உக்ரைன்- – ரஷ்ய போர் மிகத் தீவிரம் அடைந்துள்ளது. அத்தகைய போர் சர்வதேச நாடுகளை அரசியல், பொருளாதார,
இராணுவ நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகிறது. ரஷ்யாவும் உக்ரைனும் மோதுவதென்பது ஐரோப்பாவும் ரஷ்யாவும் மோதுவதாக பரிமாணம் பெற்றிருந்தாலும், மேற்குலகம் எதிர் ரஷ்யா என்ற முழுமை தற்போது ஆசிய நாடுகளையும் உட்படுத்த தொடங்கியிருக்கிறது.
குறிப்பாக நேட்டோவின் இந்தியா, சீனா மீதான எச்சரிக்கையும் உலக வங்கி சர்வதேச நாணய நிதி நிறுவனங்களின் அழுத்தங்களும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கான முன்னாயத்தங்களாகவே தெரிகிறது.
இது மேற்கு, கிழக்கு அரசியலின் மோதலை கட்டமைக்க தொடங்கியிருக்கிறது. இக்கட்டுரையும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்தின் உபாயங்களையும் அதன் விளைவுகளையும் தேட முயலுகிறது.
ரஷ்யா சமகாலத்தில் உக்ரைன் மீதான தாக்குதல்கள் தீவிரமாக்கியுள்ளது. உக்ரைனின் ஆகாயப்பரப்பு முழுவதும் ஆளில்லாத விமானத் தாக்குதல்களும் நகரங்களின் உட்கட்டமைப்புகளையும் இலக்கு வைத்து ஏவுகணைத் தாக்குதல்களும் அதிகரித்துள்ளது.
ஒருபக்கம் தாக்குதலை ரஷ்யா நிகழ்த்துகின்றபோது மறுபக்கத்தில் உக்ரைனின் லுஹான்ஸ் மற்றும் டொநெஸ்க் (பிராந்தியத்தை தன்னாட்சிப் பகுதியாக அறிவித்து ரஷ்யாவுடன் இணைக்க திட்டமிட்டு வருகின்றது. அதற்கான நகர்வுகளை ரஷ்யா மேற்கொண்டுள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதத்தில் நேட்டோவும் ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களும் ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை நேரடியாக விதிப்பதை விடுத்து, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு ஊடாக நகர்த்த ஆரம்பித்துள்ளது.
ரஷ்யா ஒரு இருதய நிலம் என்ற அடிப்படையில் அதன் விளிம்பு நில நாடுகளாக காணப்படும் சீனா, இந்தியாவை கையாள்வதன் மூலம் ரஷ்யாவை நெருக்கடிக்குள் தள்ள முடியுமா என்று ஒரு பரிசோதனையை அமெரிக்கா மீண்டும் ஐரோப்பாவுடன் இணைந்து மேற்கொள்ள திட்டமிடுகிறது.
இது ஏறக்குறைய புவிசார் அரசியல் போராக மதிப்பிடப்பட்ட நிலை மாறி, பூகோள அரசியல் போர் என்ற பரிமாணத்தை வெளிப்படையாக எடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதில், சீனாவின் இந்தியாவின் மீதான, மேற்குலகத்தின் அழுத்தம் எவ்வகை விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். அதனை ஆழமாக விளங்கிக் கொள்ளுதல் அவசியமானது.
முதலாவது நேட்டோவினதும் சர்வதேச நாணய நிதிநிறுவனங்களதும் அழுத்தம் ரஷ்யாவின் மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோரி இருப்பதோடு அது நேரடியாகவே உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு நிதி வழங்குவதாக கருதுவதாக குறிப்பிட்டுள்ளன.
இதற்கான பதிலை இந்திய வெளிவிவகார அமைச்சர் தெளிவாக முன்வைக்காத சூழலில் அதைப் பற்றிய உரையாடலை இந்திய ஊடகங்கள் தொடங்கியிருக்கின்றன.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மீது உலகில் உள்ள எந்த நாடும் தலையீடு செய்ய முடியாது என்ற அழுத்தம் இந்திய வெளிவிவரகார அமைச்சு மீது மேற்கொள்ளப்படுகிறது. இதனால், மேற்குலக நாடுகளில் இந்தியா பொறுத்து பிரதான கொள்கை நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது.. இது இந்திய கொள்கை வகுப்பாளர்களுக்கும் நெருக்கடி மிக்க தருணமாகவே தெரிகிறது.
