அம்பாந்தோட்டை, மித்தெனிய, தோரகொலயாய பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (25) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மித்தெனிய – ஒம்பகந்தயாய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் நேற்று புதன்கிழமை (26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அம்பாந்தோட்டை, மித்தெனிய, தோரகொலயாய பிரதேசத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு ஆண்களின் சடலங்கள் நேற்று புதன்கிழமை (25) காலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்தினபுரி – எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரும் மித்தெனிய – தோரகொலயாய பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் புதன்கிழமை அதிகாலை தோரகொலயாய பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில், துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிள் மித்தெனிய – ஒம்பகந்தயாய பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் கடந்த 21 ஆம் திகதி காலி – அக்மீமன பிரதேசத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் வைத்து திருடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் இந்த தோட்டார் சைக்கிள் திருடப்பட்ட அடுத்த நாள் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.