குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லப் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஒரு மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
காவல்துறை, தீயணைப்பு வீரர்கள் மற்றும் பிற மீட்புப் படையினர், விபத்து நடந்த சில நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் கூறுகிறார். மீட்புப் பணிகள் இன்னும் நடந்து வருகின்றன.
விளம்பரம்
“ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது.
விமானத்தில் 232 பயணிகள் இருந்தனர். அதில் பெரியவர்கள் 230 பேர், விமான பணியாளர்கள் 10 பேர், விமானிகள் இருவர் என மொத்தம் 242 இருந்தனர்” என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது
இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது.
ஆமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது
இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது.
“விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன,” என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘ஃபிளைட் ரேடார் 24’, “ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது,” என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது.
தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது.
ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும்.