ஏமன் நாட்டில் கொலை வழக்கில் தூக்கு தண்டனை கைதியாக சிக்கித் தவிக்கும் கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாதான் (37) கடந்த சில நாள்களாகவே பலரின் பிரார்த்தனைகளில் இருந்து வருகிறார் எனலாம்.

அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை திரும்பப்பெறப்பட்டு, அவர் பாதுகாப்பாக நாடு திரும்ப வேண்டும் என நாட்டு மக்கள் பலரும் வேண்டி வருகின்றனர் எனலாம்.

நிமிஷா பிரியா தனது குடும்பத்தின் வறுமை நிலையை போக்குவதற்காக 2008ஆம் ஆண்டில் கேரளாவில் இருந்து ஏமன் நாட்டிற்கு குடிபெயர்ந்தார். அங்கு செவிலியராக பணியாற்றிய அவர் ஒரு கட்டத்தில் பார்ட்னர்ஷிப்பில் சொந்தமாக ஒரு மருத்துவமனையை தொடங்கும் நிலைக்கு உயர்ந்தார்.

தொடர்ந்து 2017ஆம் ஆண்டு தொழில் கூட்டாளியான தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் நிமிஷாவுக்கு பிரச்னை வந்துள்ளது.

இந்த பிரச்னை தீவிரமடைந்து, மஹ்தி நிமிஷாவின் பாஸ்போர்டை கைப்பற்றி தகராறு செய்துள்ளார்.

அவரிடம் இருந்து பாஸ்போர்டை திரும்பப் பெற பலமுறை முயற்சித்தும் நிமிஷாவால் பெற முடியவில்லை. இதனால் ஒருகட்டத்தில் மெஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து அவரிடம் இருந்து பாஸ்போர்டை திரும்ப எடுத்துவிட நிமிஷா திட்டமிட்டிருக்கிறார்.

ஆனால், நிமிஷா செலுத்திய மயக்க மருந்தே அவரை இந்த நிலைக்கு கொண்டுவந்துள்ளது. அந்த சம்பவத்தில் மஹ்தி உயிரிழக்க நிமிஷா கைது செய்யப்பட்டார்.

2018இல் இவர் மீதான கொலை குற்றம் உறுதியாக, தூக்கு தண்டனை 2020இல் அறிவிக்கப்பட்டது, 2023இல் மீண்டும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இைத் தொடர்ந்து, நிமிஷா பிரியாவை கடந்த ஜூலை 16ஆம் தேதி தூக்கிலிட அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.

ஆனால், கடைசி நேரத்தில் இந்திய சன்னி இஸ்லாமியர்களின் தலைவரான காந்தபுரம் ஷேக் அபுபக்கர் அகமது ஏமன் நாட்டின் முக்கிய அதிகாரிகள், மதகுருமார்களிடம் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து தண்டனை தற்சமயத்திற்கு நிறுத்திவைக்கப்பட்டது.

இருப்பினும் தண்டனை ரத்தாகவில்லை, தள்ளிப்போனது. தொடர்ந்து, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் நிமிஷா பிரியாவுக்கு தேவையான சட்டரீதியான உதவிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

ஏமன் நாட்டின் ஷரியா சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட தரப்புக்கு ரத்தப் பண ஏற்பாடு (தியாத்) மூலம் மன்னிப்பு கோரலாம் என தெரிவிக்கப்பட்டது.

காந்தபுரம் ஷேக் அபுபக்கர் அகமது

குறிப்பாக, இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட தியாத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்குமாறு ஏமன் நாட்டு மதகுருமார்களிடம் காந்தபுரம் ஷேக் அபுபக்கர் அகமது வலியுறுத்தி இருந்தார்.

ரத்த பணமாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சுமார் ரூ.8.6 கோடியை இழப்பீடாக வழங்க பிரியாவின் குடும்பத்தினர் விருப்பம் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து அதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தங்களிடம் அனுமதிப் பெறாமலேயே, தன்னை சமூக ஆர்வலர் என்றும் வழக்கறிஞர் என்றும் காட்டிக்கொண்டு சாமுவேல் ஜெரோம் என்பவர் கிரவுட் ஃபண்டிங் மூலம் 40 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு திரட்டி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார் என உயிரிழந்த தலால் அப்தோ மஹ்தி சகோதரர் அப்துல் ஃபதா மஹ்தி தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரத்தை அனைவரும் உற்று நோக்கி வரும் இந்தச் சூழலில், ஏமன் நாட்டில் Global Peace Initiative அமைப்பின் தலைவர் டாக்டர் கே.ஏ. பால் என்பவர் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை இந்திய – ஏமன் நாட்டு தலைவர்கள் இடையேயான பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் ரத்து செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3.40 மணிக்கு வீடியோ உடன் அவர் போட்ட பதிவில், ‘ஏமன் நாட்டின் சனா நகரைச் சேர்ந்த இந்திய செவிலியர் நிமிஷா பிரியா சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் டாக்டர் கே.ஏ. பால் பேசியதாவது, “நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட உள்ளது,

இதை ஒரு பெரிய வெற்றியாக மாற்றுவதற்கு காரணமாக இருந்த அனைத்து தலைவர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

கடவுளின் அருளால், அவர் விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்துச் செல்லப்படுவார். பேச்சுவார்த்தை குழுவை அனுப்பி, நிமிஷாவை பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

சனா சிறையில் இருந்து ஓமன், ஜெட்டா, எகிப்து, ஈரான் அல்லது துருக்கி நாட்டுக்கு நிமிஷாவை பாதுகாப்பாக அனுப்புவதற்கு இந்திய அரசாங்கத்துடன் இணைந்து பயண ஏற்பாடுகளைச் செய்ய தயாராக இருப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

 உறுதிசெய்யப்படாத தகவல் இது

ஆனால், இதுகுறித்து வேறு எந்த அதிகாரப்பூர்வ தகவலும் நமக்கு கிடைக்கவில்லை எனலாம். கே.ஏ. பாலின் இந்த கருத்துகளை ஏமன் அரசு அல்லது நிமிஷா பிரியா தரப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Share.
Leave A Reply