ஈரான் மீது ஜுன் 13 ஆம் திகதி அதிகாலையில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கியது. 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது முதல் காசா மீதான யுத்தத்தை இஸ்ரேல் தொடங்கியது.

அல் அக்ஸாவையும் ஜெரூஸலம் உள்ளிட்ட பலஸ்தீனையும் மீட்பதில் ஈரான் குறியாக உள்ளது. அல் அக்ஸாவயும் பலஸ்தீனையும் மீட்பது தொடர்பில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவரும் ஈரான், ஆயுத ரீதியிலும் குறிப்பாக ஏவுகணை மற்றும் அணுசக்தியில் தன்னை துரிதமாக வளர்த்து வரவும் தவறவில்லை.

குறிப்பாக ஒக்டோபரில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பிறகு, ஈரான் அதன் இரகசிய அணுசக்தி திட்டத்தையும் அதன் பாலிஸ்டிக் ஏவுகணை உற்பத்தியையும் முடுக்கிவிட்டுள்ளது. வான் பாதுகாப்பை பலப்படுத்தவும் ஆரம்பித்தது என்று ‘டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ தெரிவித்துள்ளது.

ஈரான் திட்டங்களும் வளர்ச்சியும் தமது இருப்புக்கு பெரும் அச்சுறுத்தலாகும் எனக் கருதிய இஸ்ரேல், அதற்கு எதிராக குறியாக செயற்படலானது.

அதற்கான தயார்படுத்துதல்களை முன்னெடுத்தது. ஈரான் அணுசக்தி வல்லமையை அடைந்துவிடக்கூடாது என்பதில் உறுதி கொண்ட இஸ்ரேல் அதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் தாக்க தயாராகலானது.

அதனால் ஈரானிய அணுசக்தி நிலையங்களைத் தாக்கும் போது இஸ்ரேல் பலமுனைத் தாக்குதலுக்கு உள்ளாவதை உருவகப்படுத்தி,

இஸ்ரேல் இராணுவம் 2023 மே மாதம் ஒரு வெள்ளொட்டப் பயிற்சியையும் மேற்கொண்டது. அந்த வகையில் ஈரானை தாக்க முன்னர் அதன் ஆதரவுக் குழுக்களான ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹுதிக்களையும் சிரியாவையும் பலமிழக்கச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் முன்னெடுத்தது.

குறிப்பாக ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ்வின் ரொக்கட், ஏவுகணை ஆயுத உட்கட்டமைப்பு வசதிகளை தாக்கியழித்ததோடு அதன் தலைவர் நசரல்லாவையும் ஏனைய உயர்மட்டத் தலைவர்களையும் துல்லிய தாக்குதல்கள் மூலம் கொன்றொழித்தது.

சிரியாவில் அசாத்தின் ஆட்சியை வீழ்த்த வித்திட்ட இஸ்ரேல், இராணுவத்தின் முக்கிய சொத்துக்கள் புதிய கிளர்ச்சி ஆட்சியின் கைகளில் விழுவதைத் தடுக்கவென விரைவான இராணுவ தாக்குதல்களை முன்னெடுக்கவும் சிரியாவின் வான்பரப்பின் மேலாதிக்கத்தை வைத்திருக்கவும் நடவடிக்கை எடுத்தது.

இதேவேளை டேவிட் ஹொரோவிட்ஸ் டைம்ஸ் ஒப் இஸ்ரேலில் எழுதியுள்ள கட்டுரையொன்றில் பலவிடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் 2024 அக்டோபரில் ஈரானின் அணுசக்தி இலக்குகளை மாத்திரமல்லாமல், பெலஸ்டிக் ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலைகள், ஈரானின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு உள்ளிட்ட பலவற்றையும் கையாளும் தாக்குதலுக்கு தீவிரமாகத் தயாராகத் தொடங்கியது.

இந்நிலையில் இஸ்ரேலின் இராணுவ மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள், ஈரானுக்கு எதிராகப் போருக்குச் செல்ல வேண்டும்,

அதுவும் இவ்வருடம் ஜூன் மாதத்திற்குள் முன்னெடுக்க வேண்டும். அதிக நேரம் தாமதிக்கலாகாது.

2025 இன் முடிவு மிகவும் தாமதமாகிவிடும் என்று அரசியல் தலைவர்களிடம் கூறியுள்ளனர். அந்தளவுக்கு ஈரான் வேகமாக அணுவாயுதத்தை நோக்கி செல்கிறது. ஈரானின் வளர்ந்து வரும் பெலஸ்டிக் ஏவுகணைத் திறனும் எமது இருத்தலியலுக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம் அதிகளவிலான உளவுத்துறையினரை ஊடுருவச் செய்து ஈரானை கண்காணித்துக் கொண்டிருந்த இஸ்ரேலின் இராணுவமும் உளவுப் பிரிவு உள்ளிட்ட பாதுகாப்பு திட்டமிடுபவர்களுக்கு ஈரானைத் தாக்குவதற்கு அரசியல் பிரிவுகளிடமிருந்து 2025 பெப்ரவரியில் சாதகமான சமிங்ஞை கிடைக்கப்பெற்றுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில், திட்டமிடுபவர்கள் ஜூன் மாதத்தைத் தாக்குதலுக்கு ஏற்ற நேரமாகத் தேர்ந்தெடுத்தனர்.