இரண்டாவது, சீனாவையும் மேற்குலக நாடுகளின் அத்தகைய மிரட்டலுக்குள் அல்லது அழுத்தத்துக்குள் ரஷ்யா உடனான வர்த்தகத்தை நிறுத்துமா என்பது கவனத்திற்குரியதாகும்.
ஆனால் சீனா கடந்த காலத்திலும் சரி, தற்போதைய நிலையிலும் சரி, அமெரிக்காவுக்கு எதிரான வர்த்தகப் போரை எதிர்கொண்டிருக்கும் சூழலில் ரஷ்யாவுடனான நெருக்கமான வர்த்தக மற்றும் பொருளாதார, இராணுவ உறவை கைவிடுமா என்பது கேள்விக்குரியாதே.
இது மேற்குலகத்தில் இறுதியான ஒரு தந்திரோபாயமாகவே தெரிகிறது. ரஷ்யா விடயத்தில் இந்தியாவைப் போன்று சீனாவை அணுகியிருப்பது மேற்குலகத்தின் கையறு நிலையை கோடிட்டுகாட்டுகிறது.
இதன் மூலம் சீனா, ரஷ்யாவுடனான வர்த்தகத்தை நிறுத்தி விடும் என்பது மேற்குலகத்தின் பலவீனமான முடிவாகவே தெரிகிறது. அதற்கான வாய்ப்பு இல்லை என்றே உணரமுடியும்.
அடிப்படையில் சீனாவுக்கும் பிரிக்ஸ் அமைப்புக்கும் வாய்ப்பான சூழலாகவே தெரிகிறது. மேற்குலகத்துக்கு எதிரான அணியாக ரஷ்யா, சீனா, இந்தியா என்பன பிரிக்ஸ் அமைப்பினூடாக கட்டமைத்திருக்கும் வலுவான வர்த்தக உறவையும் பொருளாதார கட்டமைப்பையும் நிராகரித்து மேற்குடன் கைகோர்த்தல் என்பது இந்த நாடுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தக் கூடியது.
அதனால் ரஷ்யாவுடனான வர்த்தக உறவை சீனா நிராகரிக்கும் என்று கணக்குப் போடுவது மிக மோசமான கையறுநிலைக்குரிய அரசியலாகவே தெரிகின்றது.
மூன்றாவது பிரிக்ஸ் அமைப்பில் ரஷ்யாவின் வகிபாகம் அமெரிக்காவின் டொலருக்கு எதிரானதாக மாறி இருக்கின்றது.
குறிப்பாக ரஷ்யாவினது மசகு எண்ணெயை, சீனாவும் இந்தியாவும் தமது சொந்த நாணயங்களிலே வர்த்தகம் செய்கின்றன.
இதனை தடுக்கத் தவறுகிற பட்சத்தில் அமெரிக்காவின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்திப்பதற்கான சூழலை உருவாக்கும்.
இதனையே மேற்குலகம் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவுக்கு வலியுறுத்தியுள்ளன. இதனால் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிரான புதிய உத்தியோடு உக்ரையின் போரை நீடிப்பதற்கான ஆயுத விநியோகத்தை மீள தொடங்க திட்டமிட்டுள்ளது.
இது முழுமையாகவே ரஷ்யாவின் இராணுவ ரீதியான பலத்தை அழிப்பதோடு பொருளாதார நெருக்கடி ஏற்படுத்துவதன் ஊடாக இப்போரை முடிவுக்கு கொண்டு வருதல் என்ற உபாயம் மேற்குலகத்திடம் காணப்படுகிறது. அது மட்டுமன்றி அடிப்படையில் அமெரிக்க நாணயத்தையும் ஐரோப்பிய பொருளாதாரத்தையும் பாதுகாப்பதே இதன் பிரதான நோக்கமாக தெரிகின்றது.
