திருகோணமலை அலஸ்வத்த பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட நபர் திருகோணமலை கிருஷ்ணா லேனைச் சேர்ந்த டி.எச். வினோத் (வயது 33) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விருந்து நடைபெற்ற ஹோட்டலில் ஏற்பட்ட கருத்து மோதலே கொலைக்கு வழிவகுத்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலை தொடர்பாக சந்தேக நபர்கள் அறுவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த இளைஞருக்கும் தாக்குதல் நடத்தியவர்களுக்கும் இடையிலான பழைய தகராறு மோதலுக்கு வழிவகுத்ததாக நம்பப்படுகிறது. கத்தியால் குத்தப்பட்டு தரையில் விழுந்த இறந்தவரின் தலையில் கல்லால் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.