செங்கடலில் ஏமனின் ஹூத்திகள் தாக்குதல் நடத்தி சரக்குக் கப்பல் ஒன்றை மூழ்கடித்த சம்பவத்தில் பத்து பேர் காப்பற்றப்பட்டுள்ளனர், மூவர் கொல்லப்பட்டுள்ளனர்.

நவம்பர் 2023ஆம் ஆண்டு முதல் அவர்கள் சுமார் 70 வணிக கப்பல்கள் மீது ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சிறு படகுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர், நான்கு கப்பல்களை மூழ்கடித்துள்ளனர், ஐந்தாவதாக ஒரு கப்பலை கைப்பற்றியுள்ளனர். அதோடு அவர்கள் குறைந்தது ஏழு பேரைக் கொன்றுள்ளனர்.

ஹூத்திகள், இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினர் என்பதுடன், காஸாவில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹெஸ்பொலாவுடன் இணைந்து “எதிர்ப்பு அச்சின்” ஓர் அங்கமாக உள்ளனர்.

இந்தக் குழு இஸ்ரேலுடன் தொடர்புடையவை என நம்பும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

ஹூத்திகள் நடத்தியுள்ள தாக்குதல்கள் யாவை?

காஸாவில் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைக்கு பதிலளிப்பதாகக் கூறி, 2023 நவம்பரில் ஹூத்திகள் இஸ்ரேல் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

செப்டம்பர் 2024இல் இஸ்ரேலின் முக்கிய விமான நிலையத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தீவிர ஏவுகணைத் தாக்குதலும் இதில் அடங்கும்.

இந்தத் தாக்குதல்களில் பெரும்பாலானவற்றை இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் முறியடித்துவிட்டது. ஆனால் 2024இல் ஒரு டிரோன் டெல் அவிவ் மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், 10 பேர் காயமடைந்தனர்.

நவம்பர் மாதம் முதல் ஹூத்திகள் ஏமன் கடற்கரையை ஒட்டிய கடற்பரப்பில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நவம்பர் 19ஆம் தேதி செங்கடலில் அவர்கள் ஒரு வணிக கப்பலை சிறை பிடித்தனர்.

அவர்கள் செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் ஏவுகணை மற்றும் குண்டுகள் தாங்கிய டிரோன் படகுகள் மூலம் சுமார் 100 கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தியுள்ளனர்.

ஒரு பெரிய சரக்கு கப்பல் பாதி மூழ்கிய நிலையில் காணப்படுகிறது


 இஸ்ரேலுடன் தொடர்புடையவை என அவர்கள் கூறும் பல கப்பல்கள் மீது ஹூத்திகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்

அதற்குப் பிறகு அவர்கள் தாக்கிய இரண்டு கப்பல்கள் மூழ்கின, பல டஜன் கப்பல்கள் சேதமடைந்துள்ளன.

கடந்த 2024 மார்ச் மாதத்தில் பார்படாஸ் கொடியுடன் சென்ற ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்குக் கப்பல் மீது நடந்த ஹூத்தி ஏவுகணைத் தாக்குதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலுக்கு சொந்தமான, இஸ்ரேலிய கொடியைத் தாங்கிய அல்லது இஸ்ரேலால் இயக்கப்பட்ட அல்லது இஸ்ரேல் துறைமுகங்களுக்குச் செல்வதாக அவர்கள் நம்பும் கப்பல்களைக் குறிவைப்பதாக அந்தக் குழு கூறுகிறது. ஆனால் ஹூத்திகள் தாக்குதல் நடத்திய பல கப்பல்களுக்கு இஸ்ரேலுடன் எந்தத் தொடர்பும் இல்லை.

கடந்த 2024 செப்டம்பரில், அமெரிக்க கடற்படையின் கூற்றுப்படி ஹூத்திகள் அந்தப் பகுதியில் இருக்கும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் மீது “மிகவும் நுட்பமான தாக்குதலை” நடத்தினர். ஆனால் அவர்களது ஏவுகணைகள் அனைத்தும் சுட்டுவீழ்த்தப்பட்டன.

இதற்கு பதிலளிக்கும் வகையில், அமெரிக்க படைகள் ஏமனில் இருக்கும் ஹூத்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தளங்களில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த அந்தக் குழு பயன்படுத்தி வந்த ஆயுதங்களின் பாகங்கள் இருந்ததாக அமெரிக்க ராணுவம் கூறுகிறது.

