தமிழ்த்தேசிய அரசியலில் ஆரவாரமாக பேசப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க்கின் இலங்கை விஷயம் தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் ஒரு மாற்று திசையைக் காட்டியிருக்கிறது.

இனப்படுகொலை, போர்க்குற்ற சர்வதேச விசாரணை, சர்வதேச நீதிமன்றம் என்பன எல்லாம் “காணாமல் போய்” உள்ளகப் பொறிமுறை என்ற மாயமானை பிடிக்க ஐ.நா. ஆணையாளருக்கு வழிகாட்டி இருக்கிறது

திசைகாட்டி. இந்தத் திசை தமிழ்த்தேசிய அரசியல் இதுவரை பேசிவந்த சர்வதேசத்திடம் கையேந்தும் அரசியலுக்கு முற்றிலும் முரணானது. இந்த வகையில் கடந்த கால ஆட்சியாளர்களைப் போன்று குத்திமுறியாமல் அமைதியாக சாதித்திருக்கிறது அநுர அரசாங்கம்.

செம்மணி புதைகுழியில் அணையாவிளக்கு போராட்டக்கார்களோ அல்லது அங்கு சென்று கட்சி அரசியல் செய்யமுடியாமல் திரும்பிய தமிழரசுக்கட்சியினரோ ஆணையாளரின் இறுதி அறிவிப்புகள், ஊடகச் சந்திப்பு குறித்து இன்னும் வாய்திறக்கவில்லை. தங்களுக்குள் தாங்கள் மோதிக்கொண்டது

குறித்து தங்கள் பாட்டுக்கு விலாவாரியாக விளாசித்தள்ளிக்கொண்டு இருக்கிறார்கள். அணையா விளக்கு ஏற்பாட்டாளர்கள் ஐ.நா.ஆணையாளரின் செம்மணி வருகையை கல்லில் நார் உரித்த இராஜதந்திரமாக அறிக்கை விட்டு ஆறுதல் அடைகிறார்கள்.

ஆனால் ஆணையாளர் அறிக்கையில்/ ஊடகச் சந்திப்பில் பயன்படுத்தியுள்ள இராஜதந்திர மொழியின் அர்த்தம் இவர்களுக்கு வெளிச்சத்திற்கு வருவதற்கு சுமந்திரன், கஜேந்திரகுமார் போன்ற தமிழ்த்தேசிய சுத்துமாத்துக்கள் இனி பொழிப்புரை எழுத வேண்டும்.

இவர்கள் செம்மணியிலும், நல்லூரிலும் பராக்கு பார்க்க, 1980 களில் “சோற்றுப்பானை – சோற்றுப்பார்சல்” இயக்கம் என்று பெயரெடுத்த அந்த இயக்கத்தின் பிரதிநிதி யாழ்ப்பாண மாநகரசபையில் சோத்துக்கு என்ன கறி, எத்தனை கறி, சைவமா, அசைவமா என்று சண்டை பிடிக்க, அநுர அரசாங்கம் காரியத்தை கச்சிதமாக முடித்திருக்கிறது.

ஐ.நா.ஆணையாளர் ஜனாதிபதியை சந்தித்தார். சந்திப்பில் முக்கிய அமைச்சர்களும் பங்கேற்றார்கள். அரசாங்கத்தரப்பை அடுத்து பாராளுமன்ற எதிர்க்கட்சிகளை சந்திக்கும் வாய்ப்பு ஆணையாளருக்கு வழங்கப்பட்டது.

இங்கும் வழக்கத்திற்கு மாறாக சிவபூசைக்குள் கரடியாக விமல் ரத்நாயக்க புகுந்து எதிர்க்கட்சி தலைவர் சஜீத் பிரேமதாசாவை தலைமைதாங்க விடாமல் தடுத்து எதிர்க்கட்சிகளுடனான சந்திப்புக்கு தானே தலைமை தாங்கி இருக்கிறார்.

இனப்படுகொலை, போர்க்குற்றவிசாரணை, சர்வதேச நீதிமன்றம் இந்த விடயங்களில் சிங்கள பௌத்த பேரினவாத கட்சிகளுக்கும், தலைமைகளுக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜே.வி.பி/ என்.பி.பி. அரசாங்கத்திற்கும் இடையே நிலைப்பாட்டில் எந்த வேறுபாடும் இல்லை.

