ஆமதாபாத் விமான விபத்து நடந்து சரியாக ஒரு மாதத்தில் முதல் கட்ட விசாரணை அறிக்கை ஜூலை 12-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு பணியகம் (ஏஏஐபி) இந்த அறிக்கையை வெளியிட்டது.

சனிக்கிழமை அதிகாலை வெளியான இந்த அறிக்கையில் அந்த விமானத்தை இயக்கிய இரண்டு விமானிகள் இடையே நடைபெற்ற உரையாடலும் இடம் பெற்றுள்ளது. விமானிகள் அறையில் அமைந்துள்ள ஒலிப்பதிவு கருவியில் இருந்து இந்த உரையாடல் மீட்கப்பட்டுள்ளது.

விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே விமானத்தின் 2 என்ஜின்களும் செயலிழந்துவிட்டன என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

இந்த சமயத்தில் விமானிகள் இருவரும் பேசிக் கொண்டது என்ன? அறிக்கையில் இதுதொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளது என்ன? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

ஆமதாபாத்தில் விபத்திற்குள்ளான ஏர் இந்தியா விமானம்

‘அதை ஏன் கட் ஆஃப் செய்தீர்கள்?’

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்திருக்கும் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரிட்டனின் லண்டனில் அமைந்திருக்கும் கேட்விக் விமான நிலையம் நோக்கி புறப்பட்டது இந்த ஏர் இந்தியா விமானம்.

ஏ.டி.பி.எல் உரிமம் பெற்ற கேப்டன், சி.பி.எல். உரிமம் பெற்ற கோ-பைலட் மற்றும் 10 பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்தனர்.

விமானத்தின் தலைமை விமானியாக பணியாற்றியவர் கேப்டன் சுமித் சபர்வால். அவரின் முதன்மை அலுவலராக அன்றைய தினம் பொறுப்பில் இருந்தவர் க்ளைவ் குந்தர். இவர்கள் இருவருமே மும்பையைச் சேர்ந்தவர்கள். இந்த விமான பயணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பாக அவர்கள் ஆமதாபாத் வந்தடைந்தனர். பணியை துவங்குவதற்கு முன்பு தேவையான ஓய்வு அவர்களுக்கு அளிக்கப்பட்டது.

இந்த விமான பயணத்தின் போது, இணை – விமானியான க்ளைவ் குந்தர் விமானத்தை இயக்க, அதனை கேப்டன் சுமித் மேற்பார்வை செய்தார்.

புறப்பட்ட சில விநாடிகளிலேயே அந்த விமானம் அதிகபட்சமாக 180 நாட்ஸ் வேகத்தை இந்திய நேரப்படி பிற்பகல் 13:38:42 மணிக்கு அடைந்தது.

அந்த வேகத்தை அடைந்த சில விநாடிகளிலேயே என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2 ஆகியவற்றுக்கு எரிபொருள் சப்ளை செய்வதை கட்டுப்படுத்தும் சுவிட்ச்-கள் ஒரு விநாடி இடைவெளியில் இயக்க நிலையில் இருந்து (RUN) “கட்-ஆஃப் (Cut Off) நிலைக்குச் சென்றன.

என்ஜின்களுக்கு எரிபொருள் விநியோகம் தடைபட்ட சில விநாடிகளிலேயே என்ஜின் 1 மற்றும் என்ஜின் 2-ன் வேகம் குறையத் துவங்கியது.

அறிக்கையின் படி, விமானிகள் அறையில் நடைபெற்ற உரையாடல்களின் ஒலிப்பதிவில் ஒரு விமானி மற்றவரிடம் ஏன் கட்-ஆஃப் செய்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த மற்ற விமானி நான் அவ்வாறு செய்யவில்லை என்று கூறுகிறார். இதில் கேள்வி கேட்டது யார், பதில் கூறியது யார் என்பதில் தெளிவில்லை.

சில விநாடிகளுக்குப் பிறகு இரண்டு விமானிகளில் ஒருவர், “மேடே, மேடே, மேடே,” என்று விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு செய்தி அனுப்பினார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்காத நிலையிலேயே அடுத்த சில விநாடிகளில் விமானம் விபத்தில் சிக்கியது.

“விமான விபத்திற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை”

விமான விபத்து தொடர்பாக வெளியான அறிக்கையில் 2 முக்கிய அம்சங்களை விசாரணை அதிகாரிகள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.

முதலில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே, என்ஜின்களுக்கு எரிபொருள் சப்ளையை கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் ‘ரன்’ நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு மாறின. இது விமானம் 180 நாட்ஸ் வேகத்தில் இருந்து திடீரென குறைய வழிவகை செய்தது.

விமானிகள் அறையில் ஒருவர் ஏன் அவ்வாறு செய்தாய் என்று கேட்க மற்றவரோ, தாம் அவ்வாறு செய்யவில்லை என்று பதில் கூறுகிறார்.

பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸ் அறிக்கை வெளியான பிறகு எழும் கேள்விகள் குறித்து விவரிக்கிறார்.

“இது சாதாரண நிகழ்வோ அல்லது அறியாமல் ஏற்பட்டதோ இல்லை என்பதால் பல கேள்விகள் எழுகின்றன.

பொறியாளர்களைப் பொருத்தவரை, இந்த சுவிட்ச்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். இதனை யாரேனும் வலிந்து சென்று தான் இயக்க முடியும்.

