தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87.

கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹொன்னப்ப பாகவதர் கவி காளிதாஸாக நடித்து, தயாரித்த ‘மகாகவி காளிதாஸா’ என்ற கன்னடப் படத்தில் 1955-ம் ஆண்டு அறிமுகமானார் சரோஜாதேவி.

அடுத்த ஆண்டில் ‘இல்லறமே நல்லறம்’ என்ற படத்தில் சின்ன வேடத்தில் தமிழில் அறிமுகமானார் சரோஜாதேவி. விரைவிலேயே கதாநாயகி வேடமேற்று பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.

தமிழில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய 3 பேருடனும் ஒரே காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். தமிழ் திரைப்படங்களில் இவரது முகபாவம் மூலம், வெளிக்காட்டும் நடிப்பு திறமைக்காக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி.

தமிழில் நடிகர் சூர்யா, வடிவேலுவுடன் இணைந்து ஆதவன் என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.

திரைப்படத்துறையினராலும், ரசிகர்களாலும், ‘கன்னடத்துப் பைங்கிளி’, ‘அபிநய சரசுவதி’ போன்ற அடைமொழிகளால் அழைக்கப்படுகிறார். இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் மாநில அரசு விருதுகளையும் வென்றவர் சரோஜா தேவி.

சரோஜா தேவியின் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகையாக வலம் வந்த சரோஜா தேவி

சரோஜா தேவி முன்னாள் முதல்வரும் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராகவும் வலம் வந்த எம்.ஜி.ஆருடன் சேர்ந்து 26 படங்களில் நடித்துள்ளார்.

சிவாஜி கணேசனுடன் சேர்ந்து 22 படங்களிலும் ஜெமினி கணேசனுடன் இணைந்து 17 படங்களிலும் நடித்துள்ளார் சரோஜா தேவி.

1938-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி அன்று அவர் கர்நாடகாவில் பிறந்தவர் அவர். அவருடைய இயற்பெயர் ராதாதேவி கவுடா. அவர் மகாகவி காளிதாஸ் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955-ஆம் ஆண்டு திரையுலகில் கால் பதித்தார். அவர் நடித்த முதல் படமே தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

சரோஜா தேவி

 

திரையுலகினர் இரங்கல்

நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இரங்கல் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார். “சரோஜா தேவி அம்மா, அனைத்து காலத்திலும் மிகச்சிறந்த நடிகையாவார். தென்னிந்தியாவில் வேறெந்த நடிகைக்கும் கிடைக்காத பேருக்கும் புகழுக்கும் சொந்தக்காரர்.

அன்புக்குரியவர் அவர். அவருடன் நல்ல நட்பில் இருந்தேன். அவரை பார்க்காமல் என்னுடைய பெங்களூரு பயணம் நிறைவுறாது. சென்னைக்கு அவர் வரும்போதெல்லாம் என்னிடம் பேசுவார். அவரின் இழப்பை நிச்சயமாக உணருவேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்,” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

நடிகை சிம்ரன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில், “ஒன்ஸ் மோர் திரைப்படத்தில் அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெருமையான ஒரு நிகழ்வு ஒன்று மிகவும் விலைமதிப்பற்றதாக உணர வைக்கிறது. என்னுடைய மரியாதையையும் பிரார்த்தனைகளையும் உரித்தாக்குகிறேன். அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply