மத்திய கிழக்கில் பெரும் யுத்தம் தவிர்க்கப்பட்டதால் இன்று உலகம் பெருமூச்சு விடுகிறது.
யுத்த மேகங்கள் காற்றோடு கலைந்து விடுமென பலரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி இஸ்ரேலிய மண்ணை நோக்கி ஈரான் ஆளில்லா விமானங்களையும், ஏவுகணைகளையும் செலுத்தியபோது, பேரவலம் நிகழும் என்றே யாவரும் நம்பினார்கள். உலகம் உறைந்து நின்றது.
இரு நாடுகளின் வான்பரப்பில் நிகழ்ந்த வாண வேடிக்கையைத் தொடர்ந்து, புரட்சிகரமானதொரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. மேற்குலகின் விதிமுறைகளில் கட்டியெழுப்பப்பட்ட ஒழுங்குகள் தோல்வி கண்டு நிற்கின்றன.
இறைமையுள்ள நாடுகளை ஆயுதங்களைக் கொண்டு இல்லாதொழித்தல் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் புதிய விடயம் அல்ல.
மனிதாபிமானத்தின் பெயரை உச்சரித்துக் கொண்டு, ஈராக்கிலும் லிபியாவிலும் நிகழ்த்திய அட்டூழியங்களை உலகம் மறந்திருக்க மாட்டாது. இந்த அட்டூழியங்களுக்கு குற்ற விலக்களித்தல் உண்டு.
ஐ.நா. சாசனத்தை மதித்து, முன்கூட்டியே அறிவித்து, இலக்குகளை நிர்ணயித்து, ஈரான் பதிலடி கொடுத்தபோது, அமெரிக்கா என்ன செய்தது. சமாதானம் கோரி மண்டியிட்டது. இராணுவ பாதுகாப்பை மாத்திரம் முன்னிறுத்தி அராஜகம் புரிந்த இஸ்ரேல் என்ற தேசமும் பின்வாங்கியது.
இந்த மாயாஜாலம் எப்படி நிகழ்ந்தது? அதிகாரம் என்பது ஒருதலைப்பட்சமானது அல்ல என்பதையும், பாசாங்குத்தனம் காலாவதியாகலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஈரானின் அணுகுமுறை சூசகமானதாகவும், நேர்மையானதாகவும் இருந்தது. இஸ்ரேல் அடாவடித்தனமான தாக்குதல்களை நடத்தியபோது ஈரான் கண்மூடித்தனமான பதில் தாக்குலை நடத்தவில்லை.
மாறாக, முன்கூட்டியே எச்சரித்தது. இராஜதந்திர ரீதியிலும், இராணுவ ரீதியிலும் நெருக்கடியில் சம்பந்தப்பட்ட சக்திகள் ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
எந்த இலக்கு எப்போது தாக்கப்படும் என்பதை ஈரான் முன்கூட்டியே அறிவித்து விட்டு, ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியது. அவற்றை இஸ்ரேலிய பாதுகாப்பு உபரணங்கள் தாக்கியழித்தன.
ஈரானின் நோக்கம் பேரழிவை ஏற்படுத்துவது அல்ல. மாறாக, தமது இராணுவ ஆற்றல்களையும் வல்லமையையும் உலகிற்கு பறைசாற்றுவது மாத்திரமே ஆகும்.
ஈரானை நேரடி யுத்தத்திற்குள் இழுக்க இஸ்ரேல் முனைந்த சம்பவத்தை ஞாபகப்படுத்தலாம். கடந்த வருடம் ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவின் தலைநகரில் இயங்கிய ஈரானிய தூதரகத் தொகுதியை இஸ்ரேல் தாக்கியிருந்தது.
அப்போதும் கூட, தமது பாதுகாப்பைப் பலப்படுத்தி எந்தவொரு தாக்குதலையும் சமாளிக்கக்கூடிய நிலையை உருவாக்கிக் கொண்டு, இராணுவ ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் ஈரான் இயங்கியதே தவிர, முழுவீச்சிலான போரைத் தூண்டக்கூடிய பேரழிவு தரும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை.
