காசாவிலுள்ள பலஸ்தீனியர்களை மூன்றாவது நாடொன்றுக்கு குடிபெயரச் செய்யும் திட்டம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இத்திட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளனர். அதனைத் தொடர்ந்தே இத்திட்டம் அதிகளவில் கவனம் செலுத்தப்படும் ஒன்றாக மீண்டும் மாறியுள்ளது.
அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள நெதன்யாகு கடந்த திங்கட்கிழமை டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்பேச்சுவார்த்தையின் போது காசாவிலுள்ள பலஸ்தீனியர்களை மூன்றாவது நாடொன்றுக்கு குடிபெயர்த்துவது குறித்து இருவரும் ஆராய்ந்துள்ளனர். இது சர்வதேச ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது.
ஆனாலும் அந்த மக்களை குடிபெயரச் செய்யவிருக்கும் நாடுகள் குறித்து ட்ரம்போ, நெதன்யாகுவோ, அமெரிக்க அதிகாரிகளோ தகவல்களை வெளியிடவில்லை.
‘அந்த நாடுகள் மத்திய கிழக்கில் உள்ளனவா? அல்லது அதற்கு வெளியிலா? என இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் டமி புரூஸிடம் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அவர், ‘காசாவில் அமைதியாகவோ அல்லது பாதுகாப்பாகவோ வாழக்கூடிய சூழல் இல்லை.
அதனை மீண்டும் கட்டியெழுப்பவும் உருவாக்கவும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்’ என்றுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலியப் பிரதமர், ‘பலஸ்தீனியர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கக்கூடிய நாடுகளை அடையாளம் காண அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாகக் கூறியுள்ளதோடு, தனக்கும் ஜனாதிபதி ட்ரம்புக்கும் இடையில் காசா தொடர்பில் ஒரு பொதுவான இலக்கு உள்ளது.
காசாவை விட்டு வெளியேற விரும்பும் பலஸ்தீனியர்களுக்கு அதற்கான தெரிவு சுதந்திரம் இருக்க வேண்டும். எவரையும் கட்டாயப்படுத்தி வெளியேற்றும் திட்டமில்லை’ என்றுள்ளார்.
ஆனாலும் காசாவிலுள்ள மக்களை மூன்றாவது நாடொன்றுக்கு குடிபெயர்த்தும் திட்டம் நேற்று இன்று முன்வைக்கப்படுவது அல்ல.
இது காசா மீதான யுத்தம் 2023 ஒக்டோபரில் ஆரம்பித்தது தொடக்கம் இஸ்ரேலின் ஓரிரு அரசியல்வாதிகளால் முன்வைக்கப்பட்டு வந்த ஒன்றாகும்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் இஸ்ரேலிய பிரதமருடன் இணைந்து இத்திட்டத்தை முன்கொண்டு செல்கிறார். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பும்போது அதனை கிடப்பில் போடுவதும், அதன் பின்னர் தூசு தட்டுவதுமாக கடந்த ஆறு மாதங்களைக் கடந்திருக்கிறது இத்திட்டம்.
காசா என்பது பலஸ்தீனின் ஒரு பகுதி மாத்திரமல்லாமல், அங்குள்ள மக்களினதும் தங்களது வாழிடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ள பலஸ்தீன மக்களதும் பூர்வீக பூமியாகும். 365 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட காசாவில் 23 இலட்சம் மக்கள் உள்ளனர்.
காசா மீது 2023 ஒக்டோபர் 07 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் காரணமாக 57 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இப்போரினால் காசாவின் குடியிருப்புக்கள், உட்கட்டமைப்பு வசதிகள், பொதுக்கட்டடங்கள், பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் என அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அழிவுற்று சேதமடைந்தும் உள்ளன.
மக்கள் இருப்பிடங்களை இழந்து அடிக்கடி இடம்பெயர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அடிப்படை வசதிகளற்ற கூடாரங்களிலும் முகாம்களிலும் அவர்கள் தங்கியுள்ளனர். காசாவே சாம்பல் மேடாகக் காணப்படுகிறது.
