சிரியாவின் தலைநகர் டமஸ்கஸிலுள்ள ஜனாதிபதி மாளிகை, பாதுகாப்பு அமைச்சு, இராணுவத் தலைமையகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது கடந்த புதனன்று இஸ்ரேல் கடும் தாக்குதல்களை திடீரென முன்னெடுத்தது. இத்தாக்குதல்களின் ஊடாக மற்றொரு போர் முன்னெடுப்பை இஸ்ரேல் ஆரம்பித்து விட்டதா என்ற கேள்வி உலகளாவிய ரீதியில் எழுந்தது.
இத்தாக்குதல்களுக்கு ஐ.நா மற்றும் உலக நாடுகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. சிரியாவின் இறைமையையும் ஒருமைப்பாட்டையும் மதித்து செயற்பட வேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
‘சுவைதாவிலுள்ள ட்ரூஸ் இன மக்களை சிரிய அரசாங்கப் படையினர் மிக மோசமாக நடத்துகின்றனர்.
அதற்கு இடமளிக்க முடியாது. அவர்களை நாங்கள் பாதுகாப்போம். அதனால் சிரிய அரசபடையினர் சுவைதாவில் இருந்து வெளியேற வேண்டும். இல்லாவிடில் தாக்குதல் நடத்தப்படும்’ என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறிய சில மணித்தியாலயங்களில், டமஸ்கஸ் மீது இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து யுத்த பதற்றம் ஏற்பட்டது.
தெற்கு சிரியாவிலுள்ள சுவைதாவில் ட்ரூஸ் இனப் போராளிகளுக்கும் பெடோயின் அரபு பழங்குடியினருக்கும் இடையில் கடந்த ஞாயிறன்று மோதல் வெடித்தது.
இச்சமயம் சட்டம், ஒழுங்கை அமுல்படுத்தவென சிரிய அரசபடையினர் தலையிட்டனர். அவர்களுடன் உள்ளூர் ட்ரூஸ் போராளிகள் மோதலில் ஈடுபட்டனர். இது பொதுமக்கள் மீதான தாக்குதலெனக் குற்றம் சாட்டப்பட்டது.
மோதலில் ஈடுபட்டவர்களையும் மோதலுக்குக் காரணமானவர்களையும் அரசபடையினர் கைது செய்ததன் ஊடாக மோதல் தணிந்தது. அந்தச் சூழலில் சிரிய அரசாங்கம் யுத்தநிறுத்தத்தை அறிவித்தது. அதனை ட்ரூஸ் இனத் தலைவரான யாசர் ஜார்பூவும் உறுதிப்படுத்தினார்.
ஆனால் மற்றொரு ட்ரூஸ் இனத் தலைவரான ஹிக்மத் அல்-ஹிஜ்ரி, போர்நிறுத்தத்தை நிராகரிப்பதாக அறிவித்தார்.
இதன் விளைவாக போர்நிறுத்தம் முறிவடைந்ததோடு, புதனன்று காலையில் மீண்டும் சண்டை உருவெடுத்தது. இச்சூழலில்தான் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை வெளியானது.
அதேநேரம் ட்ரூஸ் இன மக்களின் நீண்ட தாடியும், சடை மீசையும் ஆயுதம் ஏந்தியவர்களால் பலவந்தமாகக் கத்தரிக்கப்படும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகின. இந்த மக்களின் சடை மீசையும், நீண்ட தாடியும் அவர்களது முக்கிய அடையாளங்களாகக் கருதப்படுகின்றன.
இவ்வாறான பின்னணியில் டமஸ்கஸில் இஸ்ரேல் முன்னெடுத்த வான்வழித் தாக்குதல்களின் விளைவாக 70 பேர் கொல்லப்பட்டதோடு 200 பேர் காயமடைந்துள்ளதாக நகர மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டது.