ஏமன் மீது ஏழு வாரங்களாக தொடர்ந்து தீவிர தாக்குதல்களை அமெரிக்கா மேற்கொண்டது. அதைத் தொடர்ந்து ஹூத்திகள் அமெரிக்காவுடன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு மே மாதத்தில் ஒப்புக்கொண்டனர்.

சரக்கு கப்பல் ஒன்றில் ஹூதி வீரர்கள்

நவம்பர் 2023இல் பிரிட்டனுக்கு சொந்தமான ஜப்பான் வழிநடத்திய கப்பலை செங்கடலில் ஹூத்தி வீரர்கள் சிறை பிடித்தனர்

ஆனால், ஏமன் மீது பல சுற்று பதிலடி தாக்குதல்களை நடத்தியுள்ள இஸ்ரேல் மீதான தாக்குதல்களை நிறுத்துவது இந்த ஒப்பந்தத்தில் இடம்பெறவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

ஜூலை, 2025இல் ஒரு வாரத்தில் மேலும் இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன. மேஜிக் சீஸ் மற்றும் எட்டர்னிட்டி-சி என்ற அந்த இரண்டும் லைபீரிய கொடிகளை தாங்கிய, கிரேக்கர்களால் நடத்தப்பட்ட கப்பல்கள். அவை இஸ்ரேலுக்கு சென்று கொண்டிருந்ததாக அந்தக் குழு சொல்கிறது.

இந்தத் தாக்குதல்கள், “கடற்பயண சுதந்திரத்திற்கும், பிராந்திய பொருளாதார மற்றும் கடல் போக்குவரத்துப் பாதுகாப்புக்கும் இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகளால் ஏற்படும் அபாயத்தைக் காட்டுவதாக” அமெரிக்க வெளியுறவுத் துறை கண்டனம் தெரிவித்தது.

ஹூத்தி தாக்குதல் அபாயம் பல கப்பல் நிறுவனங்களை செங்கடலைத் தவிர்க்க வைத்துள்ளது.

சர்வதேச அளவில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் சரக்குகளில் 15% செங்கடலைப் பயன்படுத்துகின்றன. எனவே இது சர்வதேச வணிகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

ஹூத்தி புரட்சியாளர்கள் விஷயத்தில் அமெரிக்காவும் பிற நாடுகளும் செய்வது என்ன?

ஏமனை சுற்றிய பகுதிகளில் கடற்பாதைகளைப் பாதுகாக்க அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் மேலும் 12 நாடுகளின் கடற்படைகள் ஆபரேஷன் பிராஸ்பெரிட்டி கார்டியன் என்ற பெயரில் ஒரு பாதுகாப்பு பணியைத் தொடங்கியுள்ளன.

கடந்த 2024 ஜனவரி முதல் ஏமனில் உள்ள ஹூத்தி தளங்கள் மீது அமெரிக்க மற்றும் பிரிட்டன் படைகள் பல வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஹூத்தி தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் அவர்களது தளங்களின் மீது இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

அமெரிக்காவின் தாக்குதல்களில் நீண்ட தூர ஸ்டெல்த் வகை குண்டு வீசும் விமானங்களும் அடங்கும். இவை ஆயுதங்கள், பாகங்களைச் சேமித்து வைத்திருக்கும் நிலத்தடி தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தின.

கடந்த 2024 அக்டோபர் தாக்குதல்கள் அமெரிக்காவால் அதன் எதிரிகள் “எட்ட முடியாத இடத்தில்” வைக்க விரும்பும் இடங்களைக்கூட தாக்க முடியும் என்பதைக் காட்டியதாக அமெரிக்க முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் லாய்ட் ஆஸ்டின் தெரிவித்தார்.

 

யார் இந்த ஹூத்திகள்?

ஏமனின் ஷியா இஸ்லாமிய சிறுபான்மையினரான ஜைதிகளை ஆதரிக்கும் ஆயுதமேந்திய அரசியல் மற்றும் மதக் குழுதான் ஹூத்தி.

