புத்தளம் தள வைத்தியசாலையில் பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் வார்ட்டின் குளியலறை வடிகாலில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவராக சந்தேகிக்கப்படும், புத்தளம் தள வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டதாக புத்தளம் தலைமையக பொலிஸார் நேற்று (20) தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், புத்தளத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றில் பணிபுரிந்தவரும், கற்பிட்டி, ஆனவாசல் பகுதியைச் சேர்ந்தவருமான இளம் யுவதி எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட குறித்த யுவதி, புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருந்த போது, யாருக்கும் தெரியாமல் இரகசியமாக குழந்தையொன்றைப் பெற்றெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு பெற்றெடுத்த தனது குழந்தையை சந்தேக நபர், வைத்தியசாலையின் குளியலறை வடிகாலில் வீசியதாகவும், புத்தளம் தலைமையக பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் கண்டு, பெண்கள் வார்டுக்கு பொறுப்பான தாதியர் ஒருவர் குளியலறையைப் பரிசோதித்துள்ளார்.

பின்னர், குளியலறையின் வடிகாலுக்குள் வீசப்பட்ட நிலையில் குழந்தையொன்று சிக்கியிருப்பதை அவதானித்ததுடன், சம்பவம் பற்றி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்குத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் பற்றி பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த மரணம் தொடர்பில் புத்தளம் பதில் நீதவான் டி.எம். இந்திக தென்னகோன், சம்பவ இடத்திற்குச் சென்று நீதவான் விசாரணையை முன்னெடுத்த பின்னர், குழந்தையின் சடலத்தைப் பிரேத பரிசோதனைக்காக அனுப்புமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply