திபெத்திய மக்களைப் பொறுத்தவரை, பௌத்தம் என்பது ஒரு நம்பிக்கையை விட, அது அவர்களின் கலாச்சார, மொழியியல் மற்றும் இன அடையாளத்தின் சாராம்சமாகும்.

தலாய் லாமா இரக்கத்தின் போதிசத்துவரின் வெளிப்பாடாகவும், மத சுதந்திரத்தின் கலங்கரை விளக்கமாகவும், உச்ச ஆன்மிகத் தலைவராகவும் பணியாற்றி வருவதால், திபெத்திய சமூகம் கட்டமைக்கப்பட்ட ஆன்மீக அடித்தளமாக திகழ்கிறது.

இருப்பினும், இந்த ஆழமான ஆன்மீக அடையாளமும் சுயாதீனமான தலைமையும் சீன கம்யூனிஸ்ட் கட்சியால் முற்றுகையிடப்படுகிறது.

இதங்கு பிரதான காரணமாக தனது அதிகாரத்திற்கு நேரடி அச்சுறுத்தலாக திபெத்திய பௌத்தம் இருப்பதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.

திபெத்திய பௌத்தத்துடனான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மோதல் வெறும் மத சுதந்திரத்தைப் பற்றியது மட்டுமல்ல, மாறாக திபெத்திய அடையாளத்தின் உயிர்வாழ்விற்கான ஒரு ஆழமான போராட்டமாகும்.

தலாய் லாமா

தலாய் லாமா : அச்சுறுத்தலுக்கு உள்ளான ஒரு புனித பரம்பரை

மறுபிறவி எடுத்த லாமாக்களின் (துல்கஸ்) பண்டைய மரபில் வேரூன்றிய தலாய் லாமா பரம்பரை,

திபெத்தின் தலைவர்களை அடையாளம் காண்பதில் ஆன்மீக சுயாட்சியை வலியுறுத்துகிறது. 600 ஆண்டுகளுக்கும் மேலாக, புதிய தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறையில் மூத்த துறவிகள் கருத்தில் கொள்ளும் ஆன்மீக அடையாளங்கள் மற்றும் தரிசனங்கள் காணப்படுகின்றன.

தற்போதைய 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, தனது மறுபிறவி தொடர்பான அதிகாரம் தனக்கும் திபெத்திய மக்களுக்கும் மட்டுமே உள்ளது என்று முன்கூட்டியே வலியுறுத்தியுள்ளார்.

வெளிப்படையாக சீன அரசாங்கத்தைத் தவிர்த்து, தனது வாரிசு சீன மக்கள் குடியரசிற்கு வெளியே பிறப்பார் என்றும், அரசியல் நோக்கங்களுக்காக பெய்ஜிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு தெரிவும் நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த மூலோபாய நடவடிக்கை உண்மையிலேயே சுதந்திரமான வம்சாவளியைப் பாதுகாப்பதையும், திபெத்திய பௌத்தத்தில் மிகவும் மதிக்கப்படும் நபரின் மீது சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டுப்பாட்டைப் பெறுவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தலாய் லாமாவின் வாரிசைக் கட்டுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விருப்பம் பாரம்பரிய தேர்வு செயல்முறைக்கு நேரடி சவாலாகவும், ஆன்மீக நியாயத்தன்மையை அகற்றும் முயற்சியாகவும் உள்ளது என்பது திபெத்தியர்களின் நிலைப்பாடாகும்.

சீனமயமாக்கல்: ஒரு முறையான அடக்குமுறை பிரச்சாரம்

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ‘மதத்தை சீனமயமாக்குதல்’ கொள்கை, அனைத்து மதக் குழுக்களையும் கட்சியின் மார்க்சிய பார்வை மற்றும் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு அடிபணியச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தக் கொள்கை, கட்சியின் இலக்குகளுக்கு முரணான நம்பிக்கையின் கூறுகளை ஒழிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கருத்தியல் மாற்றமாகும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி, திபெத்திய பௌத்தத்தை ஒரு ஆழமான கலாச்சார மற்றும் அரசியல் சவாலாகக் கருதுகிறது. குறிப்பாக தலாய் லாமாக்கள் வரலாற்று ரீதியாக ஆன்மீக மற்றும் உலகியல் அதிகாரத்தை வகித்து, நம்பிக்கையை ஆட்சியுடன் இணைக்கின்றனர்.

இதனால் சீன கம்யூனிஸ்ட் கட்சி முறையாக மத நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளை குறிவைக்கிறது. பாரம்பரியமாக கலாச்சார மற்றும் ஆன்மீக மையங்களான மடாலயங்கள், ‘தேசபக்தி கல்வி பிரச்சாரங்களுக்கு’ உட்பட்டவையாக உள்ளது.

