இலங்கையில் சிங்கள சினிமாவின் மகாராணி என அழைக்கப்பட்ட மாலினி பொன்சேகா தனது 78வது வயதில் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் கடந்த 24ம் தேதி காலமானார்.
சினிமாத்துறையில் மாத்திரமன்றி, அரசியலிலும் மாலினி பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.
மாலினி பொன்சேகாவின் திரைவாழ்க்கை
கில்பர்ட் பொன்சேகா மற்றும் சீலாவதி பொன்சேகா ஆகியோருக்கு 1947ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி மாலினி பொன்சேகா பிறந்தார்.
மாலினி பொன்சேகா பிறந்த 1947ம் ஆண்டே, இலங்கையின் முதலாவது திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.
கடவுனு பொறந்துவ என்ற திரைப்படம் எஸ்.எம்.நாயகம் என்பவரினால் 1947ம் ஆண்டு தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படமே இலங்கையின் முதலாவது திரைப்படமாகும்.
புஞ்சி பபா திரைப்படத்தின் ஊடாக 1968ம் ஆண்டு தனது திரையுலக வாழ்க்கையை ஆரம்பித்தார் மாலினி பொன்சேகா.
அதனைத் தொடர்ந்து, தேசிய நாடக விழாவில் 1969ம் ஆண்டு சிறந்த நடிகைக்கான விருதை மாலினி பொன்சேகா வெற்றிக் கொள்வதன் ஊடாக, இலங்கையின் தலைசிறந்த நடிகை என்ற பெருமையை தனதாக்கிக் கொண்டார்.
அதன்பின்னர், 1980ம் ஆண்டு ஹிங்கனா கொல்லா, 1982ம் ஆண்டு ஆராதனா, 1983ம் ஆண்டு யசா இசுறு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தததன் ஊடாக சரசவியாவின் சிறந்த நடிகைக்கான விருதுகளை பெற்றுக்கொண்டார்.
சுமார் 7 தசாப்த திரைப்பட வாழ்க்கையை தொடர்ந்த மாலினி பொன்சேகா, நூற்றுக்கணக்கான விருதுகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் மாலினி பொன்சேகா சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் மாலினி பொன்சேகா சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்
இலங்கை – இந்திய கூட்டு தயாரிப்பாக 1978ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் மாலினி பொன்சேகா முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
சிவாஜி கணேசனுக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் மாலினி பொன்சேகா நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்தில் விமானியாக நடித்திருந்த சிவாஜி கணேசன், இலங்கை சிங்கள பெண்ணை காதலித்து திருமணம் செய்துக்கொள்ளும் வகையில் திரைப்படம் அமையப் பெற்றிருந்தது. இவ்வாறு சிவாஜி கணேசன் காதலித்து திருமணம் செய்துக்கொள்ளும் கதாபாத்திரத்தில் மாலினி பொன்சேகா நடித்திருந்தார்.
சிவாஜி கணேசனுடன் நடித்த சிங்கள நடிகை என்ற பெருமையை மாலினி பொன்சேகா பெற்றுக்கொண்டமை அவரது திரை வாழ்க்கையில் மேலோங்க தடம் பதித்திருந்தது.
சிவாஜி கணேசனுக்கு கதாநாயகியாக நடித்த ஒரெயொரு சிங்கள நடிகை என்ற பெருமையும் மாலினி பொன்சேகா வசமாகியுள்ளது.
அரசியல் வாழ்க்கை
மாலினி பொன்சேகா 2010ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இலங்கை நாடாளுமன்றத்ததை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
தனது அரசியல் வாழ்க்கையில் சிறந்த மக்கள் சேவையையும் அவர் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாலினி பொன்சேகாவின் பூதவுடலுக்கு அரச மரியாதை
மாலினி பொன்சேகாவின் பூதவுடல் அன்னார் வீட்டில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து, இலங்கை திரைப்பட கூட்டுதாபனத்தில் அன்னாரது பூதவுடன் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் அரச மரியாதையுடன் அன்னாருக்கு இறுதிக் கிரியைகள் இடம்பெறவுள்ளன.