தென்கிழக்கு ஆசிய நாடுகளான கம்போடியா- தாய்லாந்து போர் பதற்றமும் போர்ச் சூழலும் மீண்டும் ஒரு போருக்கான கதவைத் திறந்துள்ளதா என்ற கேள்வியை எல்லோர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
Preah Vihear Temple
இப்போரின் அடிப்படை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ப்ரீவிஹனர் ஆலயம் தொடர்பில் எழுந்த நீண்ட கால முரண்பாட்டு பிரதிமை என்று அறியப்படுகிறது.
இரு நாடுகளும் 817 கி.மீ. எல்லையை பகிர்ந்து கொள்வதோடு இரு நாட்டின் பொருளாதாரமும் சுற்றுலாத் துறையில் அதிகம் தங்கியிருப்பதோடு இராணுவ ரீதியில் கம்போடியா பலவீனமான நிலையில் தாய்லாந்தோடு ஒப்பிடும்போது காணப்படுகிறது.
இப்பிராந்தியம் பொருளாதார ரீதியிலும் சமூகக் கட்டமைப்பு ரீதியிலும் வலிமையான ஒன்றாகவே விளங்கிவருகிறது.
ஆனால் தற்போதைய போர்ச் சூழலானது பிரான்ஸ்சின் காலனித்துவக் காலப்பகுதியிலிருந்து அவ்வப்போது எழுந்ததாகவே கருதப்படுகிறது. இப்போருக்கு பின்னால் இருக்கக்கூடிய பிரதான அரசியலை தேடுவதாகவே இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.
1962 ஆம் ஆண்டு இரு நாட்டுக்கும் சொந்தமான என மோதிக்கொள்ளுகின்ற ப்ரீவிஹனர் ஆலயம் தொடர்பில் சர்வதேச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது.
இத் தீர்ப்பின் பிரகாரம் ஆலயம் கம்போடியாவுக்கு சொந்தமானது என்றும் குறிப்பிட்டதோடு, 2013ஆம் ஆண்டு ஆலயத்தை சூழவிருக்கும் நிலப்பகுதியும் கம்போடியாவுக்கு உரித்துடையது என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
2008ஆம் ஆண்டு யுனெஸ்கோ இப்பகுதியை மரபுரிமைச் சொத்தாகவும் 2011ஆம் ஆண்டு கலாசார மையமாகவும் அங்கீகரித்திருந்தது.
ஆனால் இத்தகைய தீர்ப்புகள் எதனையும் தாய்லாந்து அங்கீகரிக்க மறுத்ததுடன் அத்தகைய யுனெஸ்கோவின் தீர்மானங்களையும் நிராகரித்தது.
இப்பகுதி சர்ச்சை மிக்க பகுதியாகவே கடந்த வரலாற்றின் காலப்பகுதி முழுவதும் அமைந்திருக்கின்றது.
இது இரு நாட்டினதும் முரண்பாட்டின் அடிப்படையாக அமைந்திருந்தது. ஆனால் சமீபத்தில்; தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கும் கம்போடியா அரசாங்க உயர் அதிகாரி ஒருவருக்கும் இடையில் நிகழ்ந்த தொலைபேசி உரையாடல் வெளியாகியமை இரு நாட்டுக்குமான சர்ச்சையை தொடங்கியதாகவே தெரிகிறது.
Paetongtarn Shinawatra
இதனால் தாய்லாந்து பிரதமர் Paetongtarn Shinawatra தனது பதவியில் சர்ச்சைக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது. அதனாலேயே தாய்லாந்து தரப்பு போரைத் தொடக்கியது என்று கம்போடிய அரசாங்கம் குற்றச்சாட்டை முன்வைக்கிறது.
மறுபக்கத்தில் அவ்வப்போது இரு நாட்டுக்குமான துப்பாக்கிச் சூடுகளும் நிலக்கண்ணி வெடிப்புகளும் எல்லையோரங்களில் நிகழ்ந்து வருகிறன. இதன் உச்சமான வளர்ச்சி நிலையே தற்போதைய போர் சூழ்நிலையாகும்.
தாய்லாந்து, கம்போடிய போருக்கான நீட்சி பற்றிய உரையாடல்கள் அதிகம் பேசப்படுகிறது. அதற்கான அடிப்படையை இப்போது முடிவுக்கு கொண்டுவர, மலேசியா பிரதமரும் தற்போது ஆசியான் அமைப்பின் தலைமையை பொறுப்பேற்று இருக்கின்றவருமான அன்வர் இப்ராஹிம் முன்னெடுத்துள்ளார்.
