தி.மு.க இளைஞரணி நிர்வாகிமீது, கல்லூரி மாணவி ஒருவர் டி.ஜி.பி அலுவலகம் வரை சென்று கொடுத்திருக்கும் வன்கொடுமைப் புகார், அரக்கோணத்தையே அதிரவைத்திருக்கிறது!
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காவனூர் பெரியத் தெருவைச் சேர்ந்த தெய்வா என்கிற தெய்வச்செயல் என்பவர்தான் புகாருக்குள்ளான அந்த நபர்.
தி.மு.க இளைஞரணியில் அரக்கோணம் மத்திய ஒன்றிய துணை அமைப்பாளராகவும், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றத்தின் நிர்வாகியாகவும் பொறுப்புகள் வகிக்கிறார் தெய்வா.
இந்த நிலையில், அரக்கோணத்துக்கு அருகிலுள்ள பருத்திப்புத்தூர் கிராமம், மேட்டுத்தெருவைச் சேர்ந்த பிரீத்தி (வயது 21) என்கிற கல்லூரி மாணவி, 9-5-2025 அன்று ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்திலும், 16-5-2025 அன்று அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் மனுக்களை அளித்திருக்கிறார்.
அதில், திருமண மோசடி, பல பெண்களுடன் தொடர்பு, உடல் முழுவதும் கடித்துச் சித்ரவதை, கொலை மிரட்டல் விடுத்தல் என தெய்வா மீது அடுக்கடுக்காகப் புகார்களைக் கொடுத்திருக்கிறார்.
அது குறித்து பிரீத்தியிடமே பேசினோம். “நான் ஆட்டுப்பாக்கம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன்.
ஏற்கெனவே, கௌதம் என்பவரைக் காதலித்து, கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கர்ப்பமாக இருந்தப்ப, கௌதம் எட்டி உதைச்சதுல கரு கலைஞ்சிடுச்சு.
அவர்மேல போலீஸ்ல புகார் கொடுத்துட்டுப் பிரிஞ்சு வந்துட்டேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையப் பார்த்துக்கிட்டு காலேஜுக்குப் போய்க்கிட்டிருந்தேன்.
இதுக்கு நடுவுலதான் என்கூடப் படிக்கிற தோழி மூலமா 2024, நவம்பர் மாசத்துல தெய்வச்செயல் அறிமுகம் ஆனான்.
`நான் ஒரு வக்கீல். தி.மு.க-விலும் பெரிய போஸ்ட்டிங்ல இருக்கேன். உதவி வேணும்னா தயங்காம சொல்லு’னு பேசி அடிக்கடி என்னைச் சந்திச்சான்.
கொஞ்ச நாள்லயே `லவ் பண்றேன்’னு சொல்லி டார்ச்சர் பண்ணுனான். எனக்கு ஏற்கெனவே விவகாரத்து வழக்கு கோர்ட்டுல இருக்குறதைச் சொன்னேன்.
`பரவாயில்லை… நான் உன்னை நல்லாப் பார்த்துக்கிறேன்’னு கட்டாயப்படுத்தி நம்பிக்கை கொடுத்தான்.
31-1-2025 அன்னிக்கு ஒரு கோயிலுக்குக் கூட்டிக்கிட்டுப் போய் தாலி கட்டினான். இந்த வாழ்க்கையாவது சந்தோஷமா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு தெய்வாகூடப் போனேன்.
ரெண்டு, மூணு நாள்ல சென்னை வண்ணாரப்பேட்டைக்குக் கூட்டிக்கிட்டுப் போய், அமைச்சருக்கு உதவியாளர் ஒருத்தர்கிட்ட என்னை மனைவின்னு அறிமுகம் செஞ்சான்.
இன்னும் சில தி.மு.க பிரமுகர்கள்கிட்டயும் என்னை அறிமுகம் பண்ணுனான். அதுவரைக்கும் அவன் நோக்கம் என்னன்னு எனக்குத் தெரியாது.
மார்ச் 20-ம் தேதிதான் அவனோட அம்மாவையே கண்ணுல காட்டுனான். அவங்களுக்கு உடம்பு சரியில்லைன்னு அரக்கோணத்துல இருக்கிற ஒரு தனியார் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க.
அங்க வந்த பரானாங்கிற பொண்ணு, `தெய்வாவுக்கு நீ மூணாவது மனைவி. நான்தான் அவனோட ரெண்டாவது சம்சாரம்.
கனிமொழிங்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணினதை மறைச்சுதான் என்னைக் கல்யாணம் பண்ணினான்.
இப்போ உன்னை ஏமாத்திக்கிட்டிருக்கிறான்’னு சொன்னாங்க. இதைப் பத்திக் கேட்டப்போ, தெய்வா என்னென்னமோ பொய் சொல்லி சமாளிச்சான்.
விசாரிச்சப்ப, ஏற்கெனவே ஏழு பொண்ணுங்களை அவன் ஏமாத்தியிருக்குறது தெரியவந்துச்சு. எனக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுட்டதுனால, என்னை வீட்டுலயே அடைச்சுவெச்சு சித்ரவதை பண்ணினான்.
உடம்பு முழுக்கக் கடிச்சிக் குதறிட்டான். மிரட்டி பாலியல் உறவிலும் ஈடுபட்டான். இதனால ஏற்பட்ட மன உளைச்சல்ல, ஏப்ரல் 5-ம் தேதி தற்கொலைக்கு முயற்சி பண்ணினேன்.
பிறகு என் குடும்பத்தார் மூலமா மீட்கப்பட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனையில அட்மிட் ஆனேன்.