ஆனால் இங்கிலாந்தைத் தளமாகக் கொண்ட போர் கண்காணிப்பகமான சிரிய மனித உரிமைகள் நிறுவனம், ‘புதன்கிழமை காலை நிலைவரப்படி 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் சிறுவர்கள், ஐவர் பெண்கள்’ என்று தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகள் மற்றும் போராளிகளைச் சேர்ந்த 138 பேரும் கொல்லப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காசாவில் சுமார் 22 மாதங்களாக முழு அளவிலான போரில் ஈடுப்பட்டுள்ள இஸ்ரேல், லெபனான் மீது தினமும் வான்வழித்தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.
யெமன் ஹுதிக்கள் மீதும் அவ்வப்போது தாக்குதல்களை மேற்கொள்ளும் இஸ்ரேல், சிரியா மீது முன்னாள் ஜனாதிபதி பஷர் அல் அசாத் ஆட்சி வீழ்ச்சியடையும் வரை மாத்திரமல்லாமல், தற்போதைய ஜனாதிபதி பதவிக்கு வந்த பின்னரும் தாக்குதல்களை முன்னெடுக்கிறது. ஈரானுடனும் 12 நாட்கள் யுத்தத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில் ட்ரூஸ் இன மக்களைப் பாதுகாக்கப் போவதாகக் குறிப்பிட்டே இத்தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது.
ட்ரூஸ் இன மக்கள் அரபு மொழியையும் கலாசாரத்தையும் தங்கள் அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதிகளாகக் கருதுகின்றனர்.
அரபு அவர்களின் முதன்மை மொழியாகும். பெரும்பாலான ட்ரூஸ் மத நடைமுறைகள் இரகசியமாகப் பேணப்படுகின்றன. மதமாற்றம் அவர்களது சமய நம்பிக்கையில் அனுமதிக்கப்படுவதில்லை. கலப்புத் திருமணங்களும் அரிதானவை.
இந்த இன மக்கள் சிரியா, லெபனான், இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடுகளில் காணப்படுகின்றனர். அவர்கள் செல்வாக்குமிக்க சமூகத்தினராக விளங்குகின்றனர்.
இஸ்ரேலின் நம்பிக்கைக்குரிய நண்பர்களாகத் திகழும் ட்ரூஸ் இனத்தை சேர்ந்தவர்களில் பலர், இஸ்ரேலிய இராணுவத்திலும் பணியாற்றுகின்றனர்.
Druze Religion
இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலுள்ள சிரிய பகுதியான கோலான் குன்று உள்ளிட்ட பிரதேங்களில் ட்ரூஸ் இன மக்கள் அதிகளவில் உள்ளனர். சுவேதாவில் வசிப்பவர்களில் இவர்கள் பெரும்பான்மையினராவர். பெடோயின் பழங்குடி அரபுக்கள் சிறுபான்மையினராவார். இருதரப்பினருக்கும் இடையில் நீண்டகாலப் பகைமை உள்ளது.
1967 இல் இடம்பெற்ற ஆறு நாள் போரின் போது இஸ்ரேல் சிரியாவிலிருந்து கைப்பற்றிய கோலன் குன்று பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்ரூஸ் மக்கள் வசிக்கின்றனர்.
இஸ்ரேல் அப்பகுதியை 1981 இல் முறையாக இணைத்துக் கொண்டது. இவர்களுக்கு வதிவிட அட்டைகளை வழங்கி, அவர்களை தங்கள் பிரஜைகளாக இஸ்ரேல் அங்கீகரித்திருக்கிறது. ஆன போதிலும் பெரும்பாலான ட்ரூஸ் மக்கள் தங்களை சிரியர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றனர்.
கடந்த வெள்ளியன்று டமஸ்கஸை சுவேதாவுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் ஒரு ட்ரூஸ் வணிகர் கடத்தப்பட்டது உட்பட பல காரணங்களின் பின்னணியில் இருதரப்பினருக்கும் இடையில் கடந்த ஞாயின்று மோதல் வெடித்தது.