பொதுவாக விமானம் தீப்பிடித்தல் போன்ற அவசர காலத்தில் தான் இதனை இயக்குவார்கள். விமானம் இயல்பாக பறந்து கொண்டிருக்கும் போதல்ல,” என்று தெரிவிக்கிறார் அவர்.
ஆமதாபாத் விமான விபத்து, முதல் கட்ட விசாரணை அறிக்கை, ஏர் இந்தியா

“இரண்டாவதாக, எரிபொருள் சுவிட்ச்சை லாக் செய்யும் பொறிமுறையின் சாத்தியமான செயலிழப்பு குறித்து விமான நிறுவனங்கள் குறிப்பிட்ட, 2018 ஃபெடரல் விமான போக்குவரத்து ஆணையத்தின் எச்சரிக்கையுடன் இந்த ஆரம்பக்கட்ட விசாரணை முடிவுகள் ஒத்துப் போகின்றன.

எவ்வாறாயினும் தொழில்நுட்பக் குறைபாடு இருந்தால், அது 2 சுவிட்சுகளையும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கட்-ஆஃப் நிலைக்கு வர எப்படி காரணமாகும் என்பது தெளிவாகத் தெரியவில்லை,” என்று அவர் கூறினார்.

இந்த எச்சரிக்கை ஒரு ஆலோசனையாக மட்டுமே வெளியிடப்பட்டது, இது தொடர்பாக ஏர் இந்தியா எந்த சோதனையும் நடத்தவில்லை.

அந்நிறுவனம் 2019 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் த்ரோட்டில் தொகுதிகளை மாற்றியது. ஆனால் இதற்கும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறியப்பட்டது.”

இது மனித பிழையால் ஏற்பட்டதா அல்லது அரிய தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்டதா என்பதில் தெளிவில்லை. விசாரணை இன்னும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், விபத்திற்கான உண்மையான காரணத்தை உறுதியாக கூற இயலாது.


ஏர் இந்தியா கூறுவது என்ன?

முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியான பிறகு ஏர் இந்தியா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. விமான விபத்தில் சிக்கி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தோடு துணை நிற்கின்றோம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. விசாரணை முகமைகள் நடத்தும் விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் வழங்குகிறோம் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில், விசாரணை அறிக்கை குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.

“ஏஐ171 விமான விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரோடு துணை நிற்கிறது ஏர் இந்தியா. இந்த அசம்பாவிதத்தால் கவலையில் ஆழ்ந்துள்ளோம். தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க உறுதி பூண்டுள்ளோம். ஜூலை 12, 2025 அன்று இந்திய விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையைப் பெற்றிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்,”என்று ஏர் இந்தியா தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

“ஒழுங்கு முறை ஆணையம் உட்பட சம்பந்தப்பட்டவர்களோடு நெருங்கி பணியாற்றி வருகிறோம். ஏ.ஏ.ஐ.பி. மற்றும் இதர முகமைகளுடன் விசாரணைக்கு தேவையான முழுமையான ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம். விசாரணை நடைபெற்று வருவதால் எந்த ஒரு குறிப்பிட்ட தகவல்களுக்கும் எங்களால் கருத்தை தெரிவிக்க இயலாது. இதுபோன்ற கேள்விகள் அனைத்தும் ஏ.ஏ.ஐ.பிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றோம்,” என்றும் ஏர் இந்தியா நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்த விமான விபத்தில், விமானத்தில் இருந்தவர்களில் பிரிட்டிஷ் குடிமகனான விஸ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் உயிர் பிழைத்தார்.

நடந்தது என்ன?

ஜூன் 12-ஆம் தேதி ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில விநாடிகளில் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 10 விமானப் பணியாளர்கள் உட்பட 242 பேர் அந்த விமானத்தில் இருந்தனர்.

டி.ஜி.சி.ஏ. அறிவிப்பின் படி, கேப்டன் சுமித் சபர்வால் 8200 மணி நேரம் விமானத்தை இயக்கிய அனுபவத்தைக் கொண்டிருந்தார். இணை விமானியான க்ளைவ் குந்தர் 1100 மணி நேர அனுபவத்தைக் கொண்டிருந்தார்.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தகவலின் படி, ஆமதாபாத்தில் இருந்து பிற்பகல் 1.39 மணி அளவில் ஓடுதளம் 23-ல் இருந்து விமானம் புறப்பட்டது. அடுத்த சில விநாடிகளில் மேடே அழைப்பை விடுத்தது அந்த விமானம். ஆனால் அந்த அழைப்புக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.

இந்த விமான விபத்தில் 260 நபர்கள் கொல்லப்பட்டனர். பிரிட்டிஷ் நாட்டு குடிமகனான விஷ்வாஸ் குமார் ரமேஷ் மட்டும் இந்த விபத்தில் இருந்து உயிர் பிழைத்தார்.

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மைய தகவலின் படி அந்த விமானம், விமான நிலையத்திற்கு அருகே அமைந்திருக்கும் விடுதி கட்டடம் ஒன்றின் மீது மோதியது. விபத்திற்கு பிறகு கரும்புகையால் அப்பகுதி சூழப்பட்டது.

விமானத்தில் பயணித்தவர்கள் மட்டுமின்றி விடுதியில் தங்கியிருந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்களும் இதில் உயிரிழந்தனர்.

விடுதி கட்டடங்கள் இந்த விமான விபத்தின் போது கடுமையான சேதத்தை சந்தித்தன. அதில் மருத்துவர்களுக்கான உணவகமும் அடங்கும். ஜூன் 12 அன்று விமானம் விபத்துக்குள்ளாகும் போது அவர்கள் அனைவரும் மதிய உணவுக்காக அங்கே கூடியிருந்தனர்.

Share.
Leave A Reply