இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வந்து சென்றிருக்கிறார் பிரதமர் மோடி. சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்று, சிறப்பு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த அந்த விழாவில், “ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் பாரதத்தின் அடையாளங்களாகத் திகழ்ந்தவர்கள்.
அவர்களுக்கு, தமிழகத்தில் சிலை வைப்போம்” என முழங்கியுமிருக்கிறார். சோழப் பேரரசர்களின் பெருமைகள் குறித்துப் பிரதமர் மோடி பேசியிருப்பது வரவேற்பைப் பெற்றிருந்தாலும்,
அதன் பின்னால் ஒளிந்திருக்கும் அரசியலும் பேசுபொருளாகியிருக்கிறது.
அந்த அரசியல் சூடு ஒருபக்கம் கனன்றுகொண்டிருக்கும் நிலையில், பிரதமருக்கு தி.மு.க விரித்த சிவப்புக் கம்பளமும், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைப் பிரதமர் ஓரங்கட்டிவைத்த விவகாரமும்தான் பிரதமர் மோடியின் விசிட்டில் புயலைக் கிளப்பியிருக்கின்றன!
“அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியின் தமிழகத் தலைவரே எடப்பாடி பழனிசாமிதான். ஆனால் அவரை, போகிற போக்கில் ஏர்போர்ட்டில் பார்த்ததோடு அனுப்பிவிட்டார் மோடி.
மூன்று நிமிடங்கள்கூட இவர்களின் சந்திப்பு நடக்கவில்லை. எடப்பாடி தொடர்பாக மத்திய உளவுத்துறையிலிருந்து சென்ற தகவலும், எடப்பாடியின் சமீபத்திய செயல்பாடுகளும்தான் பிரதமரின் பாராமுகத்துக்குக் காரணம்.
அதேவேளையில், பிரதமருக்கு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்றிருக்கிறது தி.மு.க. ‘பிரதமரின் வருகை, தமிழகத்துக்குக் கிடைத்த பெருமை’ என்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு.
ஒருபக்கம், ‘கீழடி ஆய்வறிக்கையை ஏன் வெளியிடவில்லை?’ என வீராவேசம் காட்டிக்கொண்டு, மறுபக்கம் ‘பிரதமரைப்போல உண்டா…’ எனத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடு கிறார்கள்.
முரண்பாடுகளின் மொத்த உருவமாகிவிட்டது தி.மு.க” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பிரதமரின் இரண்டு நாள் தமிழகப் பயணத்தில், முதல் ஸ்டாப் தூத்துக்குடிதான். விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தைத் திறந்துவைக்கவும், பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும் ஜூலை 26-ம் தேதி இரவு தூத்துக்குடிக்கு வந்தார் பிரதமர் மோடி.
மாலத்தீவிலிருந்து அவர் கிளம்புவதற்கு முன்பாகவே, அவருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துவிட்டது தி.மு.க.
கடந்த ஜூலை 25-ம் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு,
“ராஜேந்திர சோழனின் கடல் கடந்த படையெடுப்பின் ஆயிரமாவது ஆண்டைக் குறிக்கக்கூடிய விழாவில், மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தமிழகத்துக்கு வரவிருக்கிறார்கள். அதை தமிழகத்துக்குக் கிடைக்கக்கூடிய பெருமையாகப் பார்க்கிறேன்” என்று முதல் சலாமை அழுத்தமாகப் போட்டார்.
அமைச்சரின் இந்தப் புகழாரம், கூட்டணிக்குள் பட்டாசைக் கொளுத்திவிட்டது.
டேமேஜ் கன்ட்ரோல் செய்வதற்காக, பிரதமர் வருகைக்குச் சில மணி நேரத்துக்கு முன்பாக, கீழடித் தொன்மையை வெளிப்படுத்தும் ஒரு வீடியோவை வெளியிட்டது தி.மு.க.
‘வணக்கம். நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன்…’ என்றெல்லாம் உருட்டிப் பார்த்தார்கள். ஆனாலும், கூட்டணிக் கட்சிகளிடம் ஏற்பட்ட தகிப்பு அடங்கவில்லை.