அவர்கள், மத்திய கிழக்கில் ஹமாஸ், ஹெஸ்பொலா உள்ளிட்ட பிற ஆயுதக் குழுக்களோடு இணைந்து இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் பரந்த மேற்கு உலகுக்கு எதிரான இரான் தலைமையிலான “எதிர்ப்பின் அச்சு” இயக்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

முறையாக அன்சார் அல்லாஹ் (கடவுளின் ஆதரவாளர்கள்) என்று அழைக்கப்படும் இந்தக் குழு, 1990களில் தோன்றியது. இயக்கத்தின் மறைந்த நிறுவனர் ஹுசைன் அல்-ஹூத்தியின் பெயரில் இருந்து அதன் பெயரைப் பெற்றது. அவரது சகோதரர் அப்துல் மாலிக் அல்-ஹூத்தி தற்போதைய தலைவராக உள்ளார்.

கடந்த 2000களின் ஆரம்பக் காலத்தில், ஏமனின் நீண்ட கால அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக ஹூத்திகள் தொடர் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். ஏமனின் வடக்கில் தங்களது தாய்நாட்டுப் பகுதிக்கு அவரது சர்வாதிகார ஆட்சியின் தலையீடு குறைவாகவும், கூடுதலான சுயாட்சி அதிகாரங்களும் வேண்டுமென அவர்கள் விரும்பினர்.

கடந்த 2011ஆம் ஆண்டு அரபி வசந்தத்தின்போது நிகழ்ந்த மக்கள் ஆதரவு பெற்ற ஒரு புரட்சி காரணமாக அதிபர் சலே தனது ஆட்சியை துணை அதிபர் அப்துரப்பு மன்சூர் ஹாதியிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஏமன் தலைநகர் சனாவில் நடைபெற்ற பாலத்தீன ஆதரரு போராட்டத்தில் ஹூதி போராளிகள்


 இஸ்ரேலுக்கு எதிரான “எதிர்ப்பின் அச்சு” அமைப்பில் ஹூத்திகள் ஓர் அங்கமாக உள்ளனர்

அதிபர் ஹாதியின் ஆட்சியின்போது, அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட சலே மற்றும் அவருக்கு விசுவாசமான படையினருடன் ஹூத்திகள் ஒரு கூட்டணியை உருவாக்கிக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் வடக்கு மாகாணமான சடாவின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி, ஏமன் தலைநகர் சனாவை ஆக்கிரமித்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டில், இந்தப் புரட்சியாளர்கள் மேற்கு ஏமனின் பெரும்பகுதியைக் கைப்பற்றி, அதிபர் வெளிநாடு தப்பிச் செல்லக் காரணமாகினர்.

ஹூத்திகள் ஏமனை முழுமையாக ஆக்கிரமித்து அதைத் தனது எதிரியான இரானின் துணை நாடாக்கிவிடுவார்களோ என அண்டை நாடான செளதி அரேபியா அச்சமடைந்தது.

அது போரில் தலையிட்ட அரசுக் கூட்டணியை உருவாக்கியது. ஆனால் பல ஆண்டுகளாகத் தொடரும் வான்வழித் தாக்குதல்களும், தரைவழித் தாக்குதல்களும் ஹூத்திகள் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து அவர்களை அப்புறப்படுத்தவில்லை.

இப்போது செளதி அரேபியா ஹூத்திகளுடன் ஓர் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது. மேலும், ஐ.நா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தம் 2022 ஏப்ரல் முதல் அமலில் உள்ளது.

ஆயுத மோதல் நிகழ்விடம் மற்றும் நிகழ்வு தரவு திட்டத்தின்படி (Armed Conflict Location & Event Data Project – ACLED), இந்தப் போர் 160,000-க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்றுள்ளது, 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஹூத்திகளை ஆதரிப்பது யார்? அவர்களுக்கு ஆயுதங்கள் கிடைப்பது எப்படி?

ஹூத்திகள் செங்கடலில் கப்பல்களைத் தாக்க இரான் உதவியதாக அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இரான் தனது தலையீட்டை மறுத்துள்ளது.

ஏமன் உள்நாட்டுப் போரின்போது ஐநா ஆயுதத் தடைகளை மீறி டிரோன்கள், க்ரூஸ் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்பட ஆயுதங்களை ஹூத்திகளுக்கு இரான் கொடுத்ததாக செளதி அரேபியாவும், அமெரிக்காவும் கூறுகின்றன.

செளதி அரேபியா மற்றும் அதன் கூட்டாளியான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீதான தாக்குதல்களின்போது இதுபோன்ற ஏவுகணைகளும், டிரோன்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாடு கூறுகிறது.

ஹூத்திகளுக்கு ஆயுதங்கள் அளித்ததை மறுக்கும் இரான், அதற்கு அரசியல் ரீதியாக மட்டுமே ஆதரவளிப்பதாகச் சொல்கிறது.

