தமிழரசுக் கட்சியின் இப்போதைய நிலையை பற்றி குறிப்பிட்ட ஒருவர், முள்ளில் விழுந்த சேலையுடன் ஒப்பீடு செய்திருந்தார்.
அது சரியானதே என்பதை, அண்மையில் அந்த கட்சிக்குள் ஏற்பட்டிருக்கின்ற சலசலப்புகள் உணர்த்துகின்றன.
ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர், பொதுவேட்பாளர் விவகாரத்தில் தொடங்கிய தமிழரசுக் கட்சியின் உள்ளக முரண்பாடுகள், பாராளுமன்றத் தேர்தலில் போதும், உள்ளூராட்சி தேர்தலின் போதும், பகிரங்கமாக வெளிப்பட்டது.
ஒப்பீட்டளவில் பாராளுமன்றத் தேர்தலின் போது, இருந்த சூழலை விட, உள்ளூராட்சித் தேர்தலில் முரண்பாடுகள் குறைவாக இருந்தன.
அதற்கு முக்கியமான காரணம், திடீரென பாராளுமன்றத் தேர்தலில் வீங்கி வெடித்த, தேசிய மக்கள் சக்தியின் செல்வாக்கு தான்.
அந்தக் கட்சிக்கு கிடைத்த ஆசனங்கள், தமிழரசுக் கட்சியை மாத்திரமன்றி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய கட்சிகளையும் தட்டி எழுப்பியிருந்தது.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, தமிழர்களின் உணர்வுகளை சீண்டிப் பார்த்து, தன் பெயரைக் கெடுத்துக் கொண்டது.
தேசிய மக்கள் சக்தி ஏற்படுத்திய இந்த உணர்வுபூர்வமான பிரச்சினை காரணமாக, தமிழரசுக் கட்சிக்குள் இருந்த முரண்பாடுகள், அதிகளவில் வெளிப்படுத்தப்படவில்லை.
அதற்குப் பதிலாக, தேசிய மக்கள் சக்திக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக இருந்தது.
உள்ளூராட்சி தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு மூன்று இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளும், 300 இற்கும் அதிகமான ஆசனங்களும் கிடைத்தமை அந்தக் கட்சிக்கு ஒரு பலத்தைக் ஏற்படுத்தியது.
அதன் அடிப்படையில் இப்பொழுது அடுத்த சுற்று உள்ளக முரண்பாடுகள் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன.
வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தாமே களமிறங்கப் போவதாக, சுமந்திரன் அறிவித்ததும், சுமந்திரனை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சிறிதரன் அறிவித்ததும், அந்த கட்சிக்குள் இருக்கின்ற முரண்பாடுகள், இன்னமும் கொதிநிலையிலேயே இருக்கின்றன என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.
ஊடகச் சந்திப்பு ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே, சுமந்திரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாக கூறியிருந்தார்.
சிறிதரன் அந்த பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்று அறிவித்திருக்கின்ற நிலையில், தான் அதற்குப் போட்டியிடுவேன் என அவர் கூறியிருந்தார்.
முன்னதாக, சிறிதரன் வடக்கு மாகாண முதல்வர் பதவிக்கு தான் போட்டியிடப் போவதாக கூறி இருந்த போதும், கடந்த பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் தாம் அப்படி போட்டியிடப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
ஏனென்றால், சிறிதரனின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வறிதானால், அது சுமந்திரனை நேரடியாகவே பாராளுமன்றத்துக்கு அனுப்பும்.
சிறிதரன், வடக்கு மாகாண முதல்வர் பதவிக்கு போட்டியிட முன்வந்தால் சுமந்திரனுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்தது போலாகி விடும்.
அப்படி ஒரு வாய்ப்பை கொடுப்பதை தவிர்ப்பதற்கே, சிறிதரன் தாம் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப் போவதில்லை எனக் கூறியிருந்தார்.
எட்டாத பழம் புளிக்கும் என்ற நிலையில் சுமந்திரன், எட்டுகின்ற பழத்தையாவது எட்டிப் பிடிப்போம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
சுமந்திரனின் அறிவிப்பு தொடர்பாக, தொலைக்காட்சி செவ்வியில் கேள்வி எழுப்பப்பட்ட போது, மாவை சேனாதிராஜா, துரைராஜசிங்கம் போன்றவர்கள் தோல்வியடைந்தவர்கள் என்பதால், போட்டியில் நிறுத்தப்படக்கூடாது எனக் கூறிய சுமந்திரன் மட்டும் முதலமைச்சர் பதவி போட்டியிடுவது சரியா என சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது சுமந்திரன் அந்த பதவிக்கு போட்டியிடுவதை சிறிதரன் விரும்பவில்லை என்பதை வெளிக்காட்டி இருக்கிறது.
அதேபோல, கட்சியின் பொதுச்செயலாளர் தெரிவு தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த சிறிதரன், சுமந்திரனை பொதுச்செயலாளராக ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இது சுமந்திரனை கொதிப்படையச் செய்தது.
