செம்மணி புதைகுழி விவகாரம் தற்போது சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்துள்ளது. சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட இதுவரை 52 பேரின் எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 47 பேரின் எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டேர்க் மேற்படி செம்மணி புதைகுழி அமைந்துள்ள சித்துபாத்தி பகுதிக்கு நேரடியாக சென்று வந்ததன் மூலமும் இவ்விவகாரத்தில் விசேட தடயவியல் நிபுணர்களின் வகிபாகம் அவசியம் என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததன் காரணமாக செம்மணி விவகாரம் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஆட்சியில் செம்மணி விவகாரம் அதிகம் பேசப்படுவதற்குக் காரணம் முன்னாள் ஜனாதிபதிகளை பொறியில் சிக்க வைக்கவா என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
செம்மணி விவகாரத்தில் அநுர அரசாங்கம் ஏன் அதிக அக்கறை காட்டுகின்றது என்பது ஒரு கேள்வியாகும்.
முன்னாள் ஜனாதிபதிகள் மீதுள்ள ஊழல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வரும் அநுர அரசாங்கம், போர்க்குற்ற சம்பவங்களிலும் இவர்களை நுணுக்கமாக மாட்டி வைக்கும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளதாக என கேள்விகள் எழுந்துள்ளன.
அது உண்மையானால் செம்மணி விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மகிந்த ஆகியோரே பொறியில் சிக்குவர்.
ஏனெனில் அவர்களின் ஆட்சி காலத்திலேயே அதிகமான போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிக முக்கியமாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க இரண்டு சந்தர்ப்பங்களில் ஜனாதிபதியாக விளங்கிய 1994 –2004 காலப்பகுதியிலேயே இந்த செம்மணி மனித புதைகுழி உருவாகியுள்ளது.
சுண்டுக்குழி மகளிர் கல்லூரிஉயர்தர மாணவியான கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் படுகொலை சம்பவங்களுக்குப்பின்னரே 1998 ஆம் ஆண்டு இந்த செம்மணி புதைகுழி வெளிவந்தது.
1996 செப்டம்பர் 7 அன்று சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர வேதியியல் பாட சோதனை எழுதிவிட்டு கிருஷாந்தி சைக்கிளில் வீடு திரும்பும் வழியில் காணாமல் போனார். கைதடி காவலரணில் முற்பகல் 11:30 மணியளவில் அவர் உயிருடன் காணப்பட்டார்.
அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து அவரது தாயாருக்குத் தெரிவித்தனர்.
இதனால் கவலையடைந்த அவரது தாய் ராசம்மா, தம்பி பிரணவன் (வயது 16), குடும்ப நண்பரும் அயலவருமான சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது-35, தென்மராட்சி பலநோக்குக் கூட்டுறவுச் சங்க உதவியாளர்)
ஆகியோர் கிரிசாந்தியை தேடி சோதனைச் சாவடிக்குச் சென்றனர். ஆனால் அவர்களும் மாயமாய் காணாமல் போகினர்.
அதையடுத்து இடம்பெற்ற முறைப்பாடுகள் மற்றும் விசாரணைகளின் பின்னர் நான்கு பேரின் உடல்களும் பின்னர் இராணுவ தளத்திற்குள் கண்டெடுக்கப்பட்டன.
ராசம்மாவின் சடலத்தின் கழுத்தில் முக்கால் அகலத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது. கிருபாகரனின் உடலில் கயிறு இறுக்கப்பட்டிருந்ததால், கிருபாகரனும் அதே முறையில் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
கிரிசாந்தியினதும், அவரது தம்பி பிரணவனினதும் உடல்கள் பல துண்டுகளாக வெட்டப்பட்டு, கறுப்பு நிற தாள்களால் சுற்றப்பட்டிருந்தன.
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கிருசாந்தி ஐந்து இராணுவத்தினரால் கடத்தப்பட்டதாகவும், ஆறு பேர் அவரை சோதனைச் சாவடியில் வைத்து குழு பாலியல் வல்லுறவு செய்து கொன்றதாகவும் தெரியவந்தது.
இறுதியாக கிருசாந்தியையும் கொன்று விட்டு நால்வரினதும் உடல்களையும் மூன்று புதைகுழிகளில் புதைத்துள்ளனர்.
இதையடுத்து இந்த கொலைகளுக்கு பின்னணியாக செயற்பட்ட பிரதான சந்தேக நபரான இராணுவ வீரர் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச, மாணவி கிருஷாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்திரை கற்பழித்து படுகொலை செய்ததற்காக மரண தண்டனையை எதிர்கொண்டார்.
அதே வேளை குடாநாட்டில் இருந்து காணாமல் போனவர்களின் உடல்கள் அடங்கிய புதைகுழிகள் இருப்பதாக அவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
சோமரத்ன ராஜபக்ச
ராஜபக்சவும் அவரது இணைப் பிரதிவாதிகளும் இந்தக் கொலைகளுக்குப் பொறுப்பானதாகக் கூறப்படும் 20 பாதுகாப்புப் படை வீரர்களின் பெயர்களைக் கொடுத்தனர்.
1995, 1996 ஆம் ஆண்டுகளில் விடுதலைப் புலிகளிடம் இருந்து அரச படையினரால் மீட்கப்பட்ட யாழ்ப்பாண குடாநாட்டில் இருந்து காணாமல் போன நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு செம்மணி கிராமத்திற்கு அருகில் உள்ள புதைகுழிகளில் புதைக்கப்பட்டதாக அவர் கூறினார். அங்கு சுமார் 300 முதல் 400 உடல்கள் புதைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்தையடுத்தே செம்மணி பகுதியில் மனித புதைகுழிகளை தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
1999 ஆம் ஆண்டு முதற்கட்ட அகழ்வில் 15 சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. இவை 95 ஆம் ஆண்டு காணாமல் போன ஆண்களுடையது என அடையாளம் காணப்பட்டது.
அதைத்தொடர்ந்து இலங்கை அரசாங்கம் இதில் அக்கறை காட்டாமல் உண்மைகளை மூடி மறைத்து புதைகுழிகளை தோண்டும் பணிகளை இடைநிறுத்தியது.
சந்திரிகா அரசாங்கத்திற்குப்பிறகு 2004 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகி மகிந்த ராஜபக்ச ஐந்து ஆண்டுகளில் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
2010 ஆம் ஆண்டு மீண்டும் அவர் ஜனாதிபதியாக தெரிவானவுடன் புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்நாட்டு தமிழ்க் கட்சிகள் போர்க்குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியவுடன் இந்த செம்மணி விவகாரம் பேசா பொருளானது. அதன் பின்னர் போர்க்குற்றங்கள் , காணாமல் போனோர் விவகாரங்களில் மகிந்த அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியது.
மேலும் யுத்தம் முடிவுற்றபிறகும் வடக்கு கிழக்கில் பல பிரதேசங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் மனித புதைகுழிகள் பற்றிய பேச்சுக்கள் எழவில்லை.
இப்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் செம்மணி விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷாந்தி குமாரசாமி விடயத்தில் வாக்குமூலம் வழங்கிய ராஜபக்சவை மேலதிக விசாரணைகள் செய்வதன் மூலம் இந்த விடயத்தில் மறைந்துள்ள உண்மைகளை வெளிக்கொணரலாம்.
மேலும் 1995 இலிருந்து 2009 வரை ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளான சந்திரிகா மற்றும் மகிந்த இருவருமே இவ்விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் ஆவர். அதை இலக்கு வைத்தே அநுர அரசாங்கம் இந்த விடயத்தை வெளிக்கொணர்ந்துள்ளது எனலாம்.
சி.சி.என்