இரு தரப்பும் போர் நிறுத்த உடன்பாட்டுக்கான வாய்ப்புகளை அதிகம் உரையாடிவருகின்றன. குறிப்பாக கம்போடியா பிரதமர் இருநாட்டுக்குமான ஆயுத மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான திறவுகோல் தாய்லாந்து தரப்பினரின் உண்மையான போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொள்வதனால் மட்டுமே சாத்தியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவின் போர் நிறுத்தத்துக்கான முன்மொழிவை கொள்கைய அளவில் ஒப்புக்கொண்டிருப்பதாகவும் திட்டத்தை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ள தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சர் Hun Manet போர் நிறுத்த உடன்படிக்கை கள நிலவரத்தின் பொருத்தப்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு கம்போடியாவின் தாக்குதல்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளை நோக்கி அமைந்துள்ளதாகவும், இது ஒரு நம்பிக்கையான, ஆரோக்கியமான நடவடிக்கையாக அமையவில்லை என்றும் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
24.07.2025 இல் நிகழ்ந்த தாக்குதலுக்கான முனைப்பாக கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து தாய்லாந்து வீரர்கள் ஐவர் நிலக்கண்ணி வெடியில் காயத்துக்கு உள்ளாகியதையும் தொடர்ந்து இரு நாடுகளும் தூதுவர்களையும், தூதரக பணியாளர்களையும் வெளியேற்றுகின்ற செய்முறையை மேற்கொள்ளத் தொடங்கினர்.
இதனடிப்படையில் தாக்குதல் தொடங்கப்பட்டது. இதுவரையில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் எல்லையோரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டிருப்பதாகவும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
மேலும் கம்போடியா எல்லையோர கிராமங்களில் இராணுவ சட்டத்தை பிறப்பித்ததோடு 8 மாவட்டங்களில் அத்தகைய சட்டம் உடனடியாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக கம்போடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
இத் தாக்குதலில் தாய்லாந்தில் 15 பொது மக்கள் கொல்லப்பட்டனர். தாய்லாந்து ஆளில்லாத விமானங்களை கொண்டு தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளதாகவும் பதிலுக்கு கம்போடியா ஆளில்லாத விமானங்களை தாய்லாந்தின் எல்லையோரங்களில் தாக்குதலையும் கம்போடிய இராணுவ இலக்குகள் மீது நிகழ்த்தியுள்ளது. கம்போடியா தரப்பிலும் பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இருதரப்புக்குமிடையில் இதுவொரு முழு நீளப் போராக மாறுவதற்கான வாய்ப்பை கொண்டிருப்பதாகவே தெரிய வருகிறது. இதற்கு வலுவான காரணம், இரு நாடுகளுக்கும் பின்புலத்தில் சர்வதேச வல்லரசுகள் அணிவகுத்திருப்பது முக்கியமானதாகும்.
குறிப்பாக, தாய்லாந்து நீண்ட இராணுவ கட்டமைப்பையும் அமெரிக்காவுடனான நீண்ட இராணுவ உறவையும் கொண்டிருக்கிறது.
ஒருவகையில் சர்வதேச ஆய்வாளர்கள் குறிப்பிடுவது போல் அங்கத்துவம் பெறாத நேட்டோ கூட்டாளி என தாய்லாந்து அழைக்கப்படுறது.
1982ஆம் ஆண்டிலிருந்து தாய்லாந்தும் அமெரிக்காவும் கூட்டு இராணுவ பயிற்சியை நிகழ்த்தி வருகின்றன.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் 900க்கு மேற்பட்ட விமானங்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட கடற்படைக் கப்பல்களும் தாய்லாந்துக்கு வருகை தருவதைக் காணமுடிகிறது.
இது இரு நாட்டுக்குமான பலமான இராணுவ உறவை அடையாளப்படுத்துகிறது. அதேநேரம் சீனாவுடனான உறவையும் தாய்லாந்து முற்றாக நிராகரித்து விடவில்லை. மேலும், இஸ்ரேல், இத்தாலி, ரஷ்யா, சுவீடன் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் இராணுவ தொழில்நுட்பத்தை பெற்று உள்நாட்டில் ஆயுத உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது.
மறுபக்கத்தில் கம்போடியா சீனாவுடனான இராணுவ உறவை பலமாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1993 ஆம் ஆண்டுகளுக்கு பின்னரே கம்போடியா பலமான இராணுவ கட்டமைப்பை உருவாக்க தொடங்குகிறது. கம்போடியா, சீனா, வியட்நாம் உடன் சர்வதேச பாதுகாப்பு இணைப்பினை கொண்டிருக்கின்றது.
அதேவேளை இராணுவ ரீதியான ஆயுத தளபாடங்களை பெறுவதில் ரஷ்யாவுடன் தொடர்பைக் கொண்டிருந்தாலும் சீனாவே கம்போடியாவின் முக்கியமான ஆயுத விநியோக நாடாக விளங்குகிறது.
