மாத கால அவ­காசம் வழங்­கி­யி­ருப்­ப­தா­னது நிச்­ச­ய­மாக ‘திரை­ம­றைவு நிகழ்ச்சி நிரலைக் கொண்­டது’ என்­பதை உறுதி செய்­கி­றது.

குறித்த வர்த்­த­மானி அறி­விப்பு சம்­பந்­த­மாக வடக்கு,கிழக்கில் எழுந்­துள்ள எதிர்ப்­ப­லைகள் அர­சாங்­கத்­தினை வர்த்­த­மானி அறி­வித்­தலை இலத்­தி­ர­னியல் பதி­வி­லி­ருந்து நீக்­கு­வ­தற்கும் பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்­கு­மா­ன­தொரு தவிர்க்­க­மு­டி­யாத சூழலை உரு­வாக்­கி­யி­ருந்­தது.

அந்­த­ வ­கையில் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற குழு அறையில் வடக்கு, கிழக்கு பிர­தி­நி­தி­க­ளுக்கும் பிர­தமர் ஹரிணி, விட­ய­தா­னத்­துக்கு பொறுப்­பான அமைச்சர் லால்­காந்த தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் இடையில் பேச்­சுக்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. ஆனால் முடி­வுகள் எட்­டப்­ப­ட­வில்லை.

எனினும், இந்தச் சந்­திப்பில் அமைச்சர் லால்­காந்த அமைச்சு மட்­டத்தில் ஆராய்ந்து பதி­ல­ளிப்­ப­தாக கூறி­யி­ருக்­கின்றார். பிரதி அமைச்சர் அருண், காணிப் பிரச்­சி­னைகள் இருப்­ப­தாக ஏற்­றுக்­கொள்­கின்றார். பிரதமர் ஹரி­ணிக்கு விட­ய­தா­னமே புதி­ரா­கத்தான் இருந்­தி­ரு­கி­றது.

ஆனால், அர­சாங்கம் நிலை­மை­களை உணர்ந்து வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வ­தற்கு தயா­ரில்லை. வெறு­மனே அமைச்சின் சுற்றுநிரு­பங்­க­ளாலும், வாய்­மூல வாக்­கு­று­தி­க­ளாலும் நிலை­மையைச் சமா­ளிப்­ப­தற்கே முயற்­சிக்­கின்­றமை வெளிப்­ப­டை­யாக தெரி­கி­றது.

ஆகவே, ‘காணிகள்’ பற்றி வர்த்­த­மானி அறி­வித்தல் குறித்து தொடர்ச்­சி­யாக பேச்­சுக்­களை நடத்­து­வதும், ஆராய்ந்து பதி­ல­ளிப்­ப­தாக கூறு­வதும் காலத்தைக் கடத்தும் செயல். சூட்­சு­ம­மாக மூன்று மாதங்­களை நகர்த்தி வர்த்­த­மா­னியை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கான முனைப்­பா­கவே இரு­கி­றது.

அந்­த­வ­கையில் ‘காணிகள்’ வர்த்­த­மா­னியை மீளப்­பெ­று­வ­தற்­கான வர்த்­த­மானி மீள் அறி­வித்தல் செய்­யப்­பட வேண்டும். அது தான் இந்த விட­யத்தில் முன்­னுள்ள ஒரே தீர்­வாகும்.

அந்த தீர்வை நோக்­கி­ய­தா­கவே மக்கள் பிர­தி­நி­திகள், சிவில் அமைப்­புக்கள் மற்றும் பொது­மக்­களின் நிலைப்­பா­டுகள் இருக்க வேண்டும். இந்த விட­யத்தில் நெகிழ்­வுப்­போக்கை கடைப்­பி­டிப்­ப­தற்கு முடி­யாது.

ஏனென்றால், காணி­களின் உரித்தை உறுதி செய்யும் வர்த்­த­மானி அறி­வித்தல் ஆக்­கி­ர­மிப்பின் புதி­ய­தொரு வடிவம். முன்­னரே கூறி­யி­ருப்­பது போன்று தமி­ழி­னத்தின் இருப்பு சார்ந்த விடயம். ஆகவே, விட்­டுக்­கொ­டுப்­புக்­க­ளுக்கு எள்­ள­ளவும் இட­மில்லை. வர்த்­த­மா­னியை மீளப்­பெறச் செய்­வதே ஒட்­டு­மொத்த தரப்பின் வெளிப்­பா­டாக இருக்க வேண்டும்.

இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் காணி நிர்­ணய திணைக்­களம், காணி மறு­சீ­ர­மைப்பு ஆணைக்­குழு, காணி ஆணை­யாளர் நாயகாட திணைக்­களம், மாகாண காணி ஆணை­யாளர் திணைக்­களம், நில அள­வை­யா­ளர்கள் திணைக்­களம் உள்­ளிட்­டவை காணி விட­யங்­களை கையாள்­வ­தற்­கான பிர­தான கட்­ட­மைப்­புக்­க­ளாக உள்­ளன.

