சுதந்திர இலங்கையில் எப்போதுமே ஆளும்தரப்பாக இருந்த பௌத்த – சிங்கள அதிகார வர்க்கம் இலங்கைச் சிறுபான்மையினச் சமூகமான தமிழர்களின் உரிமைகள் அவர்களுக்கு வழங்கப்படுவதை மூர்க்கமாக எதிர்த்தே வந்துள்ளது.

இதனை எதிர்த்து இலங்கைத் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் மேற்கொண்ட அரசியல் சீர்திருத்தக் கோரிக்கைகளும் அஹிம்சைப் போராட்ட வழிமுறைகளும் தோல்வியுற்றதாலேயே அல்லது எதிர்பார்த்த விளைவுகளைத் தராதபடியினாலேயே விரத்தியுற்ற தமிழ் இளைஞர்கள் 1977 இல் நிகழ்ந்த நாடளாவிய தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளபெற்ற இன வன்முறைகளைத் தொடர்ந்து பௌத்த சிங்கள மேலாதிக்க ஒடுக்கு முறையிலிருந்து மீளுவதற்குத் தனிநாடு ஒன்றைத் தோற்றுவிப்பதை இலக்காகக் கொண்டு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இதற்கு 1976 இல் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் வட்டு கோட்டைத் தீர்மானமும் வழிவகுத்தது.

1977 க்கு முன்னர் 1956, 1958 களில் தமிழர்கள் மீதான சிங்களவர்களின் வன்முறைகள் நிகழ்ந்திருந்தாலும் ஆயுதப் போராட்டத்திற்கான முனைப்பு தமிழ் இளைஞர்களிடையே எழுந்திருக்கவில்லை.

காரணம் ஏதோ ஒரு வகையில் 1977 வரை மிதவாதத் தமிழ் அரசியல் தலைமைகளின் மீது தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

அந்த நம்பிக்கைகள் தகர்ந்து போனமையால் மிதவாதத் தமிழ் அரசியல் தலைமைகள் மீது விரக்தியுற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு நிறுவனமயப்பெற்ற ஆயுத நடவடிக்கைகளை 1977 இனக் கலவரத்தைத் தொடர்ந்தே ஆரம்பித்தார்கள்.

அ. அமிர்தலிங்கம்

தமிழ் இளைஞர்களின் ஆயுத நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் கூட 1977 இலிருந்து 1983 வரை அ. அமிர்தலிங்கம் தலைமையிலான முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி மேற்கொண்டிருந்த அரசியல் நடவடிக்கைகள் எதுவும் தமிழர்கள் எதிர் நோக்கிய உரிமைப் பிரச்சனைகள் எதனையும் தீர்த்து வைக்கவில்லை. பதிலாக 1983இல் மீண்டும் தமிழர்கள் மீதான இனக் கலவரமே விளைவாகியது.

1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இனக்கலவரங்களும் அப்போது ஆட்சியில் இருந்த ஜே ஆர் ஜெயவர்த்தனா அரசுத் தலைவராகவிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அனுசரணையுடன்தான் நடந்தேறின.

1949 இல் இருந்து தமிழரசுக் கட்சி மேற்கொண்ட அகிம்சைப் போராட்ட நடவடிக்கைகளினதும்-1977 மற்றும் 1983 இனக்கலவரங்களினால் பாதிப்புற்ற இலங்கைத் தமிழர்கள் மீதான இந்தியாவின் தார்மீகரீதியான அனுதாபத்துடனான அக்கறையினாலும்-தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் இலங்கை அரசின் மீது ஏற்படுத்திய இராணுவ அழுத்தத்தினதும்-அதுபோலவே தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலில் ஏற்படுத்திய தாக்கங்களினதும்-ஜே ஆர் அரசாங்கம் கடைப்பிடித்த அமெரிக்க ஏகாதிபத்தியம் சார்ந்த அரசியல் பொருளாதார மற்றும் இராணுவச் செயற்பாடுகளால் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்பட்ட சூழ்நிலை தோற்றுவித்த களநிலையினதும் ஒட்டுமொத்த விளைவுதான் இலங்கைத் தமிழர் பிரச்சனையில் 1983இல் ஏற்பட்ட இந்தியாவின் நேரடித் தலையீடும் அதன் இறுதி விளைவான 1987 ஜூலை 29 இல் கொழும்பில் வைத்து இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தனாவுக்கும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்குமிடையில் கைச்சாத்தான ‘இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தம்’ ஆகும்.

இலங்கைத் தமிழர்களுடைய விடுதலைப் போராட்டப் பயணத்தில் 1987இல் ஏற்படுத்தப்பெற்ற இந்திய- இலங்கை சமாதான ஒப்பந்தம் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். முக்கியமான அடைவும் ஆகும்.