மறுபுறத்தில், இந்த ஆயுத மோதல் இஸ்ரேலின் பலவீனங்களை அம்பலப்படுத்தியது. புறக்காரணிகளின் அடிப்படையில் பார்த்தாலென்ன, அகக்காரணிகளின் அடிப்படையில் அவதானித்தாலென்ன, இந்த ஆயுத மோதலில் இஸ்ரேல் தோற்றதென்று தான் கூற முடியும்.
முதற்காரணம், இஸ்ரேலால் தனித்து ஈரானை எதிர்கொள்ள முடிவில்லை. ஈரானின் அச்சுறுத்தல்களை சமாளிக்க அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்தான் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் தங்கியிருந்தது. தங்கியிருத்தலைத் தாண்டியதொரு இருப்பு கிடையாதென்ற நிலை இஸ்ரேலுக்கு இருந்தது.
அகக் காரணிகளை ஆராய்ந்தால், ஈரானுக்கு எதிரான யுத்தத்திற்கு இஸ்ரேலின் போர்க்கால அமைச்சரவையிலும் முற்றுமுழுதான ஆதரவு கிடைக்கவில்லை. தீவிர வலதுசாரி போக்குகளைக் கொண்ட கடும்போக்கு அமைச்சர்கள் தீவிர பதிலடி கொடுக்க வேண்டும் என்றார்கள்.
படைத்தளபதிகளோ பொறுப்பற்ற நடவடிக்கைகள் மூலம் ஆயுதமோதல் பிராந்திய யுத்தமாக பரிணமித்து விடுமென அஞ்சினாரகள். அமெரிக்கா கைவிடும் பட்சத்தில் என்ன நடக்கும் என்ற அச்சமும் இருந்தது.
ஈரானைத் தாக்குவதற்கு சாக்குப் போக்கு தேடிய பென்ஜமின் நெதன்யா யாஹுவும், டொனால்ட் ட்ரம்ப்பும் ஈரானில் ஆட்சி மாற்றம் பற்றி உளறியதை ஞாபகப்படுத்தலாம்.
ஒரு போர் நிகழும் பட்சத்தில் ஈரானிய மக்கள் தமது ஆட்சியாளர்களுக்கு எதிராக திரும்புவார்கள் என்று அவர்கள் தப்புக் கணக்கு போட்டிருக்கலாம். நடந்ததென்னவோ, இஸ்ரேலிலும், அதற்கு வெளியிலும் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் திசை திரும்பியது தான்.
போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்தியதில், இடைத்தரகர்களாக செயற்பட்டவர்களையும் மறந்து விட முடியாது. அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையில் தகவல்களை பரிமாறியதில் சீனாவிற்கும், ஓமானுக்கும் முக்கியமான பங்கு உண்டு. ஓமானின் சுல்தான் நடுநிலையானவராக பார்க்கப்பட்டதும் ஒரு முக்கியமான விடயம்.
எகிப்தும், ஜோர்தானும் ஈரானின் தாக்குதல் குறித்து முன்கூட்டியே இஸ்ரேலை எச்சரித்திருந்தன. ஒரு கட்டத்தில், ஈரானின் ஆளில்லா விமானங்களை ஜோர்தான் தாக்கியழித்த சம்பவமும் நிகழ்ந்தது.
போர் நிறுத்தத்தை சாத்தியப்படுத்துவதில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பங்கும் இருக்கிறது. அவர் ஈரானிய வெளிவிவகார அமைச்சரை மொஸ்கோவில் சந்தித்த பின்னரே போர் நிறுத்த அறிவித்தல் வெளியானது.
கடைசியாக டொனால்ட் ட்ரம்ப், பென்ஜமின் நெத்தன்யாஹுவின் மீது தொடுத்த அழுத்தம். மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் தாக்கப்படும் நிலை உருவானதைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்பின் அடாவடித்தனமான செயல்களில் தலைகீழான மாற்றம் ஏற்பட்டது.