இவ்வாறான சூழலில், கடந்த ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப், காசாவிலுள்ள பலஸ்தீனியர்களை அந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்வதை நோக்கமாகக் கொண்ட விசித்திரமான திட்டங்களை முன்வைத்து வருக்கிறார்.
இஸ்ரேலிய அரசியல்வாதிகள் 2023 ஒக்டோபரில் காசா மீதான யுத்தம் ஆரம்பமானது தொடக்கம் பலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கும், சில சமயங்களில் மூன்றாவது நாடுகளுக்கும் வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பலமுறை குறிப்பிட்டுள்ளனர்.
அவர்கள் சுயமாக வெளியேற முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அவர்களது அழைப்பை காசா மக்கள் சிறிதளவேனும் கருத்தில் கொண்டதாக இல்லை.
இஸ்ரேலிய அரசியல்வாதிகள் சிலர் கூறி வந்ததை ட்ரம்ப்பும் கூறுமளவுக்கு நிலைமை காணப்படுகிறது.
ஒரு பலம் வாய்ந்த நாட்டின் தலைவர் ஒருவர் உலகின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நாட்டின் ஓரிரு அரசியல்வாதிகளது கூற்றுக்களை தமது கூற்றாக முன்வைப்பதை உலகளாவிய மனிதநேய ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்து நிராகரித்துள்ளனர்.
காசா தொடர்பான ட்ரம்ப்பின் திட்டங்கள் அனைத்தும் சர்வதேச சட்டங்களுக்கும் மனிதாபிமான சட்டங்களுக்கும் முரணானவை. பலஸ்தீனர்கள் அவர்களது பூர்வீக பூமியில் வாழ்வதற்கான அடிப்படை உரிமைகளை மறுக்கும் திட்டங்கள் அவை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காசாவில் உள்ள பலஸ்தீனியர்களை அண்டை நாடுகளுக்கு இடம்பெயரச் செய்து காசாவை முழுமையாகச் சுத்தம் செய்யப் போவதாக ட்ரம்ப் கடந்த ஜனவரி 25 ஆம் திகதி கூறினார்.
அதன் பின்னரான இரண்டொரு நாட்களில் ஜோர்தானும் எகிப்தும் காசாவிலிருந்து பலஸ்தீனியர்களை அழைத்துச் செல்ல வேண்டுமென்றார்.
மேலும் இரண்டொரு நாட்கள் கடந்ததும் எகிப்தும் ஜோர்தானும் காசாவிலிருந்து மக்களை அழைத்துச் செல்ல வேண்டுமென நான் விரும்புகிறேன் என்றும் ட்ரம்ப் கூறினார்.
ஆனால் இவரது திட்டத்திற்கு ஜோர்தானும், எகிப்தும் மாத்திரமல்லாமல் அரபு, இஸ்லாமிய நாடுகள் அடங்கலாக உலகின் பல நாடுகளும் ஐ.நாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது இன அழிப்புக்ககு சமமான செயலெனக் குறிப்பிட்டு நிராகரித்தன. மனித உரிமை அமைப்புக்களும் கண்டனங்களை எழுப்பின.
அத்தோடு தனது திட்டத்தை கிடப்பில் போட்ட ட்ரம்ப், ஜனாதிபதியான பின்னர் நெதன்யாகுவை பெப்ரவரி 4 ஆம் திகதி முதன் முதலில் சந்தித்தார். அச்சமயம் காசாவில் இருந்து பலஸ்தீனியர்களை நிரந்தரமாக இடம்பெயரச் செய்யும் திட்டத்தை மீண்டும் குறிப்பிட்டார்.