நம்மிடம் பேசிய தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் சீனியர்கள் சிலர், “எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சி ஆனவுடன் ஒரு நிலைப்பாடு என தி.மு.க தலைகீழாக மாறுவதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.
2021-ல் ஆட்சியைப் பிடிப்பதற்கு முன்பாக, பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும்போதெல்லாம் #GOBACKMODI என்ற ஹேஷ்டேக்கை தொடர்ச்சியாக டிரெண்ட் செய்தது தி.மு.க. ஏப்ரல் 2018-ல் அவர் தமிழகத்துக்கு வந்தபோது கறுப்பு பலூன்களைப் பறக்கவிட்டு, அவரின் பயண ரூட்டையே மாற்றினார்கள்.
பா.ஜ.க எதிர்ப்பில் அவர்கள் உறுதியாக இருந்ததால்தான், தேர்தல்களிலும் வெற்றியைப் பெற முடிந்தது.
அந்த உறுதியில், இப்போது சறுக்கலையும் சமரசத்தையுமே பார்க்கிறோம். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் தமிழகத்துக்கு வரும்போதெல்லாம், தி.மு.க தலைமைத் தரப்பிலிருந்து எந்த எதிர்ப்புமே வருவதில்லை.
அந்தக் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளும் அமைதியாக்கப்படுகிறார்கள். எதிர்ப்பு காட்டும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும்கூட, முன்னெச்சரிக்கையாகக் கைதுசெய்யப்பட்டு மண்டபங்களில் அடைக்கப்படுகிறார்கள்.
எதிர்ப்பு காட்டாவிட்டாலும் பரவாயில்லை. அநியாயத்துக்கு சலாம் போடாமலாவது இருக்கலாமே.
‘பிரதமரின் வருகை தமிழகத்துக்கே பெருமை’ என்கிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. எந்த விதத்தில் பெருமை… சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ், 2024 – 2025 நிதியாண்டுக்கு ஒரு ரூபாய்கூட தமிழகத்துக்குத் தரவில்லை ஒன்றிய அரசு.
இரும்பு நாகரிகத்தில் தமிழ்நாடுதான் முன்னோடி என்பதை நிரூபிக்கும்விதமான கீழடி அகழ்வாராய்ச்சி ஆய்வறிக்கையை, ஒன்றிய அரசிடம் ஒப்படைத்து இரண்டு வருடங்களாகிவிட்டன.
இதுவரையில், அந்த ஆய்வறிக்கையை வெளியிடவில்லை. தொகுதி மறுசீரமைப்பில் நமது உரிமையையெல்லாம் பறிக்கிறது ஒன்றிய அரசு. இதெல்லாம்தான் பெருமையா… ஒருவேளை, தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், இப்படித்தான் பெருமை பேசியிருப்பார்களா…
கூட்டணிக் கட்சியான எங்களையும் இணைத்துக்கொண்டு கறுப்புக்கொடியை ஏந்தியிருப்பார்கள்.
தூத்துக்குடியில், பிரதமருடன் அமைச்சரும், தி.மு.க ஐடி விங் மாநிலச் செயலாளருமான டி.ஆர்.பி.ராஜா ஒரே மேடையில் இருந்தார் என்பதற்காக, பிரதமருக்கு எதிராக எதையும் பதிவுசெய்யவில்லை தி.மு.க ஐடி விங். மொத்தமாக ‘கப்சிப்’ ஆகிவிட்டனர்.
“மோடிக்குப் பின்னால் போவோம்…” புதிய முழக்கமா? மேற்கு வங்கத்தில், பா.ஜ.க எதிர்ப்பில் மிகக் கடுமையாகவே உறுதியுடன் இருக்கிறார் அந்த மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி. பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில், அரசு சார்பில் அதிகாரிகளைக்கூடக் கலந்துகொள்ள வைப்பதில்லை.
