திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த கணவனுக்கு ஸ்பெஷல் மாதுளை ஜூஸ் தயாரித்து கொடுத்து கதையை முடித்த மனைவி மற்றும் இளைஞர் மீது, பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கீரைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரசூல். இவரது மனைவி அம்முபி. இவருக்கும், அதே பகுதியில் முடித்திருத்தும் தொழில் செய்யும் யோகேஸ்வரன் என்கிற இளைஞருக்கும் இடையே, திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.

இதை ரசூல் கண்டித்துள்ளார். இதனால் தனது தகாத உறவுக்கு ரசூல் தடையாக இருப்பார் என்று கருதிய அம்முபி தன்னுடைய கணவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

 

அதே சமயம் கொலை என்று தெரியாத வகையில் இருக்க இளைஞர் யோகேஸ்வரனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.

அதன்படி கடந்த 5 ஆம் திகதி இரவு மாதுளை ஜூஸ் தயாரித்து அதில் விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தினை கலந்து ரசூலுக்கு இரவு உணவுடன் அம்முபி கொடுத்துள்ளார்.

ஜூஸ் குடித்த சிறிது நேரத்தில் ரசூலுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு சென்று, ரசூல் சிகிச்சைப் பெற்று வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 7 ஆம் திகதி ரசூலுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதை தொடர்ந்து சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு ரசூலை பரிசோதித்த மருத்துவர்கள், ”ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்கிறது. தற்கொலை முயற்சி ஏதேனும் செய்தீர்களா?” என கேட்டுள்ளனர்.

இதில் சந்தேகம் அடைந்த ரசூல் தன்னுடைய மனைவி அம்முபி பயன்படுத்தும் செல்போனை சோதனை செய்தபோது இளைஞர் யோகேஸ்வரனுடன் கொஞ்சி பேசும் பல ஆடியோக்கள் இருப்பது பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

அம்முபி பேசிய ஆடியோ ஒன்றில், ”முதலில் கொடுத்த பூச்சிக்கொல்லி மருந்து பலன் அளிக்கவில்லை. மறுநாள் மாதுளம் பழம் ஜூஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்தேன். அதனால் தான் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.” என்று பேசிய உரையாடல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ஆடியோவை வைத்து அரூர் காவல் நிலையத்தில் ரசூல் உறவினர்கள் புகாரளித்துள்ளனர்.

இதற்கிடையே பூச்சிக்கொல்லி மருந்து ரத்தம் முழுவதும் கலந்து இருப்பதால் ரசூல் உடல்நிலை மிகுந்த மோசமான நிலைக்கு சென்றுள்ளது.

இதையடுத்து அம்முபி, யோகேஸ்வரன் ஆகிய இருவரையும் அரூர் காவல் துறையினர் கைது செய்து, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக அரூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கைது செய்யப்பட்ட ரசூலிடம் நேரில் விசாரணை நடத்தி மரண வாக்கு மூலம் பதிவு செய்தார்.

இந்த நிலையில், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ரசூல் உயிரிழந்தார். இதனால் ஜூசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கணவனை கொலை செய்த மனைவி அம்முபி மற்றும் இளைஞர் யோகேஸ்வரன் மீது பொலிஸார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். கட்டிய கணவனை மனைவியே கொலை செய்த சம்பவம், தருமபுரி மாவட்ட மக்களிடையே பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Share.
Leave A Reply