சர்வதேச நீதிமன்றத்தால் ஒரு போர்க் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள, அமெரிக்க – ஐரோப்பிய ஆதரவு கொண்ட இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாஹுவின் பாசிச காலனித்துவ அரசால் ஜூன் 13 அன்று ஈரான் மீதான இஸ்ரேலின் சட்டவிரோத போர் தொடங்கப்பட்டது.

ஆட்சியை மாற்றுவது, பொம்மை ஆட்சியை நிறுவுவது மற்றும் அமைதியான அணுசக்தி திட்டத்தை அழிப்பது என்பன அமெரிக்கா, இங்கிலாந்தின் முக்கிய நோக்கங்களாக காலம் காலமாக இருந்து வருகின்றன.

ஈரான் என்பது சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களின் மூலம் அதன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் ஆளப்படும் கடும் போக்குடைய சுதந்திரமான முஸ்லிம் நாடாகும்.

எனவே அந்த நாட்டின் அரசாங்கத்தை கவிழ்க்கும் எந்தவொரு நடவடிக்கையும் அல்லது அதற்கான எந்தவொரு முயற்சியும் சர்வதேச சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானது.

எவ்வாறாயினும் போர்களில் செழித்து வளர்ந்த அமெரிக்க-இங்கிலாந்து-ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய போர் வெறியர்கள் ஈரானில் இதைத்தான் செய்ய முயன்றனர்.

ஈரானின் விரைவான பதில் இஸ்ரேலின் நகரங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்களை அழித்து, நாட்டை ஒரு கொலை களமாக மாற்றியது. மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயமும் அங்கு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளின் அனைத்து ஆதரவும் இருந்தபோதிலும், மில்லியன் கணக்கானவர்கள் வெளியேறி வருகின்றனர். இஸ்ரேல் துரிதமாக சரிவடையத் தொடங்கி விட்டது.

இதற்கிடையில் ஈரானிய அணுசக்தி நிலையத்தை அழிப்பதற்கான அமெரிக்க, ஐரோப்பிய இஸ்ரேலிய நடவடிக்கை மீண்டும் அவர்களின் பாசாங்குத்தனத்தை நிரூபித்த்து. ஏனெனில் இஸ்ரேலிடம் சுமார் 400 அணு ஆயுதங்கள் உள்ளன.

அதே நேரத்தில் ஈரானிடம் அணு குண்டுகள் எதுவும் இல்லை. ஈரானிய அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கத்தைக் கொண்டது.

ஈரான் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (என். பி. டி) கையெழுத்திட்டும் உள்ளது. அதே நேரத்தில் இஸ்ரேல் தனது அணுசக்தி நிலையங்களை என். பி. டி ஆய்வுக்கு உட்படுத்தும் வகையிலான உடன்பாடுகளில் கையெழுத்திடவோ அல்லது பரிசோதனைக்கு திறந்து விடவோ இல்லை.

அத்தகைய சூழ்நிலையில் தான் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது குண்டுவீசி மத்திய கிழக்கிற்கு தீ வைத்தன. அதே நேரத்தில் அமெரிக்கா, தெஹ்ரானை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு நிபந்தனையின்றி சரணடையுமாறும் கோரியது.

ஜூன் 22 ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்கா மூன்று ஈரானிய அணுசக்தி தளங்களான ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்ஃபஹான் மீது முழு அளவிலான தாக்குதலை நடத்தியது

. ‘ஒபரேஷன் மிட்நைட் ஹேமர்’ என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த தாக்குதலில் நிலத்துக்கு அடியில் ஆழ ஊடுறுவி பங்கர்களை தகர்க்கும் மற்றும் வழக்கமான குண்டுகளின் கலவையால் அணுசக்தி வசதிகள் “அழிக்கப்பட்டன” என்று ட்ரம்ப் வலியுறுத்தி கூறினார்.

எவ்வாறாயினும் ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் நிலத்தடி வசதிகளை அழிக்கத் தவறிவிட்டன என்று தற்போது வெளியாகி உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இநதத் தாக்குதல்கள் தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தை ஒரு சில மாதங்களுக்கு பின் தள்ளி மட்டுமே உள்ளன என்று பென்டகனின் உளவுத்துறை பிரிவான பாதுகாப்பு புலனாய்வு நிறுவனம் (டி.ஐ.ஏ.) தயாரித்துள்ள ஒரு இரகசிய அமெரிக்க உளவுத்துறை அறிக்கையின் மதிப்பீட்டின் படி தெரிய வந்துள்ளது.

முக்கிய அமெரிக்க செய்தி நிறுவனங்களால் வெளியிடப்பட்ட இந்த “உயர்மட்ட இரகசிய” ஆவணம் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கூற்றுகளுக்கு முரணாகவே அமைந்துள்ளன.