அந்த அளவுக்கு எதிர்ப்பைக் காட்டவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளுக்காவது போராட அனுமதி அளித்திருக்கலாம்.
ஆனால், பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடியில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸார் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.
‘வழக்கமாக எங்களைத் திட்டி ஏதாச்சும் டிரெண்ட் செய்வீங்களே… இன்னைக்கு ஏதும் பண்ணலையா?’ என்று தூத்துக்குடியில் வைத்து பா.ஜ.க சீனியர் ஒருவர் கேட்கும் அளவுக்கு இருக்கிறது நிலைமை.
திருச்சியில் பிரதமர் ரோடு ஷோ நடத்தியபோது, கிட்டத்தட்ட எட்டு கி.மீட்டருக்கு பொதுமக்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
அதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க., அ.தி.மு.க செய்தபோது மறைமுகமாக ஆதரவளித்தது, அங்கிருக்கும் சீனியர் தி.மு.க நிர்வாகிதான். ‘கோ பேக் மோடி’ என்று முழங்கியவர்கள், ‘மோடிக்குப் பின்னால் போவோம்’ எனத் தற்போது ரூட்டை மாற்றிவிட்டதுபோலத் தெரிகிறது.
இப்போது அல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இதே மனநிலையில்தான் இருக்கிறது தி.மு.க. ராஜேந்திர சோழனுக்காக மோடி வெளியிட்ட நாணயத்தில், ஒரு தமிழ் எழுத்துக்கூட இல்லை.
‘தமிழ் மன்னருக்குத் தமிழ் மண்ணிலேயே அவமானமா..?’ என தி.மு.க கொதித்திருக்க வேண்டும்.
ஆனால், கொதிப்புக்கு பதிலாக கொஞ்சல்தான் நடக்கிறது. இவர்கள் எடுக்கும் சார்பு நிலை வெளிப்பட்டு விமர்சனம் எழும்போதெல்லாம்… கவர்னர் ஏதாவது பேச… பதிலுக்குத் தமிழ் மொழி, திராவிட அரசியல், பா.ஜ.க எதிர்ப்பு, மாநில நலன் என வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்கள்.
இவர்கள் அரசியல் செய்ய, ஆளுநரும் நன்றாகக் களம் அமைத்துக் கொடுப்பார். எல்லாம் பேசிவிட்டு அவருடன் தவறாமல் போய் தேநீரும் குடிப்பார்கள்.
‘பா.ஜ.க எதிர்ப்பு’ என்கிற அஸ்திவாரத்தில் தி.மு.க ஆட்டம் காணத் தொடங்கினால், அது அவர்களுக்குப் பேராபத்து.
கூட்டணிக்கும் ஆபத்து” என்றார்கள். பிரதமரின் விசிட்டால், தி.மு.க கூட்டணிக்குள் எந்த அளவுக்குக் களேபரங்கள் வெடித்திருக்கின்றனவோ, அதற்குச் சற்றும் குறையாமல் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணிக்குள்ளும் சச்சரவுகள் வெடித்திருக்கின்றன.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவரும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரைச் சந்திப்பதற்காகத் தன்னுடைய பயணத் திட்டத்தையே மாற்றினார்.
ராமநாதபுரத்தில் பாம்பன் ரயில் பாலத்தைத் திறந்துவைப்பதற்காக, கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பிரதமர் மோடி வந்தபோது, அவரை எடப்பாடி சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அந்தச் சந்திப்பு நிகழவில்லை. கடைசியாக, ஜூலை 2023-ல் டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில்தான் பிரதமரைச் சந்தித்திருந்தார் எடப்பாடி.
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாகப் பிரதமரை எடப்பாடி சந்திப்பதால், தமிழக அரசியல் களம் பரபரப்பானது.
குழைந்து நின்ற எடப்பாடி… கடுப்பான டெல்லி
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் கலந்துகொண்டது மத்திய கலாசாரத்துறை ஏற்பாடு செய்திருந்த விழா என்பதால், அங்கு அரசியல் சந்திப்பு எதற்கும் பிரதமரின் நேரம் ஒதுக்கப்படவில்லை.