இந்த ஒப்பந்தம் ஜே ஆர் ஜெயவர்த்தன மனம்விரும்பிச் செய்ததொன்றல்ல. இந்தியாவின் அழுத்தமே இதற்குக் காரணம்.

ஆனால், இந்த ஒப்பந்தத்தினால் விளைந்த-விளையக்கூடிய நன்மைகளை இதன் பிரதான பயனாளியான இலங்கைத் தமிழர் அடைந்துவிடமுடியாதொரு சூழ்நிலையைத் தமிழ் மக்களுக்காகப் போராடுவதாகக் கூறிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமே உண்டாக்கியது.

இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துப் போகாமல் அதனை எதிர்த்ததும்-இந்த ஒப்பந்தத்தின் விளைவினால் உருவாகிய வடக்கு கிழக்கு மாகாணங்கள் (தற்காலிகமாக) இணைந்த வடகிழக்கு மாகாண அரச நிர்வாகத்தைப் பிரபாகரன், ஜே ஆர் க்குப் பின்வந்த அப்போதைய இலங்கை ஜனாதிபதி பிரேமதாசவுடன் கூட்டுச் சேர்ந்து குழப்பியதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாபெரும் அரசியல் தவறு என்பதை வரலாறு இன்று எண்பித்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அப்போது இலங்கையில் பிரசன்னமாகியிருந்த இந்திய அமைதி காக்கும் படையுடன் மோதப்புறப்பட்டதும்கூட விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காத வெறும் சண்டித்தனமே தவிர வேறொன்றுமல்ல என்பதையும் வரலாறு எண்பித்திருக்கிறது.

மட்டுமல்லாமல், இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்துச் செயற்பட்ட முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அமிர்தலிங்கத்தை 1989 ஜூலை 13 அன்று புலிகளே கொழும்பில் வைத்துக் கொலை செய்தார்கள்.

இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தை அனுசரித்து முதலாவது மாகாணசபைத் தேர்தலிலும் பங்கு பற்றி இந்த ஒப்பந்தத்தின் அமுலாக்கலுக்குப் பிரதான பங்களிப்புச் செய்த முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிச் (ஈ பி ஆர் எல் எப்) செயலாளர் நாயகமான தோழர் பத்மநாபாவையும் அவருடன் இணைந்த 12 தோழர்களையும் 1990 ஜூன் 19ஆம் தேதி சென்னையில் வைத்துப் புலிகளே கொன்றார்கள்.

இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் பிதாமகரான முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை 21.05.1991 அன்று தமிழ்நாடு ஸ்ரீ பெரும்புதூரில் வைத்துத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மூலம் புலிகளே கொன்றார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இந்த வன்முறை நடவடிக்கைகளால் இலங்கைத் தமிழர்களுக்கிருந்த இந்திய ஆதரவுத் தளம் இழக்கப்பட்டது; சர்வதேச ரீதியான அனுதாபம் அற்றுப்போனது. தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக உலகத்திற்கு உருப்பெருக்கிக் காட்டுவதற்குப் பௌத்த-சிங்கள பேரினவாத இலங்கை அரசாங்கத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தியது.

அன்று 1987இல் 13 வது திருத்தத்தின் அமுலாக்கலைப் புலிகள் குழப்பாதுவிட்டிருந்தால் இன்று அதிகுறைந்தபட்சம் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைந்ததொரு மொழிவாரி மாகாண அலகு முழுமையான அதிகாரப் பகிர்வுடன் அமுலிலிருந்திருக்கும்.

இத்தகைய பின்னணியில் நோக்கும்போது இலங்கை-இந்திய சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 வது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் முழுமையாக அமுல் செய்யப்படாமைக்கும்-முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பேரழிவுக்கும்-இன்று இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள சமூக பொருளாதார-அரசியல் பின்னடைவுகளுக்கும் முழுக் காரணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தன்முனைப்போடு கூடிய தவறான அரசியல் மற்றும் இராணுவச் செயற்பாடுகளே ஆகும்.

இதற்குப்போய் இந்திய அரசாங்கத்தையும் இலங்கை அரசாங்கத்தையும் குற்றம் சாட்டுவதில் எந்த அரசியல் நேர்மையும் இல்லை.

13 வது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்யக்கூடிய சந்தர்ப்பம் திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க விஜயகுமாரணதுங்க காலத்தில் (1994 இல்) ஏற்பட்டது. அதனையும் தமிழீழ விடுதலைப் புலிகளே கெடுத்தார்கள்.

அப்போது இலங்கைத் தமிழர்களின் ஜனநாயக ரீதியான அரசியல் தலைமையை ஏற்றிருந்த மு. சிவசிதம்பரம் தலைமையிலான முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணியும் அதில் அக்கறையற்றிருந்தது.