இவற்­றுடன் பிர­தேச செய­லகம், மகா­வலி அதி­கார சபை, தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை, நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை ஆகி­ய­வற்­றுக்கும் காணி விட­யங்­களை கையாள்­வ­தற்­கான உரித்து காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இக்­கட்­ட­மைப்­புக்கள் அனைத்­துக்கும் மக்­க­ளுக்­காக காணி­களை பகிர்ந்­த­ளிக்கும் அதி­கா­ரத்­தையும் ஒருங்கே கொண்­டி­ருக்­கின்­றன.

அதற்­காக, காணி அபி­வி­ருத்தி கட்­டளைச் சட்டம், அரச காணி கட்­டளைச் சட்டம், காணிச் (விசேட ஏற்­பா­டுகள்) சட்டம், காணி மறு­சீ­ர­மைப்பு ஆணைக்­குழுச் சபை சட்டம், தேசிய வீட­மைப்பு அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்டம், நகர அபி­வி­ருத்தி அதி­கார சபை சட்டம், மாகாண காணி நியதிச் சட்டம் ஆகி­யன காணப்­ப­டு­கின்­றன.

அதே­நேரம், வன விலங்கு பாது­காப்பு திணைக்­களம், வனப் பாது­காப்பு திணைக்­களம், தொல்­பொருள் அகழ்­வா­ராய்ச்சி திணைக்­களம், காணி விடுப்பு அளித்தல் திணைக்­களம், கரை­யோர பாது­காப்பு திணைக்­களம், ரயில்வே திணைக்­களம், நீர்ப்­பா­சன திணைக்­களம், நெடுஞ்­சா­லைகள் திணைக்­களம், முப்­ப­டைகள், இலங்கை துறை­முக அதி­கார சபை இலங்கை முத­லீட்டுச் சபை ஆகி­ய­னவும் காணி­க­ளுக்­கான உரித்­துக்­களை கொண்­டி­ருக்­கின்­றன.

எவ்­வா­றாக இருந்­தாலும் மேற்­படி அனைத்துக் கட்­ட­மைப்­புக்­க­ளுக்கு உரித்­து­டைய காணி­களின் அள­வுகள், தனித்­த­னி­யாக எவ்­வ­ளவு என்­ப­தற்­கான உரி­ய­வ­றான விடைகள் இது­வ­ரையில் இல்லை. அது­மட்­டு­மன்றி, பகிர்ந்­த­ளிக்­கக்­கூ­டிய, பகிர்ந்­த­ளிக்க முடி­யாத அரச காணி­களின் அள­வுகள் என்ன? தனியார் காணி­களின் அள­வுகள் என்ன? ஆகிய கேள்­வி­களும் பதில்கள் அற்­ற­வை­யாக மட்­டு­மல்ல, விடை­யில்லா விடு­க­தை­க­ளா­கவே நீடிக்­கின்­றன.

முக்கால் நூற்­றாண்டு கால­மாக செயற்­படும் மேற்­படி கட்­ட­மைப்­பு­க­ளி­டத்தில் கள ஆய்­வுகள் செய்­யப்­பட்டு அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட முழு­மை­யான தர­வுத்­தளம் தற்­போது வரையில் காணப்­ப­ட­வில்லை. காணிகளைக் கையாளும் கட்டமைப்புக்களிடத்தில் காணப்படும் மிகப்பெரும் தேக்கநிலை இதுவாகும்.

விசேடமாக போருக்குப் பின்னரான சூழலில் காணிப்பிணக்குகள் நீடிப்பதற்கு குறித்த தேக்க நிலைமையே அடிப்படைக் காரணமாக அமைகின்றது. ஆனால், அதுபற்றிய கரிசனைகளை அரசாங்கம் கொண்டிருப்பதாக தெரியவில்லை.

வடக்கில், யாழ்ப்பாணம் 2,53,283 ஏக்கர் நிலப்பரப்பினைக் கொண்டிருப்பதோடு கிளிநொச்சி 3,16,047.8 ஏக்கர் நிலப்பரப்பினையும், முல்லைத்தீவு 6,65,454.79 ஏக்கர் நிலப்பரப்பினையும் மன்னார் 4,93,222.3 ஏக்கர் நிலப்பரப்பினையும் வவுனியா 4,67,276.3 ஏக்கர் நிலப்பரப்பினையும் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் யாழில் 206,574 குடும்பங்களும் கிளிநொச்சியில் 49,427 குடும்பங்களும் வவுனியாவில் 59,030 குடும்பங்களும் முல்லைத்தீவில் 47,455 குடும்பங்களும் மன்னாரில் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்தக் குடும்பங்களின் வாழிடமும், வாழ்வாதாரத்துக்கான வழிகளும் மேற்படி நிலங்களுக்குள்ளேயே இருக்கின்றன.

ஆர்.ராம்

(தொடரும்…)

Share.
Leave A Reply