திருச்சியில்தான், எடப்பாடிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. அதற்காக, ஜூலை 26-ம் தேதி இரவே திருச்சிக்கு வந்துவிட்டார் எடப்பாடி.
ஆர்.காமராஜ், சி.விஜயபாஸ்கர், திருச்சி குமார், பரஞ்சோதி என சீனியர்கள் பலரும் தடபுடலாக எடப்பாடியை வரவேற்றார்கள்.
‘ஒரு மணி நேரத்துக்கு மேலாக நம்ம தலைவர் பிரதமர்கிட்ட பேசப்போறார். இரண்டு பேரும் ஒன்றாகத்தான் உணவருந்தப் போகிறார்கள்’ என்றெல்லாம் பேச்சுகள் கிளம்பின.
முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், எஸ்.பி.வேலுமணியை உடன் அழைத்துக்கொண்டு திருச்சி ஏர்போர்ட்டுக்குச் சென்றார் எடப்பாடி.
அனைவரும் சேர்ந்து பிரதமரை வரவேற்றார்கள். மூன்று கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி கொடுக்கவும், அதைப் பெற்றுக்கொண்டு அவர்களை உடனே அனுப்பிவிட்டார் பிரதமர். எடப்பாடி குழைந்து நின்று வரவேற்றபோதும்கூட, மோடியிடம் பெரிதாக எந்த பாசிட்டிவ் ரியாக்ஷனும் இல்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தமிழகத் தலைவர் எடப்பாடி பழனிசாமிதான். பா.ஜ.க தலைவர்களும் அதை அழுத்தமாகச் சொல்கிறார்கள்.
‘இந்தக் கூட்டணிக்கு நான்தான் தலைவர். நான்தான் முதலமைச்சர் வேட்பாளர்’ என எடப்பாடியுமே மீண்டும் மீண்டும் சொல்கிறார்.
‘அப்படிப்பட்ட தலைவருக்கு, மூன்று நிமிடங்களுக்கு மேல் பிரதமர் ஏன் நேரம் ஒதுக்கவில்லை?’ என்பதுதான் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
இத்தனைக்கும், அன்றிரவு 10:30 மணிக்கு திருச்சிக்கு வந்த பிரதமர், மேரியாட் ஹோட்டலில்தான் தங்கினார்.
காலை 11 மணிக்குத்தான் கங்கைகொண்ட சோழபுரத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். கிட்டத்தட்ட அரை நாளுக்கு மேலாக திருச்சியில் பிரதமர் தங்கியிருந்தும்கூட, எடப்பாடிக்கு நேரம் ஒதுக்கவில்லை.
நம்மிடம் பேசிய பா.ஜ.க-வின் சீனியர் நிர்வாகிகள் சிலர், “எடப்பாடி பழனிசாமி மீதான நம்பிக்கை, டெல்லிக்குக் குறைந்துபோனதன் வெளிப்பாடுதான் இது.
கூட்டணி உருவான பிறகு, எடப்பாடியுடன் நேரடித் தொடர்பை உருவாக்கிக்கொண்டார் அமித் ஷா. அவருக்கு நம்பிக்கையான சிலர், எடப்பாடியுடன் தமிழக அரசியல் சூழல் குறித்தும், அடுத்து செய்ய வேண்டியவை குறித்தும் அவ்வப்போது விவாதித் தனர்.
தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு வரை, அந்த நபர்களோடு தொடர்பிலிருந்தார் எடப்பாடி பழனிசாமி.
கடந்த ஒரு மாதமாக, அந்தத் தொடர்பு அறுந்துபோய்விட்டது. ‘சுற்றுப்பயணத்தில் பா.ஜ.க நிர்வாகிகளின் பெயரை எடப்பாடி சொல்லவில்லை’ என்ற தகவல் கிடைத்ததும், அதை அவரிடம் எடுத்துச் சொல்ல முயன்றது அமித் ஷா அலுவலகம்.