அதன் உடனடி விளைவாக, கிளிநொச்சி மாவட்டத்தின் இரண்டு உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர் மற்றும் உபதவிசாளர் நியமனங்கள் தொடர்பான, சிறிதரனின் பரிந்துரையை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பமாட்டேன் என கட்சியின் பதில்செயலாளரான சுமந்திரன் கூறியிருந்தார்.
சுமந்திரனின் அந்த நிலைப்பாடு அவசரத்தனமாக எடுக்கப்பட்டது, ஆத்திரத்தில் எடுக்கப்பட்டது.
எனினும், கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலையிட்டு, அந்த கடிதத்தை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தார்.
அவ்வாறு சுமந்திரன் தனது கையெழுத்துடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பாமல் போயிருந்தால், குறித்த இரண்டு பிரதேச சபைகளின் தலைவர் நியமனங்கள் இழுபறிக்குள்ளாகியிருக்கும்.
அது கட்சிக்குள் முரண்பாட்டை இன்னும் மோசமான கட்டத்தை நோக்கி நகர்த்தியிருக்கும்.
ஏனென்றால், உள்ளூராட்சி சபைகளில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி பெற்ற வெற்றி, சிறிதரனின் முயற்சியினால் பெறப்பட்ட ஒன்று.
சிறிதரனை பழிவாங்கும் நோக்கில் சுமந்திரன் அவ்வாறு நடந்து கொண்டிருப்பாரேயானால், கிளிநொச்சியில் உள்ள தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள், வாக்காளர்களுக்கும், சுமந்திரனுக்கும் இடையிலான இடைவெளி, மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.
அது சிறிதரனை அங்கு இன்னமும் பலப்படுத்துவதாக அமைந்திருக்கும்.
சுமந்திரன் அதனை உணர்ந்து கொண்டோ, அல்லது சி.வி.கேயின் தலையீட்டுக்குப் பின்னரோ, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்ப எடுத்த முடிவு, இந்த சிக்கலில் இருந்து அவரை காப்பாற்றியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் இரண்டு தரப்புக்களும் முரண்பாடுகளை வளர்ப்பதிலேயே சிரத்தை காண்பிக்கின்றன.
முதலமைச்சர் பதவி தொடர்பான கேள்வி தொடுக்கப்பட்ட போது, இப்பொழுது மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை, தேர்தல் வரும்போது அதனைப் பற்றி பார்த்துக் கொள்வோம் என, சுமந்திரன் கூறியிருந்தால் அது பக்குவமானதாக இருந்திருக்கும்.
இப்பொழுது சி.வி.கே. சிவஞானம் அப்படித்தான் கூறி சமாளித்திருக்கிறார்.
அதேபோல, பொதுச்செயலாளர் பற்றிய கேள்வி வந்தபோது, சிறிதரன் தான் ஏற்றுக் கொள்ளாது போயிருந்தாலும், கட்சியின் பதில் பொதுச் செயலாளராக சுமந்திரன் பணியாற்றுகிறார் என்பதை அவர் உறுதி செய்திருக்க வேண்டும்.
உள்ளூராட்சி தேர்தலில், சுமந்திரன் போட்ட கையெழுத்துடன் தான், வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. சிறிதரனால் அதனை தவிர்க்க முடியவில்லை.
சுமந்திரனின் கட்டுப்பாட்டிலேயே இன்று தமிழரசுக் கட்சி இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.
இதனை விளங்கிக் கொண்டு சிறிதரன் செயற்பட்டிருக்க வேண்டும்.
அவர் கட்சியை சிக்கலில் இருந்து மீட்கக் கூடிய நிலையிலும் இல்லை, அதேவேளை அவர் கட்சியை சுமந்திரனின் கட்டுப்பாட்டில் முழுமையாக விட்டு விடவும் தயாராக இல்லை.
சுமந்திரனை பொறுத்தவரையில், தமிழரசுக் கட்சியை முற்று முழுதாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு முயற்சிக்கிறார்.
அதில் அவர் பெருமளவில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இவ்வாறான நிலையில், கட்சியை சிக்கலுக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு ஏற்ற சூழல் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
ஏனென்றால் கட்சியில் இவர்கள் இருவர் மீதும் செல்வாக்குச் செலுத்தக் கூடிய எவரும் இன்று இல்லை.
கட்சியின் மூத்த தலைவர்கள் என கூறக் கூடியவர்கள் பலர் இருந்தாலும்- கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சிக்குள் வந்த இவர்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே இருக்கிறார்கள்.
சம்பந்தன் போன்ற ஒருவர் இன்று தமிழரசுக் கட்சிக்கு தேவைப்பட்டாலும், அத்தகைய ஒருவர் இல்லாதது அந்தக் கட்சியின் மிகப்பெரிய பலவீனம்.
முள்ளில் விழுந்த சேலையை சேதம் இன்றி வெளியே எடுப்பது சிக்கலானது.
அப்படியானால் இன்னொரு வழி உள்ளது.
முட்களை அகற்றி விட்டு சேலையை பத்திரமாக எடுக்கலாம்.
இதில் எது எதனை செய்ய முயன்றாலும், அது தமிழரசுக் கட்சிக்கு சேதங்களையே ஏற்படுத்தும்.
ஏனென்றால், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் முள்ளும் தேவை, சேலையும் தேவை.
-கபில்