அமெரிக்க அரசுத் தலைவராக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவையாகப் பதவியேற்றதன் பின்னரான காலப்பகுதியில் உக்ரேன் மோதலுக்கு விரைவில் தீர்வு எட்டப்படலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. ஜோ பைடன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் அமெரிக்க, ரஷ்ய உறவு மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும, ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியான பின்னர், புதிய திருப்பமாக ரஷ்யாவுடன் இராஜதந்திர உறவுகளைப் பேணுவதில் அமெரிக்கா காட்டிய ஆர்வம் பாராட்டத்தக்கதாக அமைந்திருந்தது. ட்ரம்ப்புக்கும் ரஷ்ய அதிபர் புட்டினுக்கும் இடையிலான தொலைபேசி உரையாடல்கள், உக்ரேனுக்கான ஆயுத உதவிகளை இடைநிறுத்தப் போவதாக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு உள்ளிட்ட சாதகமான பல விடயங்கள் நடந்தேறியதைப் பார்க்க முடிந்தது.

அமெரிக்கா வழங்கிய அழுத்தம் காரணமாக ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான பேச்சுவார்த்கைள் துருக்கிய நகரான இஸ்தான்புல்லில் இரண்டு தடவைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வரலாம் என்ற நம்பிக்கை உலக அரங்கில் தோன்றியது.

Ukrainian servicemen take part in an anti drone drill in Chernigiv region on November 11, 2023. (Photo by Sergei SUPINSKY / AFP)

ஆனால், எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் பேச்சுவார்த்தைகள் தேக்கம் அடைந்துள்ளதைப் பார்க்க முடிகின்றது. போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையிலான முன்மொழிவுகளை இரண்டு நாடுகளும் பரஸ்பரம் கையளித்துள்ள நிலையில், பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதில் உக்ரேன் தரப்பு பெரிதும் ஆர்வம் காட்டவில்லை என ரஷ்ய தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

முன்னைய பேச்சுக்களில் எட்டப்பட்ட உடன்பாடுகளுள் ஒருசில விடயங்கள் மாத்திரம் நடந்தேறி உள்ளன. போரில் கொல்லப்பட்ட படையினரின் உடலங்கள் கையளிப்பு, போர்க் கைதிகளின் பரிமாற்றம் என்பவை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் செயற்படுத்தப்பட்டு இருந்தாலும், போர் நிறுத்த உடன்பாடு எதுவும் எட்டப்படாத நிலையில் மோதல்கள் தொடர்ந்த வண்ணமேயே உள்ளன.

களத்தில் மோதல்கள் தொடருகின்ற அதேவேளை பொதுவில் செய்திகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக வார்த்தைப் போர்; தொடர்வதையும் அவதானிக்க முடிகின்றது.

இரண்டு தரப்புகளும் பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டுவதிலும், தவறுகளைக் கண்டு பிடிப்பதிலும் அதிக நேரத்தைச் செலவிடுவதையும் பார்க்க முடிகின்றது.

மோதலுக்கான அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் பேசி, அவற்றுக்கான தீர்வுகளை நோக்கியதாக பேச்சுக்கள் அமைய வேண்டும் என ரஷ்யத் தரப்பு வாதிட்டு வருகின்றது.

ஆனால், அவற்றைப் பற்றிப் பேசுவதை பிறகு பார்த்துக் கொள்ளலாம், முதலில் தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றுக்கு ரஷ்யா முன்வர வேண்டும் என்பது உக்ரேனின் எதிர்பார்ப்பாக உள்ளது.

களமுனையில் தொடர்ச்சியாகப் பின்னடைவைச் சந்தித்து வரும் உக்ரேன், போர் ஓய்வுக் காலத்தை தன்னைப் பலப்படுத்திக் கொள்ள உபயோகிக்கக் கூடும் என ரஷ்யா கூறிவருகிறது. இதனால் அதற்கு ஆரம்பம் முதலே போர் ஓய்வுக்கு எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றது.

2014ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட மின்ஸ்க் உடன்படிக்கையை தன்னைப் பலப்படுத்துவதற்காக உக்ரேன் பயன்படுத்திக் கொண்டதை ரஷ்யா தனது வாதத்துக்கு ஆதரவாக முன்வைத்து வருகின்றது.

அது மாத்திரமன்றி களமுனையில் ரஷ்யத் தரப்பின் கை ஓங்கியுள்ள நிலையில் தற்காலிக போர் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யா அதிக அக்கறை காட்டாமலும் இருந்து வருகின்றது.

தான் பதவியேற்றால் 24 மணி நேரத்தில் உக்ரேன் போரை நிறுத்துவேன் என வீரவசனம் பேசிய ட்ரம்ப், கள யதார்த்தத்தை மெல்ல மெல்லப் புரிந்து கொள்ளத் தொடங்கியுள்ளார் என்பதை அவரது அண்மைக்கால அறிக்கைகளும் செயற்பாடுகளும் வெளிப்படுத்தி வருகின்றன.