அதனை நெதன்யாகு மனதார வரவேற்றார். அத்தோடு ட்ரம்ப்பும் நெதன்யாகுவும் இணைந்து நடத்திய செய்தியாளர் மாநாட்டில், ‘காசாவை அமெரிக்கா கையகப்படுத்தும். நாங்கள் அதைப் பயன்படுத்துவோம்,
மேலும் வெடிக்காத அனைத்து ஆபத்தான குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களையும் அகற்றுவதற்கு நாங்கள் பொறுப்பாவோம்’ என்று நெதன்யாகு கூறினார்.
காசாவை மத்திய கிழக்கின் ‘ரிவியரா’ ஆக மாற்றுவோம் என்றார் ட்ரம்ப். அவரது திட்டத்திற்கு ஜோர்தான் மன்னர் அப்துல்லா நேரில் சந்தித்து எதிர்ப்புத் தெரிவித்தார்.
அதன் பின்னரான சொற்ப காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளியை வெளியிட்டார் ட்ரம்ப். அதன் பின்னர் ஏப்ரல் 7 ஆம் திகதி இரண்டாவது தடவையாக ட்ரம்ப்பை அமெரிக்காவில் சந்தித்த நெதன்யாகு, ‘இது ஒரு நம்பமுடியாத முக்கிய ‘ரியல் எஸ்டேட்’ என்று நான் நினைக்கிறேன்’ என்றதோடு, ‘நாங்கள் இதில் ஈடுபடுவோம் என்று நான் நினைக்கிறேன்,
தென் சூடான், எதியோப்பியா ஆகிய நாடுகளுக்கு இடம்பெயரச் செய்ய இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் நெதன்யாகு. அவர் அவ்வாறு கூறி 24 மணித்தியாலயங்கள் கடப்பதற்குள் அந்த நாடுகள் “அத்தகைய திட்டம் குறித்து பேசப்படவும் இல்லை. அதற்கு நாங்கள் இணங்கப் போவதுமில்லை” என்று அறிவித்தன.
இவ்வாறு காசா மக்களை வெளியேற்றும் திட்டம் முன்வைக்கப்படும் போதெல்லாம் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய வண்ணமுள்ளன.
இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி மூன்றாவது தடவையாக ட்ரம்பை சந்தித்த நெதன்யாகு, காசா மக்களை மூன்றாவது நாட்டுக்கு வெளியேற்றுவது குறித்து ஆராயந்துள்ளார்.
இஸ்ரேலைச் சுற்றியுள்ள நாடுகள் காசா மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு உதவ முன்வந்துள்ளன என்ற அர்த்தத்தில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
அத்தகைய திட்டத்திற்கு உடன்படக்கூடிய ஏனைய நாடுகளைக் கண்டறியவென வொஷிங்டனுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் காசாவில் மக்கள் தங்குவதற்கு விரும்பினால், அவர்கள் தங்கலாம், ஆனால் அவர்கள் வெளியேற விரும்பினால், அவர்கள் வெளியேற முடியும்’ எனவும் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி காசா மக்களை வெளியேற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பும் போது அதனை கிடப்பில் போடுவதும் பின்னர் தூசி தட்டுவதுமாக கடந்த ஆறுமாத காலப்பகுதி கடந்துள்ளது என்பது தெளிவாகிறது.
காசா மக்களை வெளியேற்றுவதில் அமெரிக்காவும் இஸ்ரேலும் குறியாக இருப்பதையே இவை எடுத்துக்காட்டுகின்றன.
ஆனால் காலாகாலமாக காசா அடங்கலாகப் பலஸ்தீன பூமியில் வாழ்ந்துவரும் மக்களை அங்கிருந்து பலவந்தாக வெளியேற்ற முயற்சிப்பது நியாயப்படுத்த முடியாத அடிப்படை மனித உரிமை மீறலாகும்.
ட்ரம்பின் இத்திட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கலாக உலகின் பல நாடுகளும் கடும் கண்டனங்களுடன் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. அநத மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் அச்சம் பீதியின்றி அமைதியாக வாழ இடமளிக்க வேண்டும்.
அதுவே மனிதநேய உலகின் விருப்பம் ஆகும்.
-மர்லின் மரிக்கார்-