அப்புறம், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மாத்தி என்னைப் பிழைக்க வெச்சாங்க. டிஸ்சார்ஜ் ஆகுறதுக்கு முன்னாடியே மிரட்டி, ஹாஸ்பிட்டல இருந்து என்னை வலுக்கட்டாயமா வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போயிட்டான் தெய்வா.
அதுக்குப் பிறகும் என்னை அடிக்குறது, அந்தரங்கப் பகுதிகள்ல கடிக்கிறதுனு கொடுமைப்படுத்துனான்.
என் கழுத்தை நெரிச்சு `நாளைக்கு ராத்திரி ரெடியா இரு. ஒரு இடத்துக்கு கூட்டிட்டுப் போவேன். அங்க நான் சொல்ற மாதிரி செய்யணும். இல்லைன்னா உன் குடும்பமே இருக்காது.
உன் வீட்டுல பெட்ரோல் பாம் அடிப்பேன்’னு சொன்னான். அப்பதான் சில முக்கியப் பிரமுகர்கள்கிட்ட எதுக்கு என்னை அழைச்சிக்கிட்டுப் போய் காட்டினான்ங்கிற விஷயமே எனக்குப் புரிஞ்சுது.
இதுக்கப்புறமும் இவன்கூட இருந்தா, என் உடம்பை வித்துடுவான்னு, ஏப்ரல் 19-ம் தேதி, நடுராத்திரி 12:30 மணிக்கு என் அம்மாவுக்கு போன் பண்ணி சொன்னேன்.
குடும்பத்தார் வந்து என்னை மீட்டாங்க. அவனோட மிரட்டலால புகாரளிக்காம அமைதியா இருந்தேன்.
ஏப்ரல் கடைசியில காலேஜுக்குத் தேர்வு எழுதப் போனேன். அப்போ தி.மு.க கொடி கட்டுன கார்ல வந்து வழிமறிச்ச தெய்வா,
கெட்ட வார்த்தைகளால திட்டி தலைமுடியையும் ஜாக்கெட்டையும் பிடிச்சு இழுத்து காருக்குள்ள தள்ளி, `நான் சொல்ற நபர்கூட இன்னைக்கு ராத்திரி நீ படுக்கணும்.
அமைச்சர்கள் வரைக்கும் டச்ல இருக்கேன். என்னை யாராலயும் ஒண்ணும் புடுங்க முடியாது’னு சொன்னான்.
அச்சுறுத்தலும் ஆபாசத் தாக்குதலும் அதிகமானதால, தெய்வா மேல புகாரளிக்கிறதுக்காக அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் போனேன்.
ஸ்டேஷன்ல தெய்வாவுக்கு ஆதரவா கட்டப்பஞ்சாயத்து செஞ்சாங்க. `நான் கொடுக்குற ரெண்டு லட்சத்தை வாங்கிட்டு அமைதியா இரு’ன்னு சொன்னான் தெய்வா.
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையும் என்னை அசிங்கப்படுத்துற மாதிரி, தவறான பத்திரிகைச் செய்தியை வெளியிட்டிருக்காங்க.
மே 9-ம் தேதி கொடுத்த கம்ப்ளெயின்ட்டுக்கு, மறுநாள் தெய்வா மேல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க.
ஆனா வன்கொடுமை, கொலை மிரட்டல் மாதிரியான எந்தவொரு கடுமையான பிரிவுகளையும் சேர்க்கலை.
ஆபாச வார்த்தைகளால திட்டுதல், முந்தைய திருமணத்தை மறைத்தல்னு சாதாரணமாக நாலு பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டிருக்காங்க.
கடுமையான பிரிவுகள்ல எஃப்.ஐ.ஆர் போட்டு அவனைக் கைது பண்ணணும். அவனால பாதிக்கப்பட்ட மற்ற பெண்களையும் காப்பாத்தணும்.
இவனால என் வாழ்க்கையே போயிடுச்சு. எல்லா ஆதாரங்களையும் கையில வெச்சிருக்கேன். ஆனாலும், தெய்வா ஆளுங்கட்சியில இருக்குறதால, போலீஸ் நடவடிக்கை எடுக்காம, என் பக்கமே தவறு இருக்குற மாதிரி சித்திரிக்கிறாங்க’’ என்றார் கண்ணீருடன்.
இதற்கிடையே, விவகாரம் பெரிதானதால் தெய்வச்செயல் தலைமறைவாகிவிட்டார். குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கேட்க, அவரது இரண்டு செல்போன் எண்களையும் தொடர்புகொண்டோம். அவை சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து, அரக்கோணம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாசுகியிடம் பேசினோம். “இந்த விவகாரத்தில் முதலில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் தெய்வச்செயல் மீது எஃப்.ஐ.ஆர் போட்டுவிட்டோம்.
இரண்டாவதாகக் கொடுக்கப் பட்டிருக்கும் புகார், ஏற்கெனவே கொடுக்கப்பட்ட புகாரோடு பொருந்தவில்லை.
ஆனாலும், மாணவியின் புகார் சம்பந்தமாகத் தீர விசாரித்து நடவடிக்கை எடுத்துவருகிறோம். குற்றம்சாட்டப்பட்ட தெய்வச்செயலை பிடிக்கவும் டீம் விரைந்திருக்கிறது’’ என்றார்.
இந்த நிலையில், “பொள்ளாச்சி பொள்ளாச்சி என்று மேடைதோறும் கூவிய திரு.ஸ்டாலின் அவர்களே…உங்கள் அலங்கோல ஆட்சிக்கு ‘அரக்கோணமே சாட்சிதா’னே?” என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
எவ்வளவு விமர்சனங்கள் வந்தாலும், `சார்’களைக் காப்பாற்றுவதிலேயே அக்கறையாக இருக்கிறது காவல்துறை!