“பாலஸ்தீனத்தை சுய இராச்சியமாக அங்கீகரிக்கும் அறிவிப்பை நான் எதிர்வரும் செப்டம்பரில் இடம்பெறவுள்ள ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தொடரில் வெளியிட தீர்மானித்துள்ளேன்.

மத்திய கிழக்கில் நீதியானதும், நிரந்தரமானதுமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான எனது வரலாற்று ரீதியான அனுபவத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் .

இது ஒரு தார்மீகக் கடமை (DEVOIR MORAL: MORAL DUTY/ MORAL OBLICATION) என்று நான் கருதுகிறேன்”

இவ்வாறு பாலஸ்தீன சுய இராச்சியத்தை அங்கீகரிக்க முடிவு செய்து நேற்று வியாழக்கிழமை (24.07.2025) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது ‘X’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ‘சமாதானம் சாத்தியமானது’ இது பிரான்ஸ், மற்றும் கூட்டாக இஸ்ரேல், பாலஸ்தீனம், ஐரோப்பிய, சர்வதேச சக்திகளின் கைகளில் தங்கியுள்ளது என்றும் கூறுகிறார் மக்ரோன்.

1789 பிரான்சிய புரட்சி சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரம் என்பனவற்றை தாரக மந்திரமாகக்கொண்டது. அதன் சாயலை மக்ரோனின் வரலாற்று முக்கியத்துவம் மிக்க இந்த அறிவிப்பில் காணமுடிகிறது.

மேற்குலகு கனவிலும் எதிர்பார்த்திராத அதிர்ச்சி வைத்தியத்தை அமெரிக்க அணிக்கு செய்திருக்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி EMMANUEL MACRON.

மக்ரோனின் இந்த முடிவை அமெரிக்காவும், இஸ்ரேலும் வன்மையாக கண்டித்துள்ளன. ஜேர்மனிக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மக்ரோனின் அறிவிப்பு பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளது.

இதற்கிடையில் பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், பாலஸ்தீன ஜனாதிபதி MAHMUD ABBAS க்கும் இடையில் செய்யவேண்டிய மற்றைய ஏற்பாடுகள் குறித்து கடிதத் தொடர்புகள் இருந்து வருகின்றன.

BENJAMIN NETANJAHU

“இவ்வாறான ஒரு முடிவு பயங்கரவாதத்திற்கு சேவை செய்வதாகும்” என்று இஸ்ரேல் பிரதமர் BENJAMIN NETANJAHU வும், “ஒரு பாலஸ்தீன அரசு என்பது ஹாமாஸ் அரசு” என்று இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் GIDEON. SAAR உம் கண்டித்துள்ளனர்.

இவர்களோடு இணைந்து கொண்ட அமெரிக்க வெளியுறவு அமைச்சர் “பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்காத இந்த முடிவு ஹாமாஸ் பிரச்சாரத்திற்கு சேவை செய்வதாக அமையும் என்றும், சமாதானத்தை பின்நோக்கி தூக்கி வீசும் என்றும் கூறுகிறார்.

மேலும் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம் ஈரானுக்கு ஒரு உதவியாளரை நிறுவுவதாக அமையும்” என்றும் கூறியுள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதியை இந்த முடிவை நோக்கி நகர்த்திய சர்வதேச சூழல் பற்றி இங்கு பேசவேண்டி உள்ளது.

இந்த வாரத்தில் மேற்கு ஐரோப்பிய ஊடகங்கள் பாலஸ்தீன மக்களின் துயரங்களை அதிகம் பேசின.

அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் இனியும் இயலாது என்ற ஒரு எல்லைக்கு வந்துவிட்ட ஒரு நிலை காணப்பட்டது.

பிரான்சை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் “எல்லைகளற்ற வைத்தியர்கள்” அமைப்பின் ஒரு முக்கியஸ்தர் ஊடகங்களுக்கான நேர்காணலில் இப்படிச் சொன்னார்:

“நாளைக்கு எங்களுக்கு இப்படி எல்லாம் நடக்கிறது என்று தெரியாது என யாரும் சொல்லி தப்பிக்க முடியாது” என்று கூறியது உலக தலைவர்களை எச்சரிக்கும் வகையிலான ஒரு வாக்குமூலமாக இருந்தது.