அங்கு துறவிகள் தலாய் லாமாவை கண்டிக்கவும், கம்யூனிஸ்ட் கட்சியைப் புகழ்ந்து பேசவும், சீன கம்யூனிஸ்ட் கட்சி சித்தாந்தத்தை தங்கள் மத நடைமுறைகளில் ஒருங்கிணைக்கவும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

மதப் பிரமுகர்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சி விசுவாசிகளால் மாற்றப்படுகிறார்கள். மேலும் 2024 ஆம் ஆண்டு ஒரு ஒழுங்குமுறை மடாலய நிர்வாகிகள் விசுவாசமான கட்சி உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்று கோரப்படுகிறது. இது மத அமைப்புகளின் உள் நிர்வாகத்தை திறம்படப் படம்பிடித்து, அவற்றை அரசு எந்திரத்தின் நீட்டிப்புகளாக மாற்றுகிறது.

கலாசார அழிவு

சீனாவின் அடக்குமுறையின் மனித விலை அப்பட்டமானது. தலாய் லாமாவால் அங்கீகரிக்கப்பட்ட 11வது பஞ்சன் லாமாவான கெதுன் சோக்கி நிமாவின் மறைவு ஒரு உறைய வைக்கும் உதாரணமாக செயல்படுகிறது.

1995 ஆம் ஆண்டு சீன அதிகாரிகளால் ஆறு வயதில் கடத்தப்பட்ட அவர், அதன் பின்னர் காணப்படவில்லை.

பின்னர் பெய்ஜிங் தனது சொந்த வேட்பாளரான கியால்ட்சென் நோர்புவை பஞ்சன் லாமாவாக நியமித்தது. இந்த நடவடிக்கை தலாய் லாமாவின் வாரிசுரிமையின் மீது அரசு கட்டுப்பாட்டிற்கு ஒரு முன்னுதாரணத்தை நிறுவ திட்டமிட்ட முயற்சியாகும்.

அரசால் ஆதரிக்கப்படும் பஞ்சன் லாமாவான கியால்ட்சென் நோர்பு, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்திற்கான ஊதுகுழலாகப் பயன்படுத்தப்படுகிறார்,

கட்சி விசுவாசத்தையும் சீனமயமாக்கலையும் ஊக்குவிக்கிறார். திபெத்தியர்கள் பெரும்பாலும் அவரது ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இது ஆன்மீக விசுவாசத்தை உடைத்து பயத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு உளவியல் போரின் வடிவமாகும்.

மேலும், ஒரு மில்லியன் திபெத்திய குழந்தைகளை அரசு நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் கட்டாயமாக இணைப்பது ஒரு தலைமுறை கலாச்சார அழிவைக் குறிக்கிறது.

இந்தக் குழந்தைகள் தங்கள் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, அவர்களின் பூர்வீக மொழி, கலாச்சார மற்றும் மத மரபுகளிலிருந்து துண்டிக்கப்படுகிறார்கள்.

தலாய் லாமாவின் படங்களை வைத்திருப்பது அல்லது விநியோகிப்பது போன்ற எளிய செயலையும் சீன கம்யூனிஸ்ட் கட்சி பெரும் குற்றமாக்குகிறது. இது அவருக்கு மரியாதை செலுத்துபவர்களுக்கு தடுப்புக்காவல், சிறைத்தண்டனை மற்றும் சித்திரவதைக்கு வழிவகுக்கிறது.

மனசாட்சிக்கான அழைப்பு

திபெத்திய பௌத்தத்திற்கு எதிரான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரம் கலாச்சார பாரம்பரியத்தின் மீதான விரிவான தாக்குதலாகும். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ‘மத சுதந்திரம்’ என்று கூறினாலும், எந்தவொரு நடைமுறையும் கட்சியின் கட்டளைகளுக்கு இணங்கினால் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இது உண்மையான சுதந்திரத்தை சாத்தியமற்றதாக்குகிறது. தலாய் லாமாவின் செல்வாக்கை ஒழிப்பதும், இணக்கமான ஒரு வாரிசை நிறுவுவதற்கான முயற்சியும் சீனமயமாக்கல் திட்டத்தின் மையமாகும்.

இந்த மோதல் மனித கண்ணியம் மற்றும் மத சுதந்திரத்திற்கான உலகளாவிய கவலையாகும். தலாய் லாமாவின் மறுபிறவியின் எதிர்காலம் ஒரு முக்கியமான தருணம் என்பதுடன், மகத்தான அழுத்தம் இருந்தபோதிலும், திபெத்திய மக்களின் மீள்தன்மை, மத சுதந்திரத்தின் முக்கியத்துவத்தையும் ஆன்மீக பரம்பரைகளின் புனிதத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

சர்வதேச சமூகத்தால் செய்யப்படும் தேர்வுகள் எதிர்காலத்தை மட்டுமல்ல திபெத்திய பௌத்தம் மட்டுமல்லாமல் மனித உரிமைகளுக்கான உலகளாவிய தரநிலைகளாகவும் காணப்படும் என்பது யதார்த்தமாகும்.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply