காடுகளில் கரடிகள் அல்லது பெரிய பூனைகள் போன்ற சில பாலூட்டிகள், தங்களது குட்டிகளை வாயால் மெதுவாக தூக்கி, பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்வதைப் பொதுவாகவே நாம் பார்த்திருக்கலாம்.
ஆனால் ஒரு யானை இதைச் செய்வது, அதிலும் குறிப்பாக, அது சுமந்து செல்லும் குட்டி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் இவ்வாறு செய்வது மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.
இலங்கையின் கவுடுல்லா தேசிய பூங்காவில் ஜூன் மாத இறுதியில், தாய் யானை ஒன்று, உயிரற்ற தனது குட்டியின் உடலை பல நாட்களாக தன்னுடன் எடுத்துச் செல்லும் மிகவும் வேதனையூட்டும் காட்சி ஒன்றை ஒரு உள்ளூர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார்.
“அந்த யானை அக்குட்டியை கைவிட தயாராக இல்லை. அதனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது,” என்று கூறுகிறார் புகைப்படக் கலைஞர் சஞ்சய மதுஷன்.
தன் வயிற்றில் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் சுமந்த, தற்போது இறந்துவிட்ட குட்டியை, அந்த தாய் யானை பிடித்துக் கொண்டிருந்தது கொஞ்ச நேரமல்ல.
“தாய் யானை அதை மூன்று நாட்கள் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தது” என்று பிபிசியிடம் கூறுகிறார் மதுஷன் .
அப்போது பூங்காவில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற தாய் யானையை அவர் கண்காணித்தார்.
“முந்தைய நாள் பிறந்தவுடனே அந்தக் குட்டி இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்,” என்றும் அவர் கூறினார்.
மரணம் நிகழ்ந்தால் விலங்குகளுக்கு அது புரியுமா?
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் சிறிய பரப்பளவைக் கருத்தில் கொண்டால் உலகிலேயே அதிக யானைகள் பரவல் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது.
யானை

,யானை துக்கம் அனுசரிக்குமா என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட Elephas maximus maximus என்ற யானை இனம், ஆசிய யானைகளில் மிகப்பெரிதாகவும், மிகக் கருமையானதாகவும் அறியப்படுகிறது. இந்த யானைகள், கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் இடமாக கவுடுல்லா தேசிய பூங்கா உள்ளது.
“இங்கு 300க்கும் மேற்பட்ட யானைகள் கூடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதனால், யானைகள் கூட்டமாக கூடுவதை அடிக்கடி பார்த்திருந்தாலும், இதுபோன்ற உணர்ச்சிகரமான காட்சியை நான் கண்டது இதுவே முதல் முறை,” என்கிறார் மதுஷன்
“ஆனால் அந்த யானை ஏன் இப்படி நடந்துகொள்கிறது? அது துக்கத்தை வெளிப்படுத்துகிறதா? அல்லது இது ஒரு தற்செயலான நிகழ்வா?” என்று சமூக ஊடகங்களில் வியப்பை வெளிப்படுத்தும் பலரைப் போலவே அவரும் ஆச்சரியப்படுகிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் விலங்கு நடத்தை மற்றும் நலன் தொடர்பான இணைப் பேராசிரியரான முனைவர் லீன் ப்ரூப்ஸ் பேசுகையில், “இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினம், இருப்பினும் இதேபோன்ற காட்சிகள் உலகம் முழுவதும் முன்னர் பதிவாகியுள்ளன” என்று கூறுகிறார்.
“மற்ற விலங்குகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உணர்வது கடினம். அவை மரணத்தை எவ்வளவு தூரம் புரிந்துகொள்கின்றன என்பதும், மரணம் எல்லோருக்கும் வரும் ஒன்று, அது திரும்ப முடியாத ஒன்று போன்ற மரணத்தின் முக்கிய அம்சங்களையும் புரிந்துகொள்கின்றனவா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது,” என்று முனைவர் லீன் ப்ரூப்ஸ் பிபிசியிடம் கூறினார்.

ஒரு பெண் ஆசிய யானை தனது இறந்த குட்டியை வாயில் சுமந்து செல்லும் படம்.
இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ துறையின் யானை நிபுணரான பேராசிரியர் அசோக தங்கொல்ல, இலங்கையில் ஒரு யானை இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்ப்பது இதுவே முறையாக இருந்தாலும், அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்.
“ஏனென்றால் அவற்றுக்கும் உணர்வுகள் உள்ளன. அந்த உணர்வுகளை யானைகள் பகிர்ந்து கொள்கின்றன. தாய்-குட்டி பிணைப்பு மிகவும் வலுவானது,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.
