“உன் கணவனுடன்உறவுகொள்வதால் தான், உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. தீர்க்கதரிசனம் பெற்ற என்னுடன் உறவுகொண்டால் உன் நோய்கள் குணமாகும்” எனக் கூறி, இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற போதகரைக் கைதுசெய்திருக் கின்றனர் போலீஸார்!
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து, மேக்காமண்டபம் பகுதியிலுள்ள பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றிருக்கிறார் அவர்.
அங்கிருக்கும் போதகர் ரெஜிமோன், அவரை குணப்படுத்த, தனிமையில் அழைத்துப்போய் ஜெபம் செய்வதாகக் கூறிக் கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார்.
அங்கிருந்து தப்பி வந்த இளம்பெண், தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து,
போதகர் ரெஜிமோனை 26-6-2025 அன்று போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இது பற்றி பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் கூறுகையில், “அந்தப் பெண்ணுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. உடல்நலக் குறைவு உள்ளிட்ட பிரச்னை காரணமாக, கடந்த சில மாதங்களாக அவர் பெற்றோர் வீட்டில் வசித்துவருகிறார்.
நோயைத் தீர்ப்பதற்காக மேக்காமண்டபம், பாண்டிவிளையில் போதகர் ரெஜிமோன் நடத்திவரும் பூரண சுவிஷேச பெந்தெகொஸ்தே சபைக்கு அந்தப் பெண்ணை உறவினர்கள் அழைத்துச் சென்றனர்.
அங்கு, ‘பெண்ணின் வருமானத்தில் தசமபாகமான 10 சதவிகிதம் தொகையை சபைக்குக் காணிக்கையாகச் செலுத்தினால், உடல்ரீதியான பிரச்னைகள் தீரும்’ என போதகர் ரெஜிமோன் கூறினார்.
அந்தப் பெண்ணும் அவர் சொன்னபடி குறிப்பிட்ட தொகையை, சபைக்குக் காணிக்கையாகச் செலுத்திவந்தார்.
ஆனாலும், அவரது நோய் தீராததைத் தொடர்ந்து, நாகர்கோவிலிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார்.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, பெந்தெகொஸ்தே சபைக்குச் செல்வதை நிறுத்தினார்.
இதையடுத்து போதகர் ரெஜிமோன் பெண்ணின் வீட்டுக்கே சென்று ஜெபம் செய்ததுடன், மீண்டும் சபைக்கு வரும்படி அழைத்தார்.
இதையடுத்து அந்தப் பெண் பெற்றோருடன் சபைக்குச் சென்றார். அப்போது தனியாக ஜெபம் செய்வதாகப் பெண்ணை அழைத்த போதகர் ரெஜிமோன், தலையில் கைவைத்து ஜெபம் செய்வதுபோல, ‘நீ அழகாக இருக்கிறாய். உன் முன்னழகு பெரிதாக இருக்கிறது’ என உடலின் ஒவ்வொரு பாகத்தையும் ஆபாசமாக வர்ணித்திருக்கிறார்.
பின்பு, ‘உன் கணவனின் விந்தில் விஷம் இருக்கிறது. நீ அவனுடன் உறவுகொள்வதால்தான் உனக்கு உடல்நலக் குறைவு ஏற்படுகிறது.
அவனை விவகாரத்து செய்துவிடு. நான் தீர்க்கதரிசனம் பெற்றவன். என்னுடன் உறவு வைத்துக்கொண்டால் என் விந்தணுக்கள் உனது நோய்களைத் தீர்த்து வலிமையை ஏற்படுத்தும். இது தீர்க்கதரிசனம் மூலம் எனக்கு வெளிப்பட்டது’ எனக் கூறியிருக்கிறார்.
இது பற்றிப் பெற்றோரிடம் சொன்னால், அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து சொல்லாமல் இருந்திருக்கிறார்
அந்தப் பெண். இதற்கிடையே, 23-5-2025 அன்று இரவு 8 மணியளவில், பெற்றோருடன் பெந்தெகொஸ்தே சபைக்குச் சென்றிருக்கிறார்.
‘உங்கள் மகளுக்குத் தனியாக ஜெபம் செய்ய வேண்டும்’ என்று பெற்றோரிடம் சொல்லிவிட்டு, அந்தப் பெண்ணை பிரேயர் ஹாலுக்கு அழைத்துச் சென்ற போதகர்,
ஜெபத்துக்கு இடையே, ‘நான் கூறியதை யோசித்துப் பார்த்தாயா?’ எனக் கேட்டிருக்கிறார். அந்தப் பெண் பதில் சொல்லாமல்
அமைதியாக இருக்க, அவரைக் கட்டிப்பிடித்து, உடலின் பல இடங்களில் கைகளால் தடவியதுடன், அந்தப் பெண்ணின் ஆடையை அவிழ்க்க முயன்றிருக்கிறார்.
சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், கூச்சலிட்டபடியே அங்கிருந்து வெளியே ஓடியிருக்கிறார். வெளியே நின்ற தன் பெற்றோரிடம் நடந்ததைக் கூறியதுடன், தக்கலை காவல் நிலையத்திலும் புகாரளித்தார்.
போலீஸார் வழக்கு பதிவுசெய்து ரெஜிமோனைக் கைது செய்தனர்” என்றனர்.போதகர் ரெஜிமோன், ஏற்கெனவே கடமலைக்குன்று பகுதியில் ஒரு பெந்தெகொஸ்தே சபையில் ஊழியம் செய்துவந்தார்.
ஆனால், அவர் பெண்கள் விஷயத்தில் வீக்கானவர் எனத் தெரிந்ததை அடுத்து, சபையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதன் பின்னர்,
தனியாகச் சபை தொடங்கிய ரெஜிமோன், பெண்களிடம் பாலியல் ஏமாற்று வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவந்திருக்கிறார்.
இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி டாக்டர் ஸ்டாலினிடம் பேசினோம். “தக்கலை பாஸ்டர் மீது ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில், பாஸ்டரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம்.
அவரால் வேறு பெண்கள் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், தைரியமாகப் புகாரளிக்கலாம். அப்படிப் புகார்கள் வரும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் 8122223319 என்ற எனது வாட்ஸ்அப் எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.
பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்றார்.
போலி போதகர்களால், சாத்தானின் கூடாரங்களாகிவிடக் கூடாது சபைகள்!