இதை மறுத்த இஸ்ரேல் வழமையான பாணியில் இது ஹாமாஸ் பிரச்சாரம் என்றது. இலட்சக்கணக்கான மக்களுக்கு பத்து, பதினைந்து நிமிடங்களே நிவாரணங்களை வழங்கமுடிகிறது அதற்கிடையில் அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்படுகிறது என்று அந்த எல்லைகள் அற்ற வைத்தியர்களின் அமைப்பின் பிரதிநிதி கூறினார்.

நிவாரணம் வழங்கும் நேரத்தில் தாக்குதல் நடாத்துமாறு இஸ்ரேல் இராணுவத்திற்கு விடுக்கப்பட்டிருந்த உத்தரவும் வெளியிடப்பட்டது.

இந்த விபரங்களும், காட்சிகளும், இஸ்ரேலும், அமெரிக்காவும் ஒழித்துபிடித்து விளையாடுவதும், பிரான்ஸ் உடன் நல்லுறவைக் கொண்டுள்ள புதிய சிரியா ஆட்சியாளர்களுக்கு எதிராக, சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியமை போன்ற அண்மைய நிகழ்வுகளும் மக்ரோனை இனியும் அமெரிக்காவுக்காகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்காகவும் காத்திருப்பதில் பயனில்லை என்ற முடிவுக்கு தள்ளியிருக்கிறது.

ஜனாதிபதி மக்ரோனுடன் பாலஸ்தீன, உக்ரைன் விவகாரங்களிலும், அமெரிக்க வரிக்கொள்கைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் எதிர் வரியொன்றை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உடன்பாடாகவும் பிரான்ஸ்சுடன் ஒத்துழைப்பதில் ஜேர்மனி தடை போடுகிறது.

உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ்சும், ஜேர்மனியுமே தீர்மானம் எடுக்கும் சக்திகளாக அனைத்தையும் நிர்ணயிக்கின்றன.

இந்த நிலையில் இருதரப்புக்கும் இடையிலான இந்த முரண்பாடுகள் இந்த விவகாரங்களில் முன்னோக்கி நகர தடையாக உள்ளது.

இந்த சூழலில் ஒட்டு மொத்த ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் வழங்கப்படும் ஒரு அழுத்தமாகவும், சிவப்பு எச்சரிக்கையாகவும் மக்ரோனின் முடிவு அமைகிறது.

ஐரோப்பிய ஒன்றியம் வரி விடயத்தில் சீனாவுடன் நெருங்க எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இரண்டு தினங்களுக்கு திட்டமிட்ட இரு தரப்பு பேச்சுக்கள் இரண்டு மணித்தியாலங்களில் முடிவடைந்தன.

சீனாவுக்கு வரிச்சலுகை வழங்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவுக்கு ஆதரவளிக்ககூடாது என்று சீனாவுக்கு நிபந்தனை விதித்ததனால் இப்பேச்சுக்களை தொடர சீனா விரும்பவில்லை.

மேலும் ஐரோப்பிய ஒன்றிய 27 நாடுகளில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் மொத்த அளவை விடவும், ஒரே ஒரு நாடான சீனா மிக அதிகளவு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்கிறது.

இதை ஐரோப்பிய தரப்பு சுட்டிக்காட்டிய போது இது ‘ட்ரம்ப்பாணி’ நோக்கு என்று சீனா கதவை இழுத்துச்சாத்திவிட்டது. ரஷ்ய -சீனா பொருளாதார உறவில் இருதரப்பும் பரஸ்பர நன்மைகளை பெறுகின்றன,

இதனை முறிக்க சீனா தயாரில்லை. மக்ரோன் எதிர்வரிவிதிப்பை செய்து அமெரிக்காவுக்கு திருப்பி அடிக்கவே விரும்புகிறார். ட்ரம்ப்பை வழிக்கு கொண்டு வருவதற்கு அதுவே வழி என்று நம்புகிறார். இந்த சூழ்நிலையில் மக்ரோனின் பாலஸ்தீனம் சார்ந்த அரசியல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மற்றைய நாடுகளை விடவும் மத்திய, கிழக்கு, ஆபிரிக்க நாடுகளில் பிராஸ்க்கான தொடர்பு அதிகமானது.

காலனித்துவ கால நீண்ட வரலாற்று பின்னனியைக்கொண்டது. இதனால் இந்த பிராந்தியத்தில் சமாதான முயற்சிகளில் பிரான்ஸ் முக்கிய பங்காளியாக இருக்கிறது. அரபு நாடுகளின் ஒன்றியத்துடன் நெருக்கமான தொடர்பை பேணுகிறது.

இவை அனைத்தும் சேர்ந்து பாலஸ்தீன விவகாரத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டிய நெருக்குதலை மக்ரோனுக்கு ஏற்படுத்தியது. இதன் விளைவே மக்ரோனின் பாலஸ்தீனத்திற்கான அங்கீகாரம்.

இதுவரை ஐக்கிநாடுகள் சபையின் உறுப்பு நாடுகள் 147 பாலஸ்தீன அரசை அங்கீகரித்துள்ளன. இவற்றில் அதிகமானவை தென்னமெரிக்க, ஆசிய, ஆபிரிக்க நாடுகள். அதேவேளை பிரான்ஸ் உட்பட 45 நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கரிக்கவில்லை.

இதில் அரைவாசி நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். இவற்றோடு அமெரிக்கா, பாலஸ்தீனம், இஸ்ரேல் என்பனவும் அங்கீகரிக்கவில்லை. கடைசியாக நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் என்பனவும் அங்கரிக்க தயார் என்று அறிவித்தன.

இவை எல்லாவற்றையும் விடவும் பிரான்ஸ்சின் முடிவானது மற்றைய நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகவும், அழுத்தமாகவும், தைரியத்தை வழங்குவதாகவும் அமையும் என்பதில் வியப்பில்லை.

மக்ரானின் அறிவிப்பு குறித்து கருத்து வெளியிட்ட சாதாரண இஸ்ரேல்பிரஜை ஒருவர் “நாங்கள் யுத்தத்திற்கும் பட்டினி, மரணம் என்பனவற்றிற்கும் இடையே ஒன்றை தெரிவு செய்யமுடியாது. வாழ்வதே எங்கள் முடிவு” என்றுள்ளார்.

இந்தக் கருத்தை பாலஸ்தீனம் ‘வாழு வாழவிடு’ என்று அரை நூற்றாண்டுக்கும் மேலாக கூறிவருகிறது.

இது இப்போதுதான் மக்ரோனின் காதில் விழுந்ததா? இது வரை அவரின் கரங்கள் கட்டப்பட்டிருந்தனவா…? மக்ரோனின் முடிவு ஐரோப்பாவின் சியோனிச அரசியலை ஆதரிக்கும் அடிப்படை போக்கில் ஒரு வெடிப்பை – அசைவை ஏற்படுத்தியுள்ளது.

மக்ரோனின் அறிவிப்பு பாலஸ்தீன மக்களின் த்துவா – தவத்திற்கு கிடைத்த ஆன்மீக வெற்றி. ஹாமாஸ் ஆயுதம் ஊடாக அடைந்த அரசியல் வெற்றியின் ஒரு படி. “பிரான்ஸ்சின் முடிவு வரவேற்கத்தக்க சரியான திசை என்று கூறியுள்ள ஹாமாஸ் நீதியையும், சுயநிர்ணயத்தையும் எட்டுவதற்கான வழி என்றும், மற்றைய நாடுகளும் ஜெருசலேத்தை தலைநகராக கொண்ட பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவேண்டும்” என்றும் கோரியுள்ளது.

அதுசரி சமாதாதானத்திற்கான நோபல்பரிசு இனி யாருக்கு?

ரொனால்ட் ரம்புக்கா…..? இமானுவல் மக்ரோனுக்கா…. ?

— அழகு குணசீலன் —

Share.
Leave A Reply