நான்காவது கிழக்கு நாடுகள் தெளிவான ஒரு கட்டமைப்பாக பிரிக்ஸ் அமைப்பின் ஊடாக மேற்குலகத்தை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. அதனை தோற்கடிக்க தவறுகின்ற பட்சத்தில், மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வரக்கூடிய சூழலை ஏற்படுத்திவிடும். அத்தகைய அச்சுறுத்தல், மேற்கு நாடுகளின் கூட்டான வர்த்தகம் மற்றும் பொருளாதார நலன்களை முடிவுக்கு கொண்டு வருவதாக அமைந்துவிடும்.
அதனால் அத்தகைய சூழலை தகர்ப்பதற்கு மேற்குலக நாடுகள் புதிய உபாயத்தை வகுத்துள்ளன.
ரஷ்யாவின் வீழ்ச்சி அல்லது ரஷ்யா மீதான நெருக்கடி, சீனா, இந்தியா மட்டுமின்றி வடகொரியா, ஈரான் போன்ற நாடுகளில் எழுச்சியை அல்லது பலத்தை முழுமையாக தோற்கடிப்பதற்கான உபாயமாகவும் அமைந்துவிடும்.
இதனை எதிர்கொள்வதற்கான அணுகுமுறையோடு இஸ்ரேலிய பிரதமர் அமெரிக்காவுக்கு ஜூலை மாதம் விஜயம் செய்திருந்தார்.
ஐந்தாவது ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அமெரிக்க உட்பட்ட மேற்குலகத்தின் ரஷ்யா மீதான பொருளாதார மற்றும் ஏனைய தடைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும். முறியடிக்கும் நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவும் மேற்குலகமும் விதித்த பொருளாதாரத் தடைக்குள்ளேயே ரஷ்யாவின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக குறிப்பிடப்படுவதற்கு பின்னால் இந்தியா, சீனா, ஈரான், வடகொரியா முக்கிய பங்காற்றியதென்பது மேற்குக்கு தெரிந்த விடயம்.
எனவே உக்ரைன்; மீதான ரஷ்யாவின் தாக்குதல்களின் தீவிரம் உலகளாவிய ரீதியான வர்த்தக கட்டமைப்பு முறையையும் சந்தையமைப்பையும் அது சார்ந்த பொருளாதார இருப்பையும் அதிக குழப்பத்துக்குள்ளாக்கி இருக்கின்றது.
ஐரோப்பாவின் உட்கட்டமைப்பு வசதிகளில் சக்தி வளம் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியது போன்று, தற்போது ஐரோப்பாவின் வர்த்தகத்தையும் சந்தையையும் தோற்கடிக்கத் தொடங்கியிருக்கிறது.
இத்தகைய நகர்வை முடிவுக்கு கொண்டு வருதல் அவசியமானது என மேற்குலகம் கருதுகிறது. மேற்குலகத்தின் நலன்களும் ரஷ்யாவின் அணுகுமுறையால் காணாமல் போய்விடும் என்ற அச்சம் இத்தகைய உபாயத்துக்கான பொறிமுறையாக விளங்குகிறது.
இதில் உக்ரைன் பலியிடப்படுகின்ற தேசமாகவே தெரிகின்றது. நேட்டோ நாடுகள், இந்தியாவை அச்சுறுத்தும் அளவுக்கு, நேட்டோவின் கொள்கைகள் நெருக்கடிக்குள்ளாகிவிட்டன என்றே தெரிகிறது. மேற்குலகத்தின் அபிலாஷைகளை தகர்க்கும் ரஷ்யாவை எப்படியாயினும் அழிக்கவேண்டும் என்பதே அந்நாடுகளது உபாயமாகும்.
எனவே உலகம் ஒரு புதிய ஒழுங்குமுறைக்குள் நகர்வதற்கான அடித்தளத்தை ரஷ்ய- –உக்ரைன் போர் ஏற்படுத்தியுள்ளது.
-ரீ. கணேசலிங்கம்.யாழ் பல்கலைகழகம்-