“இரான் ஆயுதங்கள், பயிற்சி மற்றும் உளவுத் தகவல்கள் இல்லாமல் ஹூத்திகளால் இந்த அளவுக்குச் செயல்பட முடியாது,” என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மத்திய கிழக்கு விவகாரங்கள் நிபுணரான எலிசபெத் கெண்டல்.

அதேநேரம், “ஹூத்திகள் மீது இரானுக்கு நேரடியாகக் கட்டளையிடும் அதிகாரமும் கட்டுப்பாடும் இருக்கிறதா என்பதில் தெளிவில்லை,” என்றும் அவர் தெரிவித்தார்.

இத்தாலியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்டர்நேஷனல் பொலிடிகல் ஸ்டடிஸின் கூற்றுப்படி ஏமனில் டிரோன்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு ஹூத்திகளுக்கு இரான் உதவியது.

ஹூத்திகள் லெபனானை சேர்ந்த இஸ்லாமிய குழுவான ஹெஸ்பொலாவிடம் இருந்து ராணுவ ஆலோசனைகளையும் ஆதரவையும் பெற்றுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த வெஸ்ட் பாயின்ட் ராணுவ அகாடமியின் பயங்கரவாத எதிர்ப்பு மையம் கூறுகிறது.


கடந்த 2022இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியை குறிவைத்து அனுப்பப்பட்ட டிரோன் ஒன்றின் சிதைவுகள்

ஜூன் 2025இல் இரானின் உள்ள அணு ஆயுத மற்றும் ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல் நடத்தியது. இதன் பின்னர் இஸ்ரேலை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் மூலம் இரான் பதிலடி அளித்தது.

அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து 12 நாள் போர் முடிவுக்கு வந்தது. இந்தப் போர் இரானின் அணு ஆயுத ஆற்றலை கணிசமாகப் பலவீனப்படுத்தியிருக்கலாம்.

ஹூத்திகளின் மற்றொரு கூட்டாளியான லெபனானின் ஹெஸ்பொலா மீது 2024 செப்டம்பருக்கு பிறகு தீவிரமடைந்த இஸ்ரேலின் தொடர் தாக்குதலைத் தொடர்ந்து இது நடந்தது.

இரான் மற்றும் ஹெஸ்பொலா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், ஹூத்திகளுக்கு அவர்கள் அளிக்கக்கூடிய உதவியை எந்த அளவு பாதிக்கக்கூடும் என்பதில் தெளிவில்லை.

இஸ்ரேல் மீதான் தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களுக்கு பதிலடியாக 2025 ஜூலையில் இஸ்ரேல் ராணுவம் ஏமனில் ஹூத்திகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது.

இரான் ஆதரவு பெற்ற ஹூத்திகள் “தங்களது செயல்களுக்கு ஒரு பெரிய விலையைத் தர நேரிடும்,” என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.

“ஏமனின் விதி, டெஹ்ரானின் விதியைப் போன்றதுதான். இஸ்ரேலுக்கு தீங்கு விளைவிக்கும் யாராக இருந்தாலும் தீங்குக்கு உட்படுத்தப்படுவார்கள்,

இஸ்ரேலுக்கு எதிராக கரத்தை உயர்த்துபவர்களின் கரம் வெட்டப்படும்,” எனத் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்தார்.

ஏமனின் எவ்வளவு பகுதிகளை ஹூத்திகள் கட்டுப்படுத்துகின்றனர்?

ஹூத்திகள் சனா மற்றும் செங்கடல் கடற்கரைப்பகுதி உள்பட ஏமனின் வடக்கு-மேற்கு பகுதியைக் கட்டுப்படுத்துகின்றனர்.

ஏமனின் பெரும்பகுதி மக்கள் இந்தப் பகுதிகளில் வசிக்கின்றனர். ஹூத்திகள் இந்தப் பகுதியில் வரி வசூலித்து, பணம் அச்சிடும் ஓர் அரசை நடத்தி வருகின்றனர்.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அரசு, தெற்குப் பகுதியில் உள்ள ஏடன் துறைமுகத்தில் அமைந்துள்ளது.

கடந்த 2022இல் அதிபர் ஹாதி அதிகாரத்தை ஒப்படைத்த எட்டு உறுப்பினர் கொண்ட அதிபர் தலைமை மன்றம் இதைக் கண்காணிக்கிறது.

Share.
Leave A Reply