2000களில் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வாக சந்திரிகா அரசாங்கம் முன் வைத்த, ‘இலங்கை ஆனது பிராந்தியங்களின் ஒன்றியம்’ எனும் அடிப்படையில அமைந்த சமஸ்டிக் குணாம்சம் கொண்ட அரசியல் தீர்ப்புப் பொதிக்குக்கூட அப்போதிருந்த இரா சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவுதரவில்லை. காரணம் அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளின் தாளத்திற்கே ஆடிக்கொண்டிருந்தது.

13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்ட ஆரம்பமான ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா காலத்திலிருந்து பின்னர் ஜனாதிபதிகளாகப் பதவி வகித்த ஆர் பிரேமதாச-டி பி விஜயதுங்க-சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க-மகிந்த ராஜபக்ஷ-மைத்திரிபால சிறிசேன-கோத்தபாய ராஜபக்ஷ-ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் காலங்கள் ஈறாக அதனை முழுமையாகவும் முறையாகவும் நிறைவேற்ற எந்த நடவடிக்கைகளும் இலங்கை அரசாங்கங்களினால் அரசியல் விருப்பத்துடன் மேற்கொள்ளப்படவேயில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தனிப்பட்ட ரீதியில் முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணிச் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கத்தையும் அரசியல் கட்சி என்று கருதும்போது தோழர் பத்மநாபா தலைமையிலான முன்னாள் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் தவிர வேறு எந்தத் தமிழ் அரசியல் கட்சிகளும் 13 வது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதில் அர்ப்பணிப்புடன் ஈடுபடவேயில்லை.

தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ பி டி பி) 13 வது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலை எப்போதுமே யாசித்து வந்திருந்தாலும் அதற்கான அரசியல் களச் செயற்பாடுகளை அதனால் முன்னெடுக்க முடியவில்லை.

2009 மே 18 அன்று யுத்தம் முடிவுற்று இன்றைய ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற 2024 வரை பதினைந்து வருடங்களாகத்தானும் 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்கான எந்தக் காத்திரமான-மனப்பூர்வமான-அர்ப்பணிப்புடனான செயற்பாடுகளையும் தமிழ்த் தேசியக் கட்சிகள் என்று தம்மைத்தாமே குறிசுட்டுக்கொண்டு தமிழர்களின் அரசியல் பொதுவெளியில் உலாவருகின்ற எந்தக் கட்சியும் (முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இன்றுள்ள தமிழரசுக் கட்சி உட்பட) மேற்கொள்ளவில்லை.

13 வது திருத்தத்தின் பிரதான பயனாளியான தமிழர் தரப்புக்கு அக்கறையில்லாதபோது அதனையும் மீறி அக்கறைகொள்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் என்ன ‘கரப்பன்’ வியாதியா?

ஆனால், இன்று திடீரென்று ஞானம் பிறந்ததுபோல் பெரும்பாலான ‘தமிழ்த் தேசியக் கட்சிகள்'(?) 13 வது திருத்தத்தின் முழுமையான அமுலாக்கல் குறித்துப் பேச முற்பட்டுள்ளன. இது உண்மையிலேயே கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் போன்றதாகும்.

எது எப்படியிருப்பினும் சந்திரிகா பண்டாரநாயக்க காலத்திற்குப் பிறகு 13 வது திருத்தத்தை முழுமையாக அமுல் செய்வதற்குச் சாதகமான சந்தர்ப்பமொன்று இப்போது தேசிய மக்கள் சக்தி (என் பி பி) அரசாங்க காலத்தில் தெரிகிறது.

இதனைச் சாதகமாகப் பயன்படுத்தவேண்டுமென்றால் முதலில் தமிழர்களுடைய அரசியல் சமூகம் உள்நாட்டிலும் சரி புலம் பெயர் நாடுகளிலும் சரி புலிசார் உளவியலிலிருந்து தம்மை முற்றாக விடுவித்துக் கொண்டு அறிவார்ந்த-யதார்த்தமான-மக்கள் நலன் சார்ந்த அரசியலின் பின் அணி திரண்டு அதிகாரப் பகிர்வுக்கானதொரு மக்கள் பேரியக்கமாக எழுச்சியுறவேண்டும்.

இத்தகையதொரு அதிகாரப் பகிர்வுக்கான மக்கள் பேரியக்கம் தற்போது ஆட்சியிலுள்ள அரசாங்கத்தை எதிர்ப்பதையும் எதிர்மறையான விமர்சனங்களை முன்வைப்பதையும் தவிர்த்து மாகாண சபைகள் முறைமையினை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இனியும் தாமதியாது எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்டுகின்ற நேர்மறையான களச் செயற்பாடுகளையே மேற்கொள்ளுவதும் அவசியம்.

— தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் —

Share.
Leave A Reply