இதேவேளை ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பில் அமெரிக்காவுக்கும் தெஹ்ரானுக்கும் இடையில் ஏப்ரலில் மறைமுகப் பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

அப்பேச்சுவார்த்தையை 60 நாட்களுக்குள் நிறைவு செய்து உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்று ட்ரம்ப் அவகாசம் வழங்கியிருந்தார். அந்த அவகாசம் ஜூன் 12 அன்று காலாவதியானது. மறுநாள் அதிகாலை 3.00 மணிக்கு ஈரான் மீது 200 போர் விமானங்களைப் பயன்படுத்தி தாக்குதல்களை ஆரம்பித்தது இஸ்ரேல்.

இத்தாக்குதலின் முதல் மணித்தியாலயத்திற்குள் ஈரானின் முக்கிய அணு விஞ்ஞானிகள், உயர் படைத்தளபதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை இலக்கு வைத்துக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டது.

அதன் ஊடாக உடனடி பதில் தாக்குதல்களை முன்னெடுக்க படைகளுக்கு தளபதிகள் இல்லாத நிலையையும், அணுசக்தி திட்டத்துடன் தொடர்பான விஞ்ஞானிகள் இல்லாத நிலையையும் உருவாக்குவது இலக்காகக் கொள்ளப்பட்டது.

அத்தோடு இராணுவத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு கட்டமைப்புகளை செயலிழக்கச் செய்யவும் வான் பாதுகாப்புகளை முடக்கவும், ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலைகள், களஞ்சியசாலைகள், ஏவுதளங்கள் என்பவற்றை அழிக்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன என்று பாதுகாப்பு தரப்பினரை மேற்கோள்காட்டி ‘டைம்ஸ் ஒப் இஸ்ரேல்’ குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இத்தாக்குதலை முன்னெடுக்கத் தொடங்கும் வரையும் தாக்குதல் நடக்கப்போகிறது என்பதை அறிந்தவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இஸ்ரேலின் இராணுவமும் உளவுப் பிரிவினரும் உச்சபட்ச கவனம் எடுத்துக்கொண்டனர்.

குறிப்பாக உயர்மட்ட இராணுவ மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூட என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாதவர்களாக இருந்தனர். பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட மிக முக்கிய அரசியல் தலைவர்களுக்கு மாத்திரமே ஈரான் மீதான தாக்குதலின் முழுத் திட்டமும் தெரிவிக்கப்பட்டது.

தாக்குதல் தொடங்கிய பின்னர் தான் இஸ்ரேல் முழுவதும் ஒவ்வொரு செல்போனிலும் எச்சரிக்கை ஒலிகள் எழுப்பப்பட்டதோடு உள்நாட்டு முன்னணி கட்டளை பேச்சாளர்கள் தேசிய தொலைக்காட்சியில் தோன்றி, கிழக்கிலிருந்து குறிப்பிடத்தக்க தாக்குதல் உட்பட ஏதோ நடக்கவிருப்பதாக அறிவித்து மக்களை விழிப்படையச் செய்துள்ளனர். ஆனால் ஈரானில் என்ன நடக்கிறது. இஸ்ரேலுக்கு என்ன நடக்கக்கூடும் என்று அவர்கள் குறிப்பிடவில்லை.

இத்தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் ஈரான் உடனடியாக ஏவக்கூடிய ஏவுகணைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவென அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்ட போதிலும் ஈரான் 300 தொடக்கம் -500 ஏவுகணைகளை உடனடியாக ஏவ முயற்சிக்கும் என்றும், முதல் 15 நிமிடங்களில் 300 ஏவுகணைகளை ஏவலாம் என்று இஸ்ரேலிய படையினர் மதிப்பிட்டிருந்தனர்.

ஆனால் நன்கு திட்டமிட்டு முன்னெடுத்த இத்தாக்குதல்களினால் ஈரானால் உடனடியாக ஏவுகணைத் தாக்குதலை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டது என்றுள்ள இஸ்ரேலிய ஊடகங்கள், முதல் தாக்குதல் நடத்தி 18 மணித்தியாலயங்களின் பின்னரே ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை தொடங்கியது.

பலஸ்தீன சதுக்கத்திலுள்ள கவுன்டவுன் கடிகாரத்தின் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த 12 நாட்கள் யுதத்தின் பின்னர் இஸ்ரேலிய இராணுவ தளபதி சமிர், ‘ஈரான் இனி ஒரு அணுசக்தி வரம்புள்ள நாடு அல்ல,

இஸ்ரேலை ஒழிப்பதற்கான அதன் திட்டங்கள் பல ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன’ என்றுள்ளதோடு இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ‘இப்போர் ஒரு வரலாற்று வெற்றி’ என்று விவரித்ததோடு ‘புதிய இயல்பாக்க ஒப்பந்தங்களுக்கான கதவும் திறக்கிறது.

அது தலைமுறைகளுக்கு நீடிக்கும் என்றும் நாங்கள் இப்போது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இஸ்ரேல் விரைவில் அழிவை சந்தித்திருக்கும்’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மர்லின் மரிக்கார்

Share.
Leave A Reply