“நான் இதை விலங்கினங்களில், குறிப்பாக குரங்குகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் யானைகள் இதைச் செய்வது கொஞ்சம் விசித்திரமானது,” என்றும் அவர் விளக்கினார்.
அந்த யானை குழப்பமடைந்திருக்கலாம் என்றும் முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார்.
“ஆனால் யானைகள் ஒரு உயிருள்ள குட்டியை சாதாரணமாக இழுத்துச் செல்லாது. அதனால், இது ஒருவித உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை தான் என நான் நினைக்கிறேன்” என்று அவர் கூறுகிறார்.
“விலங்குகள் இறப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பற்றி, இப்போது கம்பேரெட்டிவ் தானடோலஜி(Comparative Thanatology) எனப்படும் ஒரு புதிய அறிவியல் துறையில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த துறையில் விஞ்ஞானிகள் இந்த நடத்தைகளை நெருக்கமாகக் கவனித்து ஆராய்கிறார்கள்” என்று அவர் விளக்கினார்.
“விலங்குகள் இறப்பைப் பற்றி என்ன தெரிந்துகொள்கின்றன என்பதை உணர்வதற்காக, இதுபோன்ற அறிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை ஒன்று சேர்த்து, ஒரு முறையான வழியில் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மற்ற விலங்குகளிலும் இதேபோன்ற நடத்தை உள்ளதா ?
யானைகள் மட்டும் இத்தகைய நடத்தையை வெளிப்படுத்துவதில்லை. விலங்குகள், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்த அவற்றின் சக விலங்குகளின் அருகே தங்கியிருப்பது பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்பட்டுள்ளது.
திமிங்கிலம் J35 (தஹ்லெக்வா என்று அறியப்படுகிறது)
,
திமிங்கலம் J35 (தஹ்லெக்வா என்று அறியப்படுகிறது) 17 நாட்களுக்கு தனது இறந்த குட்டியின் உடலைத் தள்ளிக்கொண்டிருப்பது காணப்பட்டது.
தஹ்லெக்வா (Tahlequah) என்ற திமிங்கலம், 2018-ஆம் ஆண்டு, இறந்துவிட்ட தனது குட்டியின் உடலை 17 நாட்கள் தொடர்ந்து தள்ளிச் சென்றபோது, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதே திமிங்கலம் மற்றொரு குட்டியை இழந்த பிறகு மீண்டும் துக்கத்தில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள திமிங்கல ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
“அந்தத் திமிங்கலம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. ஏனென்றால், அது இறந்த தன் குட்டியை தனது மூக்குப் பகுதியில் (ரோஸ்ட்ரம்) சமநிலையுடன் தக்கவைக்க வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமானது. ஆனால், அது தனது குட்டியை இரண்டு வாரங்கள் பிடித்துக்கொண்டிருந்தது,” என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ்.
இதற்கிடையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், யானைக் கூட்டங்கள் இறந்த குட்டிகளை மண்ணால் மூடுவதைக் காணும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டன. சிலர் இதை ‘புதைப்பது போன்ற செயல்பாடு’ என விவரிக்கின்றனர்.
“யானைகள் உருவாக்கும் புதைகுழிகள் பற்றிய இந்த தகவல்களை விளக்குவது மிகவும் சிக்கலான ஒன்று என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, எறும்புகள் மற்றும் எலிகள் போன்ற பிற இனங்கள் உள்ளன. அவையும் இறந்தவற்றை புதைக்கும்,” என்று முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார்.
இலங்கையில் சமீப காலமாக, காடுகளை அழிப்பது மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மனித – யானை மோதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்படுகின்றன, மற்றும் பல இளம் குட்டிகள் தாய் யானைகளை இழந்துவிடுகின்றன.
யானைகள் தங்கள் அறிவை ஒரு தாய்வழி சமூகத்தின் ஒரு பகுதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்து தலைமுறைக்கு கடத்துகின்றன. இளைய யானைகள் தங்கள் மூத்த யானைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றன.
“ஒரு குழுவில் முதிய யானைகள் கொல்லப்பட்டால், மனிதர்களைப் போலவே, யானைகளுக்கும் கற்றுக்கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள்.
அதனால், அவை புரிந்துகொள்ளவோ, அல்லது சரியான முறையில் நடந்து கொள்ளவோ முடியாது. அதனால், குடும்பங்கள் உடைந்துவிட்டால், அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும்,” என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ்.
– இது, பிபிசி நியூஸ்-

