உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் கோடை வெப்பத்திலிருந்து தப்பிக்க யமுனை ஆற்றில் குளிக்கும்போது ரீல்ஸ் எடுக்கும் முயற்சியில் 6 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் பண்ணை ஒன்று அமைந்துள்ளது. இந்த பண்ணையில் வேலை பார்த்து வந்த சுமார் 6 சிறுமிகள் அதிக வெப்பம் காரணமாக யமுனை நதிக்கரைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது கரையோரமாக தண்ணீர் முழங்கால் அளவே இருந்ததால் சிறுமிகள் குதூகலமாக தண்ணீரில் விளையாடியபடி தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து நீரின் ஆழமான பகுதிக்கு சென்று ரீல்ஸ் எடுக்கலாம் என சிறுமிகள் முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களில் ஒரு சிறுமி மட்டும் உற்சாக மிகுதியில் ஆபத்தை உணராமல் நதியின் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார்.
நதிக்கரையோரமாக திடீர் பள்ளங்கள் இருப்பதால் அதில் தெரியாமல் விழுந்திருக்கிறார் அந்த சிறுமி. இதைப் பார்த்து பதறிப்போன மற்ற சிறுமிகள் அவரைக் காப்பாற்றுவதற்காக சென்று அவர்களும் நீருக்குள் இருந்த பள்ளங்களில் சிக்கிக் கொண்டனர்.
இப்படியாக ஒருவர் பின் ஒருவராக 6 சிறுமிகளும் ஆற்று நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியில் வயல்வெளிகளில் வேலை செய்து வந்தவர்கள் ஓடி வந்துள்ளனர்.
இந்ததகவல் பரவியதும் பதற்றமடைந்த உள்ளூர் மக்கள் சம்பவ இடத்தில் குவிய ஆரம்பித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தீயணைப்புத்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் உதவியுடன் 6 சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர்.
உயிரிழந்த 6 சிறுமிகளும் உறவினர்கள் எனத் தெரியவந்துள்ளது. உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்துள்ளது. 6 சிறுமிகள் யமுனை நதியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.