ஆரம்பத்தில் உக்ரேன் ஜனாதிபதி விளாடிமிர் ஸெலென்ஸ்கியின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த ட்ரம்ப், தற்போது அதுபோன்ற கடுமையான விமர்சனங்களை ரஷ்யாவை நோக்கியும் முன்வைப்பதை அவதானிக்க முடிகின்றது. புட்டினை தனது நண்பர் என வர்ணித்துவந்த அவர், தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார் என்பதுவும் புரிகின்றது.

உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு என்பது சடுதியாக நிகழ்ந்த ஒன்றல்ல. தொடர்ச்சியான ரஷ்ய விரோதச் செயற்பாடுகளின் விளைவே உக்ரேன் மீதான படையெடுப்பு என்பது உலக அரசியலைத் தொடர்ந்து அவதானித்துவரும் அனைவருக்கும் இலகுவில் புரியக்கூடிய ஒன்று.

நேட்டோ அமைப்பின் பின்னணியில் உக்ரேன் செயற்படுவதைத் தெரிந்துகொண்டே தனது படையெடுப்பை ரஷ்யா ஆரம்பித்தது. உக்ரேனில் தொடரும் போரை, உக்ரேன் சார்பில் நேட்டோ நாடுகளே நடத்தி வருகின்றன என்பதே ரஷ்யாவின் வெளிப்படையான குற்றச்சாட்டு.

தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக நேட்டோ நாடுகள் உக்ரைனைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி வருகின்றன என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகின்றது. நடைபெறும் நிகழ்வுகளைப் பாரக்கையில் ரஸ்யாவின் குற்றச்சாட்டில் பெரிதும் உண்மை இருக்கின்றது எனப் புரிந்துகொள்ள முடிகின்றது.

உக்ரேன் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பினால் உலகின் பெரும்பாலான மக்கள் ‘ஆம்’ என்ற பதிலையே வழங்குவர். இதில் ரஷ்ய மற்றும் உக்ரேன் மக்களும் அடங்குவர்.

போர் என்பது எப்போதும் அழிவுகளையே ஏற்படுத்தும் என்பதை கடந்தகால மற்றும் நிகழ்காலப் படிப்பினைகளில் இருந்து உலகம் போதியளவு கற்றுக் கொண்டிருக்கிறது.

அத்தகைய போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தை ட்ரம்ப் வகிப்பாரானால் உலகம் அவரை நிச்சயம் பாராட்டும். ஆனால், அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் வழிமுறைகள் சிறப்பானதாக இல்லை என்பதே பிரச்சினையாக உள்ளது. போரிடும் இரண்டு தரப்புகளையும் அச்சுறுத்துவதன் ஊடாகப் போரை முடிவுக்குக் கொண்டுவர அவர் நினைக்கிறார். அது சாத்தியமாகுமா?

தற்போது ரஷ்யா மீது மீண்டும் புதிய, கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது தொடர்பாக ட்ரம்ப் பேசியுள்ளார். எதிர்வரும் 50 நாட்களுக்குள் போரை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் உத்தேச பொருளாதாரத் தடை அமுலுக்கு வரும் என அவர் எச்சரிக்கiயும் விடுத்துள்ளார். மறுபுறம், பேட்ரியட் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகளை உக்ரேனுக்கு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

போருக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணாமல், போரை மென்மேலும் நீடிக்கும் வகையிலான காரியங்களைச் செய்து கொண்டு போரை நிறுத்துவது சாத்தியமா என்பது பற்றி ட்ரம்ப்பும் அவரது ஆலோசகர்களும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்.

அச்சுறுத்திப் பணிய வைக்க இதுவொன்றும் சிறார் விளையாட்டு அல்ல. உக்ரேனைப் பயன்படுத்தி நேட்டோ மேற்கொள்ளும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் தனது தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கூறிவரும் நிலையில், ரஷ்யாவின் படை நடவடிக்கைகள் தனது இருப்பையே சவாலுக்கு உட்படுத்துவதாக உக்ரேன் கூறி வருகின்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இன்றைய தேவையாக உள்ள நிலையில், இடையீட்டாளராக வருபவர்கள் அது விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். இதைவிடுத்து இரண்டு தரப்பையும் அச்சுறுத்திப் பணிய வைக்க முடியும் என ட்ரம்ப் நினைப்பாரானால் இது விடயத்தில் அவரால் வெற்றியடைய முடியாமல் போகும் என்பதே நிதர்சனமான உண்மை.

போகிற போக்கைப் பார்த்தால் உக்ரேன் போர் நான்காவது ஆண்டிலும் தொடர்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது போலத் தெரிகின்றது.

சுவிசிலிருந்து சண் தவராஜா

Share.
Leave A Reply