இந்த பின்னடைவு மிகவும் கூர்மையாக இருந்தது. அதனால் ட்ரம்ப் தானாகவே போரை முடிவுக்குக் கொண்டுவர விரைந்தார். அமெரிக்கா இனி இந்த மோதலில் ஈடுபடாது என்றும் நெதன்யாஹுவிடம் கூறினார்.

அமெரிக்காவின் தாக்குதலுக்கு 24 மணி நேரத்திற்குள் ஈரான் கட்டாரில் உள்ள அதன் அல் உபைத் இராணுவத் தளத்தில் குண்டுவீசி பதிலடி கொடுத்தது மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது புதிய ஏவுகணைகளை வீசியது.

இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முதல் முறையாக, ஈரானும் அமெரிக்காவும் இடைத்தரகர்கள் இல்லாமல் போர்க்களத்தில் ஒருவருக்கொருவர் எதிர்கொண்ட நிகழ்வு இதுவாகும். சமீபத்திய வரலாற்றில் முதல் முறையாக, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான போரைத் தூண்டும் இஸ்ரேலின் நீண்டகால பிரசாரமும் வெற்றி பெற்றது.

சர்வதேச அணுசக்தி அவதானிப்பு மையமான ஐ.ஏ.இ.ஏ.விலிருந்து கிடைத்த தகவல்கள் ஈரானிய நிலையங்களில் குண்டுவீச பயன்படுத்தப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறினார்.

ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட ஏஜென்சியின் தகவல்களைப் பயன்படுத்துவதன் மூலம் அமெரிக்காவும் இஸ்ரேலும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் நம்பகத்தன்மையை குறைத்து மதிப்பிட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதற்கான ஒரு “முறையான திட்டத்தை” கொண்டிருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கிராஸி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒப்புக் கொண்டார். ஆனால் தெஹ்ரான் யுரேனியத்தை 60% தூய்மை நிலைக்கு செறிவூட்டுவது குறித்து அவர் கவலை தெரிவித்தார்.

David Hurs

இது தொடர்பாக மிட்ல் ஈஸ்ட் ஐ இன் பிரதான ஆசிரியர் டேவிட் ஹெர்ஸ்ட் கூறுகையில்

“ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு மூலோபாய தோல்வியாக சரிவடைந்துள்ளது. 12 நாட்களில், இஸ்ரேலின் போர் நோக்கங்கள் எதுவும் அடையப்படவில்லை.

ஈரானின் அணுசக்தி திட்டம் அழிக்கப்பட்டதாக ட்ரம்ப் கூறினார். ஆனால் அமெரிக்க உளவுத்துறை விரைவாக அதை மறுத்துள்ளது.

ஈரானின் முக்கிய உள்கட்டமைப்பு தப்பிப்பிழைத்தது விட்டது. மேலும் முக்கிய பொருட்கள் தாக்குதல்களுக்கு முன்பே வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டன.

ஈரான் ஏற்கெனவே வேறு இடங்களில் ஆழமான வசதிகளைக் கட்டியிருக்கலாம். ஈரானின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை அழிக்கவும் இஸ்ரேல் தவறிவிட்டது.

ட்ரம்ப் போர்நிறுத்தத்தை அறிவித்த பிறகு, ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியது. பீர்ஷெபா மற்றும் இஸ்ரேல் முழுவதும் உள்ள மூலோபாய தளங்களை தாக்கியது. ஹமாஸ் அல்லது ஹிஸ்புல்லா ஏற்படுத்திய சேதங்கள் எவற்றையும் விட இந்த சேதம் அதிகமாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க குண்டுவீச்சு இஸ்ரேலின் பலவீனத்தை எவ்வாறு அம்பலப்படுத்தியது என்ற தலைப்பில் கட்டுரையாளர் சவுமயா கனோஷி ஒரு கட்டுரையில் இவ்வாறு கூறுகின்றார்:

“அரபு ஆட்சிகள் தலைவணங்கலாம். இசைவாக்கம் அடையலாம். அடங்கியும் செல்லலாம்.. ஆனால், அவர்களின் மக்கள் அவ்வாறு செய்யவில்லை. எந்த அரபு அல்லது முஸ்லிம் தெருவிலும் அவதானித்து பாருங்கள், துடிப்பு இன்னும் அடங்காமல் துடித்துக்கொண்டிருப்பதை காணலாம். சுடர் இன்னும் எரிகிறது. சரணடையும் ஒவ்வொரு கனவும் புகையில் முடிந்துவிடும். பழைய ஒருமித்த கருத்து இறந்து கொண்டிருக்கின்றது.

