தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க. முத்து காலமானார். அவருக்கு வயது 77.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், அவரது சகோதரருமான மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். அவர் இன்று பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்து மறைவுக்கு கட்சித் தலைவர்களும், திரையுலகினரும் தங்களின் இரங்கல் செய்திகளை தெரிவித்து வருகின்றனர்.
பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி பத்மாவதிக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் 1948-ஆம் ஆண்டு ஜனவரி 14-ஆம் தேதி பிறந்தவர் மு.க.முத்து.
1970-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான மு.க.முத்து, நடிப்போடு பல படங்களில் தன் சொந்தக் குரலில் பாடல்கள் பாடியும் அசத்தியுள்ளார்.
அணையா விளக்கு, பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, சமையல்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் மு.க.முத்து.