போர்க்குற்றவாளிகளை காட்டிக் கொடுக்கமாட்டோம் என்பது இவர்களின் போர்க்கொடி. சஜீத் பிரேமதாசவோ, நாமல் ராஜபக்சவோ இந்த விடயங்களில் அலட்டிக்கொள்ளவில்லை. தமிழரசுக்கட்சி சிறிதரன் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு போன நான்கு வசனங்களை வாசித்ததாக தெரியவருகிறது.

சுயேட்சை எம்.பி. அர்ச்சுனாவுக்கு நேரம் வழங்காமல் கூட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விமல் ரத்நாயக்க முயற்சித்துள்ளார்.

எனினும் ஒரு நிமிடம் கொடுக்கப்பட்டதாகவும் அர்ச்சுனா ஐந்து நிமிடங்கள் பேசியதாகவும் அறியமுடிகிறது. இதன்போது சர்வதேச விசாரணை, இனப்படுகொலை பற்றியும் அர்ச்சுனா பேசியுள்ளார். இதற்கு மனோ கணேசனின் ஆதரவு இருந்ததாக கூறப்படுகிறது.

சிறிதரன் தனக்கு கொடுத்த நேரத்தையும், வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்தவில்லை என்பதும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிலாஷைகளை, கோரிக்கைகளை சிறிதரனின் பேச்சு கோடிட்டுக்காட்டவில்லை என்றும் சிறிதரன்மீது அர்ச்சுனா சீறிப்பாய்ந்துள்ளார்.

பழம்பெரும் கட்சி, பெரிய கட்சி, அதிக தமிழ்த்தேசிய எம்.பி.க்களை கொண்ட தமிழரசுக்கட்சி என்ற வகையில் அர்ச்சுனாவின் கோபம் இந்த விடயத்தில் நியாயமானதாகவே படுகிறது.

இங்கு அரசாங்க தரப்புக்கும் சிறிதரன் தரப்புக்கும் ஒரு டீல் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. அது சாராயத்தவறணை விடயமோ…? அது அந்த பிமலுக்கே வெளிச்சம்.

மனோகணேசன் வோல்கர் டேர்க்குக்கு முகத்தாட்சினை இன்றி போட்டுக்கொடுத்துள்ளார். மனோவின் முகநூல் பதிவின்படி;

“வன்னியில் இருந்த ஐ.நா.அலுவலகத்தை மூடிட்டு வெளியேறி ‘சாட்சி இல்லாத யுத்தம்’ (WAR WITHOUT WITNESS) நடக்க நீங்கள் காரணமாக அமைந்து விட்டீர்கள்” என வோல்கரிடம் சொல்லியிருக்கக்கூடாது என அங்கு இருந்த தெற்கு அரசியல் நண்பர் ஒருத்தர் எனக்கு ஆலோசனை சொன்னார்.

அட போய்யா, வோல்கரே நிதானமாக கேட்டார். உமக்கு என்ன? என்றேன்”. என்று பதிவிட்டுள்ளார். இந்த சிங்கள பௌத்த பேரினவாத போர்வைக்குள் இருந்து கொண்டுதான் ஜே.வி.பி.உள்ளிட்ட அனைத்து தென்னிலங்கை கட்சிகளும் தீர்வைத்தேடுகிறார்கள்.

இந்த நிலையில் வோல்கருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார குமாரதிசாநாயக்க காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திற்கு பதிலளிக்கையில் …..,

“காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பான பிரச்சினையை அனுபவ ரீதியாக எதிர்கொண்ட ஒரு அரசியல் இயக்கமாக தனக்கு அது தொடர்பான புரிதல் இருப்பதாக தெரிவித்துள்ளார்” .

1971, 1987- 1989 காலப்பகுதியில் ஜே.வி.பி. யினால் காணாமல் ஆக்கப்பட்டு மாணிக்க, மகாவலி, களனி கங்கைகளில் வீசப்பட்டவர்களும், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்ட 1300 பேரின் ஜே.வி.பி. கொலைப்பட்டியலும் ஜனாதிபதியின் மனட்சாட்சியை தொட்டதா? என்பது சந்தேகத்திற்குரியதே.

அநுரவின் வார்த்தைகள் உண்மையானவை என்பதை நம்புவதற்கு ஜே.வி.பி.யின் கடந்த அறுபது ஆண்டுகால அரசியல் இயக்கத்தில் இன்னும் இடதுசாரி அரசியலை தேடவேண்டியுள்ளது.

வோல்கர் அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிலாஷைகளுக்கான நீதியை கோருபவையாக இல்லை. கடந்த எட்டு மாதகால ஆட்சியில் சிறுபான்மை தேசிய இனங்களின் பிரச்சினைகளுக்கு எந்த முன்னுரிமையும் வழங்கப்படாத நிலையில் வோல்கர் மாயமானைகாட்டி ஏமாற்றப்பட்டுள்ளார்.

வோல்கர் முஸ்லீம் விவாகச்சட்டம், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம், ஓரினச்சேர்க்கையாளர்கள் பாலியல் சட்டம் போன்ற சர்வதேச மனித உரிமைகள் சார்ந்த விடயங்களில் காட்டிய அக்கறையையும், திருப்தியையும் ஈழத்தமிழர்களின் இழப்புகள் குறித்து காட்டியதாக சொல்லமுடியாது.

செம்மணி புதைகுழிக்கான நேரடி பயணத்தைமட்டும் கொண்டு சர்வதேச மனித உரிமைகள் அதிஉயர் நிறுவனம் ஒன்றின் செயற்றிறனை மதிப்பிட முடியாது.

பொலிஸ் துறையில் சீர்திருத்தம், நீதித்துறையில் சீர்திருத்தம் என்பதைக்காட்டி உள்ளக விசாரணைக்கான அங்கீகாரத்தை அநுர அரசாங்கம் பெற முயற்சிக்கிறது .

தென்னாப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதியின் விஜயம் இதற்கு கட்டியம் கூறுவதாக அமைகிறது. அரசியல் கைதிகள் விடுதலை, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குதல் எல்லாம் அரசாங்கத்தின் வழமையான பல்லவிகளாகவே உள்ளன. செல்வம் அடைக்கலநாதன்,

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இந்த முக்கிய சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. மொத்தத்தில் தமிழ்த்தேசிய பாராளுமன்ற அரசியல் இனியும் சர்வதேசத்தின் பெயரை உச்சரிக்கும் தகுதியை இழந்து விட்டது மட்டும் அன்றி சர்வதேசத்தினால் ஏமாற்றப்பட்டும் உள்ளது.

இலங்கை பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் விகிதாசாரம் குறித்து திருப்தியை வெளியிட்ட வோல்கர் , தமிழ்த்தேசிய தரப்பில் எத்தனை பெண்கள் பாராளுமன்றத்தில் எம்.பி.யாக உள்ளனர் என்பது குறித்து பேசாதது கவலைக்குரியது.

வோல்கர் குறிப்பிட்ட ஒரு முக்கியவிடயம் சிறுபான்மை தேசிய இனங்களின் அடையாள அரசியலும் – அதனூடான சமூக, பொருளாதார, அரசியல், மத, கலாச்சார, பண்பாட்டு பன்மைத்துவமுமாகும்.

ஆனால் இந்த அடிப்படை மனித உரிமையை மீறுவதாகவே அரசாங்கத்தின் “இலங்கையர்” பேரினவாத அடையாள அரசியல் அமைகிறது. இலங்கையர் கோட்பாட்டின் கீழ் சிறுபான்மை தேசிய இனங்களின் அடையாளங்கள் எவ்வாறு அழிக்கப்படுகின்றன, அபகரிக்கப்படுகின்றன,

மாற்றம் செய்யப்படுகின்றன என்பன குறித்து தமிழ்த்தேசிய அரசியல் மௌனம்சாதித்து எல்லாவகையிலும் வோல்கரை அங்கீகரித்து இருக்கிறது.

அரசாங்கத்தை அளவுக்கு அதிகமாக பாராட்டிய வோல்கர், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து கடுமையான வார்த்தைகளை பிரயோகிக்கவில்லை.

ஈழத்தமிழர்களின் விடயத்தை முதன்மை படுத்தி சர்வதேச மனித உரிமைகள் விவகாரங்களை – சட்டங்களை கிடப்பில் போட அல்லது அநுர அரசை பகைத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. இது வோல்கரின் மெத்தனபோக்கை வெளிப்படுத்துகிறது.

இந்த நிலையில்…..

அநுரவின் காட்டில் மாயமான் வேட்டைக்கு தமிழ்த்தேசிய அரசியலும் தயாராகிறதா…?

இனி வரும் காலங்களில் மாயமான் வேட்டையில் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வரும்……!

— அழகு குணசீலன் —

 

Share.
Leave A Reply