ஆனால், தொடர்பு எல்லைக்குள் எடப்பாடி வரவேயில்லை. சில முக்கிய விஷயங்களுக்காகப் பேச முற்பட்டபோதும் பேசவில்லை.
கூட்டணியை வலுப்படுத்த, இரண்டு கட்சிகள் தரப்பிலும் குழுவை நியமிக்க முடிவானது. அதையும் எடப்பாடி செய்யவில்லை.அதிலேயே கடுப்பாகிவிட்டது டெல்லி.
த.வெ.க-வுடன் கூட்டணி..? டெல்லி வைத்த செக்
எடப்பாடியின் சுற்றுப்பயணத்தை மத்திய உளவுத்துறையினரும் கண்காணிக்கிறார்கள். அவர்கள் கொடுத்திருந்த ரிப்போர்ட்டில், ‘இரட்டை இலைச் சின்னம்தான் அ.தி.மு.க-வுக்கு அடிப்படை. அதையே தனது சுற்றுப்பயணத்தில் எடப்பாடி முன்னிலைப்படுத்துவதில்லை.
தன்னை மட்டும் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்கிறார்’ எனக் கூறியிருக்கிறார்கள். தவிர, ‘தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்டால், அதனால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகக்கூட, இரட்டை இலையை முன்னிலைப்படுத்தாமல் எடப்பாடி தவிர்த்திருக்கலாம்.
த.வெ.க-வுடன் அணி சேர்வதற்கான முயற்சியை அவர் கைவிடவில்லை’ எனவும் ரிப்போர்ட் அளித்திருக்கிறார்கள்.
கடந்த ஒரு மாதமாக எடப்பாடி தொடர்பு எல்லைக்கு வெளியில் போனதையும், உளவுத்துறை ரிப்போர்ட் இப்படி வந்திருப்பதையும் பார்த்துவிட்டு டென்ஷனின் உச்சத்துக்கே போய்விட்டது டெல்லி.
அதன் எதிரொலியாகத்தான், அ.தி.மு.க உள்விவகாரம் தொடர்பான வழக்கில், ‘எங்களுக்கு பீகார் தேர்தல் தலைக்கு மேல் இருக்கிறது. மனுதாரர்களிடம் தீர விசாரித்துவிட்டுத்தான் முடிவெடுக்க முடியும்.
ஆனாலும், விரைந்து விசாரிக்கிறோம்’ எனக் கூறியிருக்கிறது தேர்தல் ஆணையம். ஒருவகையில், எடப்பாடிக்கு டெல்லி வைத்த ‘செக்’தான் அது.
எல்லோரையும் வரிசையில் நிற்கவைப்பதைப்போல, எடப்பாடியையும் நிற்கவைத்து பிரதமர் அனுப்பியதற்கான காரணமும், ‘அவர் அணி மாற வாய்ப்பிருக்கிறது’ என்கிற சந்தேகம்தான்.
இனியும் எடப்பாடி தப்பான சிக்னலையே டெல்லிக்கு அனுப்பிக்கொண்டிருந்தால், அவர் பாடு திண்டாட்டம்தான்” என்றனர்.
தன்னை அ.தி.மு.க தலைவர்கள் வரவேற்ற புகைப்படங்களை தன்னுடைய ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்ட பிரதமர், எடப்பாடியுடனான புகைப்படத்தையும், வேலுமணியுடனான புகைப்படத்தையும் சேர்த்தே பதிவிட்டிருக்கிறார்.
இருவருக்கும் சம அளவில் முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார். அதுவே, ஒரு சிக்னல்தான் என்கிறது கமலாலய வட்டாரம்.
தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க என எல்லாக் கட்சிகளிலும், கூட்டணியில் ஒருவிதச் சலசலப்பை உருவாக்கிவிட்டது, பிரதமர் மோடியின் ‘அரசியல்’ விசிட். பலத்த சத்தங்களையும் சந்தேகங்களையும்கூட உருவாக்கியிருக்கிறது. இந்தச் சலசலப்புகள், தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் வீரியமாகலாம்!