இது தீவிரமடைய இஸ்ரேலில் செல்வாக்குமிக்க ட்ரூஸ் ஷேக் ஹிக்மத் அல்-ஹிஜ்ரி நெருக்கமாகப் பணியாற்றியுள்ளார். சுவைதாவில் அரசாங்கக் கட்டடங்களைக் கைப்பற்றியது அவரது படையினர்தான்.
அச்சமயம் சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க சிரிய பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுத்ததாக சிரிய தரப்பு கூறியது. அல்-ஹிஜ்ரி உள்ளிட்டோரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவே இஸ்ரேல் தெரிவித்தது.
இத்தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களை மீறும் செயலென்று சிரியா கண்டித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதலை ஐ.நா. செயலாளர் நாயகம் மற்றும் உலகத் தலைவர்கள் பலர் கண்டித்துள்ளனர்.
சுவைதாவானது இஸ்ரேலுக்கும் ஜோர்தானுக்கும் அருகிலுள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் மிக்க பிரதேசமாகும்.
அப்பிரதேசத்தில் சிரிய அரசபடையினரின் செல்வாக்கு அதிகரிப்பதையும், அப்பிரதேசத்தை சிரிய படையினர் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதைத் தடுப்பதிலும் இஸ்ரேல் குறியாக உள்ளது.
குறிப்பாக பஷர் அல் அசாத்தின் ஆட்சி கடந்த ஆண்டின் இறுதியில் வீழ்ச்சியடைந்ததோடு, கோலான் குன்று பகுதியையொட்டிய ஜபல் ஷெய்க் மலை (ஹெர்மன் மலை) உள்ளிட்ட சில பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது இஸ்ரேல் சிரியாவின் புதிய அரசாங்கம் தெற்கில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முயற்சித்து வருகின்ற போதிலும், எந்தவொரு அரசாங்க இராணுவ இருப்புக்கும் அங்கு இடமளிக்காத வகையில் இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுக்கிறது.
சிரியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கைக்கு வருவதற்கான எந்தவொரு முயற்சியையும் தவிர்த்துவரும் இஸ்ரேல், அதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்கிறது.
சிரியா வலுவாக வளர்ந்தால் அது தமக்கு அச்சுறுத்தலாக இருக்குமெனக் கருதும் இஸ்ரேல், பலவீனமான சிரியாவையே விரும்புகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சிரிய-இஸ்ரேலிய நல்லிணக்கத்தையும் ஆபிரகாம் ஒப்பந்தங்களின் விரிவாக்கத்தையும் வளர்ப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் முயற்சித்துவரும் சூழலில், இஸ்ரேல் இத்தாக்குதலை முன்னெடுத்திருக்கிறது.
இந்நிலையில் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேல் அதன் எல்லைகளில் உள்ள தீவிரவாத குழுக்களிடம் எச்சரிக்கையாக இருக்கும் வகையில், சிரியாவுக்கு எதிரான மோதல் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதல்களின் பின்னர், சுவைதாவில் இருந்து வெளியேற சிரிய அரசபடையினர் இணக்கம் தெரிவித்து வெளியேறினர். யுத்தநிறுத்தமும் நடைமுறைக்கு வந்தது. சிரிய இடைக்கால ஜனாதிபதி அஹமட் ஷாரா, ட்ரூஸ் மக்களைப் பாதுகாக்க முன்னுரிமை அளிப்போம் என்று அறிவித்தும் இருக்கிறார்.
இருப்பினும் சிரியா மீதான இஸ்ரேலின் இத்தாக்குதலை, ஒரு போர் முடிவுக்கு வரும் நிலையில் மற்றொரு போரை ஆரம்பிப்பதாக போரியல் நிபுணர்கள் குறிப்பிட்டு விமர்சித்திருக்கின்றனர்.
மர்லின் மரிக்கார்