உலக எண்ணெய் வளத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பை ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்கள் அண்டார்டிகாவின் வெடில் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர். இங்கு மலைக்க வைக்கும் அளவில் 511 பில்லியன் பேரல் எண்ணெய் வளத்தை…

உலக எண்ணெய் வளத்தையே மாற்றியமைக்கக்கூடிய ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பை ரஷ்ய விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்கள் அண்டார்டிகாவின் வெடில் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளனர்.

இங்கு மலைக்க வைக்கும் அளவில் 511 பில்லியன் பேரல் எண்ணெய் வளத்தை கண்டறிந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சவுதி அரேபியாவின் மொத்த எண்ணெய் இருப்பை விட இரண்டு மடங்கு பெரியது என்று கூறப்படும் இந்த மகத்தான இருப்பு, மாஸ்கோ தனது “அறிவியல் ஆராய்ச்சி” பணிகளின்போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இதன் இன்றைய மதிப்பு சுமார் ரூ.306 லட்சம் கோடி ஆகும்.

இந்த கண்டுபிடிப்பு நவீன வரலாற்றில் இதுவரை பயன்படுத்தப்படாத மிகப்பெரிய பூமிக்கு அடியில் உள்ள எரிபொருள் இருப்புகளில் ஒன்றாகும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் வட கடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெயின் அளவை விட இது பத்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கண்டுபிடிப்பு உலக வல்லரசுகளிடையே இராணுவப் பதட்டங்களை தூண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 56 நாடுகள் கையெழுத்திட்ட ஒரு உடன்படிக்கையில், அண்டார்டிகாவை இராணுவமயமாக்கவோ அல்லது, வணிக பகுதியாக மாற்றக்கூடாது என்றும், அறிவியல் ஆராய்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எந்தவிதமான இராணுவ நடவடிக்கைகளுக்கும், வளங்களை எடுப்பதற்கும், வணிக சுரண்டலுக்கும் தடை விதிக்கும் உடன்படிக்கை கையெழுத்தானது.

இந்த நிலையில் ரஷ்யா இந்த மாபெரும் எண்ணெய் வளத்தை கண்டுபிடித்துள்ள நிலையில் அந்நாடு உடன்படிக்கையை மீறி எண்ணெயை எடுக்க முயற்சித்தால், அது ஒரு ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கக்கூடும். இது ஒரு புதிய போரை தூண்டலாம்.

சீனா ஏற்கனவே சமீபத்தில் தனது ஐந்தாவது அண்டார்டிக் ஆராய்ச்சி நிலையத்தை ஆரம்பித்த நிலையில் துருவ பகுதிகளில் ரஷ்யாவுடன் அறிவியல் ஒத்துழைப்பை நாடியது.

எனவே இந்த இரண்டு வல்லரசுகளும் ஆராய்ச்சி என்ற பெயரில் அண்டார்டிகாவில் உள்ள எண்ணெய வளத்தை எடுக்க தொடங்கினால், அது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிற மேற்கு நாடுகளின் எதிர்ப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இந்தக் கண்டுபிடிப்பு குறித்து ரஷ்யா கூறியபோது “எந்த சுரண்டலும் திட்டமிடப்படவில்லை” என்றும், அனைத்து நடவடிக்கைகளும் அண்டார்டிக் உடன்படிக்கைக்கு இணங்க இருப்பதாகவும் கூறியுள்ளது. இருப்பினும், அவர்களின் நடவடிக்கைகளை உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று பிற நாடுகள் வலியுறுத்துகின்றன.

அமெரிக்கா இந்த கண்டுபிடிப்பு குறித்து இன்னும் நேரடியாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், அண்டார்டிகாவின் வளத்தை ரஷ்யா உள்பட எந்த நாடு சுரண்டினாலும் பார்த்து கொண்டிராது என்பதும், அமெரிக்கா-ரஷ்யா உறவுகளில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக மாறும் என்றும் கூறப்படுகிறது.

ரஷ்யாவின் இந்த எண்ணெய வள கண்டுபிடிப்பு மூன்றாவது உலகப்போருக்கு ஒரு காரணமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share.
Leave A Reply