அது மட்டுமின்றி தாய்லாந்து குடாவின் எல்லையில் சீனா கம்போடியாவோடு இணைந்து கடற்படை தளம் ஒன்றை நிறுவியுள்ளது. இரு நாடுகளும் இராணுவ பயிற்சிகளை ஒவ்வொரு ஆண்டும் நிகழ்த்தி வருவதோடு கடந்த மே 2025 இல் ஆறாவது கடற்படை பயிற்சியை நிறைவு செய்துள்ளது.
தாய்லாந்து இந்து பசுபிக் கடற்படை அணியுடன் சேர்ந்து செயற்படுகின்ற அதேவேளை இப்பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்கின்ற முக்கிய நாடாகவும் அதன் நட்பு நாடான அமெரிக்காவுடன் இணைந்து செயற்படும் நாடாகவும் காணப்படுகிறது.
தென் சீனக்கடலைப் பொறுத்து சீனாவுடன் மோதலை கொண்டிருக்கும் நாடாகவும் விளங்குகிறது. ஏற்கனவே பதிலாள் போரை (Proxy war) நிகழ்த்தி வரும் அமெரிக்காவுக்கு மீண்டும் ஒரு களத்தை தென்கிழக்காசிய நாடுகள் ஏற்படுத்த முனைவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவே தெரிகிறது.
அனைத்து போர்களிலும் அதாவது ரஷ்யா, உக்ரையின் போர், இஸ்ரேல் ஹமாஸ் போர், இஸ்ரேல்- சிரியாப் போர் போன்ற அனைத்திலும் அமெரிக்கா பதிலாள் போரை அல்லது பதிலி போரை நிகழ்த்தி வருகின்றது.
அத்தகைய பதிலாள் தாக்குதலை சீனாவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பிரயோகித்து வருகிறது.
தாய்வானில் ஒரு போரை திறக்க முடியாத நிலையில் இருக்கும் அமெரிக்காவுக்கு, தாய்லாந்து, கம்போடியா போர் ஒரு வாய்ப்பான களத்தை திறந்து விடுவதற்கான சூழலை அதிகம் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
ஆனால் மறுபக்கத்தை ஆசியான் அமைப்பு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் தோன்றி மிகப் பலமான பொருளாதார சமூக கட்டமைப்பாக இயங்கி வருகிறது.
எனவே அதனை எதிர்கொள்வதென்பதும் அதன் இருப்பை பாதுகாப்பது என்பதும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரதான உத்தியாக உள்ளமை. தவிர்க்க முடியாதது போர் நிறுத்த உடன்பாட்டை அமுல்படுத்துவதில் ஆசியான் அமைப்பின் அழுத்தத்திற்கும், இரு நாடுகளும் உட்பட வேண்டிய நெருக்கடி காணப்படுகிறது.
அதனால் 1962-−2025 வரை நாடுகளுக்கிடையிலான மோதல்களை தவிர்த்து வந்த ஆசியான் அமைப்பு இப்போரையும் விரைவில் முடிவுக்கு கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது எவ்வாறாக அமைந்தாலும் அமெரிக்க, சீன நலன்களுக்குள்ளால், இப்போர் கட்டமைக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்ற வியாக்கியானம், ஒருபுறம் அமைய, மறுபுறத்தில் ஆசியான் அமைப்பு சார்ந்து எடுத்திருக்கும் போர்நிறுத்த முயற்சி வாய்ப்பாக அமையக் கூடியதாக உள்ளது.
பனிப்போர் காலம் போல் சமகாலம் இல்லாவிட்டாலும், சீனா என்கின்ற எழுச்சிமிக்க சூழலை மேற்குலகம் எதிர்கொள்ளுகின்ற இடத்தில் ஆசியான் அமைப்பு மிக முக்கியமாக, மேற்குலகத்தின் நலன்களை தக்கவைப்பதற்காக தேவைப்படும் இப்போர்நிறுத்த முயற்சியை தீர்மானிக்க கூடியது.
எனவே தாய்லாந்து – கம்போடியாவுக்கிடையிலான போர் நிலைத்திருக்கக்கூடிய சூழலை அல்லது நீடிக்கக் கூடிய சூழலை கொண்டிருக்கின்ற அதேவே ளை போர்நிறுத்த உடன்படிக்கைக்கான வாய்ப்புகளையும் அது அதிகம் பிரதிபலிக்க முயலுகிறது.
உலகம் பொருளாதார நெருக்கடிக்குள்ளால், போருக்கான முனைப்புகள் அமைய, மறுபக்கத்தில் அத்தகைய ஏகாதிபத்தியங்களில் பொருளாதார நலன்களுக்குள்ள போர்களும் மோதல்களும் மட்டுப்படுத்தப்படுகின்ற அல்லது சமரசம் செய்யப்படுகின்ற சூழலையும், சமகால உலக அரசியல், இராணுவ, பொருளாதாரப் போக்கு கொண்டிருக்கின்றது.