ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு 45 வயது ஆண், 6 வயது சிறுமியை தனது மூன்றாவது மனைவியாக மணந்ததாக செய்திகள் வெளியாகின. அந்த நபர் குழந்தையின் தந்தைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சமூக…
ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு 45 வயது ஆண், 6 வயது சிறுமியை தனது மூன்றாவது மனைவியாக மணந்ததாக செய்திகள் வெளியாகின.
அந்த நபர் குழந்தையின் தந்தைக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களின் எதிர்ப்புகள் மற்றும் உள்ளூர் அழுத்தத்தை தொடர்ந்து, தாலிபான் அதிகாரிகள் அந்த நபரை சிறிது நேரம் தடுத்து வைத்தனர்.
இருப்பினும், திருமணத்தை ரத்து செய்வதற்கு பதிலாக, சிறுமிக்கு ஒன்பது வயது ஆகும் வரை அவர் அவளுடன் வாழ முடியாது என்று தீர்ப்பளித்தனர்.
அந்த தீர்ப்பு ஆன்லைனில் இன்னும் அதிகமான சீற்றத்தை தூண்டியது, பலர் அதை ஒரு தண்டனையாக பார்க்காமல், ஒரு சம்மதமாக பார்த்தனர். இது நீதி அல்ல. இது ஒரு தாமதம்’ என்று ஆப்கான் பெண்கள் உரிமை வலையமைப்பு, X மூலம் தெரிவித்துள்ளது.
தாலிபான் ஆட்சியை பொருத்தவரை ஒரு பெண் உடல் ரீதியாக முதிர்ச்சி அடையும்போது திருமணம் செய்ய அனுமதிக்கிறது என்று விளக்கப்படுகிறது. அந்த முதிர்ச்சி வயது ஒருசிலரால் தன்னிச்சையாக 9 வயதாக கருதப்படுகிறது.
இதுகுறித்த வழக்குகளில் பெரும்பாலும் தாலிபான் உள்ளூர் தளபதிகள் மற்றும் நீதிபதிகள் வழக்குகளுக்கு தீர்ப்புகளை வழங்குகிறார்கள், பெரும்பாலும் சட்டத்தை விட பழமைவாத பழக்கவழக்கங்களால் தீர்ப்புகள் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே தாலிபான் அந்த நபரை சிறுமிக்கு ஒன்பது வயது ஆகும் வரை காத்திருக்குமாறு கூறியபோது, அவர்கள் அந்த சிறுமியை பாதுகாக்கவில்லை. சில ஆண்டுகள் தாமதம் செய்திருக்கிறார்கள் என்று விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
ஆப்கானிஸ்தானில் 57% பெண்கள் 19 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். 21% பெண்கள் 15 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொள்கிறார்கள்.
இந்த நடைமுறைக்கு முக்கிய காரணங்களாக கடுமையான வறுமை என்று கூறப்படுகிறது. குடும்பங்கள் பெண்களை பொருளாதார சுமையாக கருதி வரதட்சணையை ஏற்றுக்கொள்கின்றன.
இரண்டாவது பெண்களுக்கு கல்வி அறிவை தருவதில்லை. பல சமூகங்களில் குழந்தை திருமணம் ஏற்படுத்தும் தீங்குகள் குறித்த விழிப்புணர்வும் இல்லை.
2021 இல் தாலிபான் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் சிவில் சட்டம் சிறுமிகளுக்கு குறைந்தபட்ச திருமண வயதை 16 ஆகவும், சிறுவர்களுக்கு 18 ஆகவும் நிர்ணயித்தது.
ஆனால் தாலிபான் ஆட்சிக்கு வந்த பின்னர் பெரும்பாலான சிவில் சட்டங்கள் செயலற்றதாகிவிட்டன.
குழந்தை திருமணத்தை கண்காணிப்பதற்கோ அல்லது வழக்கு தொடுப்பதற்கோ எந்த மைய அதிகாரமும் இல்லை. வறுமை அல்லது குடும்ப தகராறுகளுக்கு “தீர்வாக” சில உள்ளூர் நீதிமன்றங்கள் திருமணத்தை ஊக்குவிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே சர்வதேச மரபுகள் இந்த நடைமுறையை தெளிவாக சட்டவிரோதமாக்கினாலும், ஆப்கான் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். சிறு வயதில் திருமணம் செய்வது பெண்களுக்குக் கடுமையான ஆபத்தை ஏற்படுத்துகிறது.
மருத்துவ ரீதியாக 15 வயதுக்குட்பட்ட பெண்கள் குழந்தை பிறக்கும்போது இறக்கும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகம். மனரீதியாகவும் சிறுமிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
எனவே தாலிபான் அரசுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சில அறிவுரைகளை கூற வேண்டும் என்றும், சர்வதேச அமைப்புகள் சிவில் சட்ட கட்டமைப்புகளை மீட்டெடுக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், மனிதாபிமான உதவி சிறுமிகளுக்கு கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்றும், பெண்களுக்கான சிறப்பு குழுக்களை அமைத்து, சிறுமிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் உலக நாடுகள் கூறி வருகின்றன.