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியினரிடையே பலஸ்தீனர்களுக்கான ஆதரவு, இஸ்ரேலுக்கான ஆதரவை முந்தியுள்ளது. இளம் குடியரசுக் கட்சியினரிடையே அதே மாற்றம் தொடங்குகிறது. ட்ரம்பின் அடித்தளத்திலும் கீறல் விழத் தொடங்கியுள்ளது. “

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் ‘தி பலஸ்தீன குரோனிக்கல்’ இதழின் ஆசிரியருமான ராம்ஸி பரௌட், “அனைத்து இராணுவ மதிப்பீடுகள் மற்றும் புவிசார் அரசியல் நாடகங்களுக்கு மத்தியில், ஒரு உண்மை தனித்து நிற்கிறது என்று கூறுகிறார். அது மிகவும் முக்கியமானதாக இருந்த வேளையில் ஈரானிய மக்கள் ஒற்றுமையாக நின்றனர்.

நெதன்யாஹு தெஹ்ரானில் ஆட்சி மாற்றத்தை அடையவில்லை. இது அவரது பல வருட பிரசாரத்தின் உண்மையான நோக்கமாகும்.

அதற்கு பதிலாக, அவர் ஒரு துணிச்சலாக எதிர்த்து நிற்கக் கூடிய மற்றும் ஒருங்கிணைந்த ஈரானை நேரில் கண்டு கொண்டார். அது துல்லியத்துடனும் ஒழுக்கத்துடனும் பதிலடி கொடுத்தது.

இவை எல்லாவற்றிலும் பார்க்க மிக முக்கியமான வளர்ச்சிப் புள்ளி ஒன்றும் உள்ளது. அதை வெறுமனே ஏவுகணைகள் அல்லது உயிரிழப்புகளினால் மட்டும் அளவிட முடியாது.

அதுதான் ஈரானுக்குள் ஏற்பட்டுள்ள தேசிய ஒற்றுமையின் எழுச்சி மற்றும் அரபு மற்றும் முஸ்லிம் உலகம் முழுவதும் அது பெற்ற பரவலான ஆதரவு என்பனவாகும்.

பாக்தாத் முதல் பெய்ரூட் வரை, அம்மான் மற்றும் கெய்ரோ போன்ற அரசியல் ரீதியாக எச்சரிக்கையான தலைநகரங்களில் கூட ஈரானுக்கு ஆதரவு அதிகரித்தது. இந்த ஒற்றுமை மட்டுமே இஸ்ரேலுக்கு இனி மிகவும் வலிமையான சவாலாகவும் இருக்கும்.

ஈரானுக்குள், சீர்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையிலான ஆழமான பிளவுகளை இந்த யுத்தம் அழித்தது தரைமட்டம் ஆக்கியுள்ளது.

தமது இருப்புக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஈரானிய மக்கள், எந்தவொரு தலைவரையும் அல்லது கட்சியையும் சுற்றி அல்லாமல், தங்கள் தாயகத்தின் பாதுகாப்பைச் சுற்றி ஒன்றிணைந்தனர்.

அனைத்து இராணுவ மதிப்பீடுகள் மற்றும் புவிசார் அரசியல் நாடகங்களுக்கு மத்தியில், ஒரே ஒரு உண்மை மட்டும் தனித்து நிற்கின்றது. உண்மையான வெற்றியாளர்கள் ஈரானிய மக்கள்தான் என்பது தான் அந்த யதார்த்தமாகும்.

அது மிகவும் முக்கியமான புள்ளிக்கு வந்தபோது, அவர்கள் ஒற்றுமையாக நின்றனர். உள் மோதல்களை விட வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்ப்பது மிகவும் முக்கியமானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர்.

ஒரு நாடு நெருக்கடியான தருணங்களில் இருக்கின்ற போது அந்த நாட்டு மக்கள் வரலாற்றில் வெறும் துணை நடிகர்கள் அல்ல. அவர்கள் அந்த அத்தியாயத்தின் ஆசிரியர்கள் என்பதை அவர்கள் உலகிற்கும் தங்களுக்கும் நினைவூட்டிக் கொண்டனர்.

ஒட்டுமொத்தமாக ஈரான் உலகெங்கிலும் உறக்க நிலையில் உள்ள முஸ்லிம்களை தட்டி எழுப்பியது.

அவர்களின் நம்பிக்கையையும் கண்ணியத்தையும் மீட்டெடுத்தது. தங்கள் இருப்புக்காக ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலை திருப்திப்படுத்தும் முயற்சியில், தங்கள் சொந்த மக்களையும் அவர்களின் தூய மார்க்கமான இஸ்லாத்தையும் மற்றும் முஸ்லிம்களையும் தோல்வியுறச் செய்து வந்த அரபு சர்வாதிகாரிகளை அம்பலப்படுத்தியது .

இந்த ஆட்சிகள் காலப்போக்கில் வீழ்ச்சியடையும் என்று பல அரசியல் வர்ணனையாளர்கள் அஞ்சுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

லத்தீப் பாரூக்

Share.
Leave A Reply