அவர் நெதன்யாஹுவைப் பார்த்து, “நீங்கள் தான் வெற்றி பெற்றீர்கள், இப்போதைக்கு நிறுத்தி விடுங்கள்” என்றார்.இந்தத் தீர்மானத்தை எட்டுவதற்கு படைப்பல வலுச்சமநிலையும் காரணமாக இருந்திருக்கக்கூடும்.
ஈரான் சமச்சீரற்ற படைவலு சமநிலையைக் கொண்டிருந்தது. ஈரானுக்காக ஹிஸ்புல்லா இயக்கமும், ஹவுத்தி இயக்கமும் எதனையும் செய்யத் தயாராகி இருந்தன.
ஹோர்முஸ் நீரிணையில் எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை நிறுத்தும் ஆற்றலும், அதிகாரமும் ஈரானுக்கு இருந்ததாயின், சுயெஸ் கால்வாயில் பயணிக்கும் கப்பல்களை தாக்கக்கூடிய சக்தியை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏற்கெனவே நிரூபித்திருந்தார்கள்.
எனவே, ஈரானுக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் பல முனைகளில் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அமெரிக்காவும், இஸ்ரேலும் தெளிவாகப் புரிந்து கொண்டன.
இவற்றையெல்லாம் விடவும் இஸ்ரேலைப் பாதித்த மற்றொரு விடயம் உண்டு. அது காஸாவில் கட்டவிழத்து விட்ட கொடுஞ்செயல்களால் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட அவப்பெயர்.
ஒட்டுமொத்த உலகமும் திரண்டு இஸ்ரேலைக் கண்டித்தபோது, நெத்தன் யாஹு வகையறாக்களின் உளவுரண் பாதிக்காமல் இருந்திருக்கவே முடியாது.
தறிகெட்டுச் செல்லும் பட்சத்தில் தம்மாலும் உதவ முடியாதென அமெரிக்காவும் இஸ்ரேலை எச்சரித்தது என்றால், ஒட்டுமொத்த உலகத்தின் வெறுப்பிற்கு மத்தியில் இஸ்ரேல் தனிமைப்படக்கூடிய சூழ்நிலை உருவானதே முதன்மைக் காரணம்.
இந்த நெருக்கடியின் மூலம் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஒருமுனைப்படுத்தப்பட்ட அதிகாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. தன்னிச்சையாக அதிகாரம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இஸ்ரேலுக்கு சளைக்காமல் உதவி செய்து வந்த அமெரிக்கா, ஆயுதமோதல்களை நிறுத்துமாறு கெஞ்சிக் கேட்க வேண்டிய நிலைக்கு உள்ளாகியிருப்பது முக்கியமானது.
மறுபுறத்தில், அதிகம் இரைச்சலை எழுப்பாத மௌனமான இராஜதந்திரம் வெற்றி பெற்றுள்ளது. மேலைத்தேய நாடுகள் ஒலிபெருக்கி மூலம் மேற்கொண்ட பிரசாரத்தை ஓமான் போன்ற சிறிய நாடுகளுடன் சேர்ந்து சீனா தோற்கடித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.
இந்தப் புள்ளியில், இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த தென் ஆபிரிக்கா, இஸ்ரேலுடனான உறவுகளைத் துண்டித்துக் கொண்ட கொலம்பியா போன்ற நாடுகள் சர்வதேச சமூகத்திற்கு முன்னுதாரணத்தை வழங்கியுள்ளன.
இது மேலைத்தேய சமூகத்தின் எதேச்சாதிகாரத்தை துணிந்து எதிர்த்து நின்று தார்மீக ஒழுக்கத்திற்கு போராடும் பூகோள தெற்கு நாடுகளுக்கு உத்வேகத்தை வழங்கும்.
இனிமேல் பொறுப்பற்ற ரீதியில் கபடஞ்செய்வது பற்றி அமெரிக்காவும் சிந்திக்கத் தான் வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை