தமிழ்நாட்டில்போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (27). அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார்.
ஜூன் 27-ம் தேதி கோயிலுக்கு வந்த பெண் பக்தர் ஒருவரது காரில் 10 பவுன் நகை திருடுபோனது குறித்து அஜித்குமாரை அழைத்துச் சென்று மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது அஜித்குமார் உயிரிழந்தார்.
அஜித்குமாரை போலீஸார் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
மேலும் உடலை வாங்க மறுத்த அவர்களிடம் போலீஸார் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமரசப்படுத்தினர். பின்னர் அஜித்குமார் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து உடல் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அஜித்குமார் மரணம் அடைந்தது தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீஸ் விசாரணையின்போது மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்ட வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.